நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Thursday

காதல் யாருக்கும் யார்மேலும் வரலாம் முறை தவறிய காதல்?

காதல் யாரிற்கு யார்மேல் எங்கே எப்பொழுது உண்டாகும் என்று சொல்லமுடியாது. இன்றைய இளைஞர்களினதும் யுவதிகளினதும் காதலையும் இணைதல்களையும் பிரிவுகளையும் கடுமையாக விமர்சிக்கும் மூத்த சந்ததியினரின் காதலும் காமமும் எப்படி இருக்கிறதென்பது விமர்சனத்திற்கு உட்படுத்தப்படுவது மிகவும் அரிதாகவே உள்ளது.

நடுத்தரவயதினரின் எல்லைமீறிய காதல்க
ள் எத்தனை குடும்பங்களிடையேயும் அவர்களின் குழந்தைகளிற்கும் எவ்வளவு பாரதூரமான சிக்கல்களை உண்டுபண்ணியிருக்கிறது.
எத்தனை ஆண்களும் எத்தனை பெண்களும் எதோ ஒரு காரணத்திற்காக பின்விழைவுகளின் தீவிரம் புரியாமல் தங்களின் தவறான காதலினால் தனக்கும் தன்னைச் சூழ உள்ளவர்களிற்கும் எவ்வளவு சிக்கல்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

காதலித்து மணமுடித்தவர்களிற்கும் கால ஓட்டத்தில் ஒருவர்மீது ஒருவருக்கு உள்ள காதல் அல்லது ஈடுபாடு குறைந்திருப்பதுபோன்ற தோற்றப்பாடு உண்டாகலாம். 
இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு ஆணோ பெண்ணோ  " உங்கள் உடை, அழகுணர்வு பிரமிப்புத்தருவதாக இருக்கிறது." "சமையலில் அசத்துகிறீர்கள்." "மற்றைய ஆண்களைபோல் அல்லாமல் பெண்களிற்கு மதிப்புக்கொடுத்துப் பழகுகிறீர்கள்." "உங்களைப்போல அடுத்தவரின் திறமைகளை மதித்து பாராட்டும் குணம் எல்லா ஆண்களிற்கும் இருக்காது". என வேறு ஒருவரால் பாராட்டப்படும்போது, தங்களை அறியாமலே அந்த நபர்மேல் ஒரு ஈடுபாடு ஏற்படலாம் ஆனால் அதுவே எல்லைமீறும்போது?..............
நான் வாழும் எங்களது புலம்பெயர் சமுதாயத்தில் இப்பொழுது பெருகிவரும் சமுதாய சிக்கல்களில் இது முன்னிலை பெறுகிறது.


யாரும் யாருடைய வற்புறுத்தலிற்காகவோ அல்லது தனது சமுதாயத்திற்கு பயந்தோ தான் விரும்பாத ஒரு துணையுடன் வாழத் தேவையில்லை. அல்லது தான் விரும்பிய துணையுடன் வாழப் பயப்படவேண்டியதில்லை. விரும்பாவிடின் பிரிந்துவிடலாம் பிரிவதை தங்கள் குழந்தைகளும் சமுதாயமும் உறவுகளும் புரிந்துகொள்ள செய்யலாம். அதன்மூலம் பாதிப்புகளை குறைத்துக்கொள்ளலாம். 




 
இவ்வாறான காதல்வயப்படுபவர்கள் அதனால் உண்டாகும் சிக்கல்களை எதிர்கொள்வதற்குரிய துணிச்சலோ மனத்துணிவோ கொண்டிருப்பதில்லை. பூனை கண்ணை மூடிக்கொண்டால், தன்னை எவரும் கண்டுகொள்ளமாட்டாரகள் என எண்ணுவதுபோல, இவர்களும் தமது இத்தகைய செயற்பாடுகளை இயன்றவரை மூடி மறைப்பதனால் சமாளிக்கலாம் என எண்ணி சிக்கலை மேலும் சிக்கலாக்குகிறார்கள். சமுதாயத்திற்காக ஒருவருடனும் மனத்தால் இன்னொருவருடனும் ஒரு ஆணோ பெண்ணோ வாழ்வதுவும் ஒருவித வேசைத்தனமே.
இதற்கு இவர்கள் பெரும்பாலும் சொல்லும் காரணம்  இதுதான். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக இந்தவிடயத்தை வெளிப்படையாக ஒத்துக்கொண்டு ஒரு தீர்வை காண்பதை ஒத்திவைத்திருக்கிறோம் என்பதாகும். ஆனால் இதே விடயத்தை பிள்ளைகள் வேறுவழிகளில் அறிந்துகொள்ளும்பொழுது தமது பெற்றோர்பற்றிய எண்ணங்கள் மிகவும் கேவலமானதாகவும் வெறுப்புக்குரியதாகவும்  மாறும் என்பதை ஏன் உணர்ந்துகொள்ள மறுக்கிறார்கள்.

சமுதாயத்தின் மூத்தகுடிகளே உங்களில் சிலர் இப்படி இருப்பதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இந்தவிடயங்களிற்கு எதுவிதமாக தீர்வுகள் அல்லது மாற்றங்கள் எட்டப்படலாம்.
 

ஆம் இன்றைய இளைஞர்கள் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் காதலிக்கிறார்கள் தங்களிற்கிடையே சரியான புரிதல் ஏற்படாதபோது பிரிகிறார்கள் மீண்டும் மற்றுமொரு காதல் மீண்டுமொரு பிரிதல் என சரியானதொரு துணை கிடைக்கும்வரை இது இடம்பெறுகிறது. ஆனால் பெரும்பாலும் இதில் பெரிய பாதிப்புக்களோ இழப்புக்களோ இருப்பதாக சொல்லமுடியாது. இவர்கள் தங்களது எதிர்காலம்பற்றியும் தமது சொந்த வாழ்க்கைபற்றியும் தெளிவாக இருக்கிறார்கள் அவர்களிற்கு தமது எல்லைகள் தெரிந்திருக்கிறது. ஆனால் பெரும்பாலும் மூத்த சந்ததியினரால் அவர்களைப் புரிந்துகொ
ள்ளமுடியாமல் இருக்கிறது அல்லது புரிந்துகொள்ள சமுதாயக் காவலர்கள் என்ற போர்வை இடம்கொடுப்பதில்லை.

மூத்த சந்ததியினர் பெரும்பாலும் தாங்களே சமுதாயத்தின் காவலர்கள் என்ற ஒரு மாயையை உருவாக்கி வைத்திருப்பதனால் இதைமீறி இவர்கள்மீதான விமர்சனங்களை முன்வைப்பது அபூர்வமாகவே இருக்கிறது.

இளைஞர்களே உங்கள் மூத்த சந்ததினரின் இதுபோன்ற வாழ்வியல் முரண்கள்பற்றி என்ன  நினைக்கிறீர்கள்.
 

இளையோர், மூத்தோர் என்பதை விடுத்து, தயக்கங்கள், தடைகள், கூச்சங்கள் தாண்டி சீரிய சமுதாயம் நோக்கிய தேடல்கொண்ட அனைவரும்
கருத்துக்களால் மோதி முரண்களையும் சீர்கேடுகளையும் களைவோம்.

நேசமுடன் அம்பலத்தார்

48 comments:

sarujan said...

((மூத்த சந்ததியினர் பெரும்பாலும் தாங்களே சமுதாயத்தின் காவலர்கள் என்ற ஒரு மாயையை உருவாக்கி ...))உண்மை இந்த கருத்தே பல பிரச்சனைகளுக்கு காரணம்

Angel said...

முறைதவறிய காதல்
நம்ம நாட்டிலும் சரி நாம் வாழும் வெளி நாட்டிலும் சரி இந்த பிரச்சினை நீங்க சொன்ன மாதிரி பேயாய் தலை விரித்தாடுது .
//சமுதாயம் நோக்கிய தேடல்கொண்ட அனைவரும்
கருத்துக்களால் மோதி முரண்களையும் சீர்கேடுகளையும் களைவோம்.//
அருமையான கருத்து

Yaathoramani.blogspot.com said...

நல்ல சமூக உணர்வுடன் எழுதப்பட்ட
அருமையான பதிவு
அனுபவங்கள் கொடுத்த பாடத்தை இவர்கள் வாசிக்கிறார்கள்
அனைத்தையும் அனுபவித்துத்தான் ஒப்புக்கொள்வது எனக் கொண்டால்
இந்த ஆயுள் அதற்குப் போதாது என்கிற கருத்தும் அவர்களுக்கு இருக்கிறது
வாழ்க்கை ஒரு வித்தியாசமான ஆசான்
அவன் பாடம் கற்பித்தபின் தேர்வு வைப்பதில்லை
முதலில் தேர்வு வைத்துப் பின் பாடம் கற்பிக்கிறான் எனப்தைக் கூட
இளைஞர்கள் கருத்தில் கொள்ளலாம
இது ஒரு நீண்ட பதிவுக்கான பொருள்
அருமையான கருவை பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...

அன்பு நண்பரே,
தலைமுறை இடைவெளி என்ற ஒரு செய்தியை
அழகாக விவாதித்திருக்கிறீர்கள்.
மூத்தோர்கள் இந்த சமுதாயத்தின் காவலர்கள் என
மனதில் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

தவழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குழந்தை சுவரைப் பிடித்து
எழுந்து நடக்க ஆரம்பித்ததும் கைகொட்டி சிரிக்கும், அதன்
கண்களில் ஒரு பெருமிதம் தெரியும்.
அதுபோல ஆண்டு அனுபவித்தவர்கள், கொஞ்சம் நெஞ்சு
நிமிர்த்துவதில் தவறில்லை.

ஆயினும் காலப்போக்கினில் மாறிவரும் மாற்றங்களை
ஏற்றுக்கொள்ள பழகிக் கொள்ளவேண்டும்.
மாற்றங்கள் எப்போதும் மாற்றம் இல்லாதது.

அழகிய கட்டுரைக்கு மிக்க நன்றி நண்பரே.

K.s.s.Rajh said...

சமூக உணர்வுடன் எழுதப்பட்ட அருமையான ஓரு கட்டுரை....வாழ்த்துக்கள் சார்

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல சமூக முன்னேற்றம் குறித்த சிந்தனை

SURYAJEEVA said...

ஒரு முறை சறுக்கிய பிறகு மீண்டும் சறுக்காமல் பார்த்துக் கொள்வது தான் புத்திசாலி தனம் என்பேன் நான்

சென்னை பித்தன் said...

ஒரு முக்கியப் பிரச்சினையை அருமையாகக் கையாண்டிருக்கிறீர்கள்.

காந்தி பனங்கூர் said...

நல்ல அலசல். ஆனால் இதற்கு கருத்து சொல்லும் அளவுக்கு எனக்கு பக்குவம் இல்லை. அத்னால் ஒதுங்கிக்கொள்கிறேன்.

அம்பலத்தார் said...

வணக்கம், பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள். நீங்கள் அனவருமே பெரும்பாலும் பிரச்சனைகள் இருப்பதை ஏற்றுக்கொள்வது மகிழ்ச்சி தருகிறது. ஆனால் பிரச்சனைகள் இருக்கு என்பதை ஏற்றுக்கொண்டால்மட்டும் மாற்றங்களை உண்டுபண்ணமுடியாது. அடுத்தகட்டத்திற்கு செல்லவெண்டும். பிரச்சனைகளிற்கு எந்த வழியில் தீர்வுகள் எட்டப்படலாம். மாற்றங்களிற்கான அத்திவாரம் எங்கிருந்து எப்படி யார் தொடங்குவது? சரியோ தவறோ கருத்துக்களை முன்வைத்து விவாதிப்பதன்மூலமே தீர்க்கமான மாற்றங்களை எட்டமுடியும். தயக்கம் வேண்டாம்

சக்தி கல்வி மையம் said...

இந்தப் பதிவில் உங்கள் சமூக உணர்வு தெரிகிறது..

dr.tj vadivukkarasi said...

அற்புதம்! இன்றைய தமிழ் சமூகத்துக்கு தேவையான கருத்துக்கள். தற்கொலைகளும், தவறான உறவுகளும், பழிவாங்குதலும் பெருகிவிட்ட இந்த நேரத்தில், நம் சமூகம், உறவுகளை தேர்ந்தெடுக்கும்/அணுகும் முறையில் மிகுந்த மாற்றத்தை கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளது. சரியாக சொன்னீர்கள்.அன்பில்லாத சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் நாளை என்ன மாதிரியான உலகை உருவாக்குவார்கள்? அதே போல, அடக்கியும்/அடங்கியும் தங்கள் ஆரம்ப கால திருமண வாழ்வை தள்ளியவர்களே, பிற்காலத்தில், தவறான உறவுகளை நாடுபவர்களாகவும், அதற்கு வாய்ப்பிலாத பட்சத்தில், மாமியார்- கொடுமை,பிள்ளைகள் கொடுமை-battered baby syndrome என்போம் ஆங்கிலத்தில், வளர்ந்த பின்னும் மகன்,மகள்களை பாடாய் படுத்தும் வயதானவர்கள் நிறைய.. அல்லது தங்களை சுயமாய் துன்புறுத்திக் கொண்டு எல்லோருக்கும் துன்பத்தை தருவிக்கின்றனர். அருமையான பதிவு. மிக்க மகிழ்ச்சி.

dr.tj vadivukkarasi said...

அதே நேரம் காதல்மற்றும் காமம் போன்ற உணர்வுகளிலிருந்து அன்பு- கருணை போன்ற உணர்வுகளுக்கு சரியான தருணத்தில்..30-35௦ வயதுக்கு மேல் மாறும் முதிர்ச்சி வேண்டும். இருவரில் ஒருவருக்கு இந்த மன முதிர்ச்சி விரைவில் நிகழலாம். அது கூட பல திருமணங்களுக்கு தடையாய் உள்ளது. பொதுவாக நம் சமூக வழக்கப்படி, socializing எனப்படும் ஆண்-பெண் தோழமை அங்கீகரிக்கப் படுவதில்லை.ஆதலால் பலர் பொருந்தா திருமங்களில் வீழ நேருகிறது. நாங்களெல்லாம் பண்ண வில்லையா திருமணம்.. என்று முந்தைய தலைமுறையின் கூக்குரல் கேட்கிறது. தற்போது நிலைமையே வேறு. ஆண்-பெண் இருபாலரும் நன்கு படித்த, வேலைக்கு போகும் இந்த தருணத்தில், யாரையும் சமூக காரணங்களாலும், பொருளாதார காரணங்களாலும் பிணைத்து வைக்க முடியாது. இரு பாலரும் முதிர்ச்சியான அன்புக்கு தயாராக வேண்டும். அதற்கு சிறு வயது முதல் நம் பிள்ளைகளை தயார் செய்ய வேண்டும். இது கம்பியில் நடப்பது போல தான். ஆனால் பிள்ளை வளர்ப்பது ஒன்றும் சுலபமில்லையே. இதற்க்கு தயார் ஆனவுடன் தான் பிள்ளை பெறுதல் நிகழ வேண்டும். பிள்ளை வளர்க்க அன்பும் பொறுமையும் இல்லாதவர்கள் சும்மா இருக்கலாம். மனிதக்கூட்டமாவது குறையும்.

காட்டான் said...

வணக்கம் அம்பலத்தார்
அருமையான கட்டுரைதான் நான் இதில் மூத்தோரை மட்டும் குற்றம் சொல்லமாட்டேன் சில இளைஞர்களே மிக மிக பிற்போற்குத்தனமாக இருப்பதை இங்கு காண்கிறேன் அதற்கு அவர்கள் வளர்ந்த சூழலும் ஒரு காரணம்..

அதே நேரத்தில் இங்கு நான் சந்திக்கும் சில மூத்தோர்களில் மிக சிறந்த மாற்றத்தையும் பார்க்கிறேன்.. உதாரணமாய் தங்கள் பிள்ளைகளின் காதல் கல்யாணங்களை ஆதரிப்பதில் தொடங்கி சீதன மறுப்புவரை நான் என் அனுபவத்தில் பார்க்கிறேன்.. மூத்தவர்கள் கலாச்சார காவலர்கள்னு இருப்பதற்கு காரணம் அவர்கள் வாழும் சூழல்ன்னு சொல்லலாம்... ஹி ஹி நீங்க,நான் எல்லாம் என்ன இளையோரா..?? வாழும் சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றவில்லையா?? 

சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்..

Unknown said...

உண்மையான கருத்துக்களுடன் கூடிய பதிவு!உங்கள் வயதுக்கேற்ற முதிர்ச்சி எழுத்தில்!
இன்றைய சமூகத்தில் சரமாரியாக நடைபெறும் விஷயம் தான்.ஆனால் பெரிதாக வெளியில் கண்டுக்கப்படுவதில்லை அல்லது காட்டிக்கப்படுவதில்லை!

தமிழ்வாசி பிரகாஷ் said...

சார் அருமையான சமூக பதிவு. கருத்துகள் அருமை

Anonymous said...

முறைதவறிய காதல்... அருமையான கட்டுரை...வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

சீரிய சமுதாயம் நோக்கிய தேடல்கொண்ட அனைவரும்
கருத்துக்களால் மோதி முரண்களையும் சீர்கேடுகளையும் களைவோம்.

நேசமுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

*anishj* said...

//மூத்த சந்ததியினர் பெரும்பாலும் தாங்களே சமுதாயத்தின் காவலர்கள் என்ற ஒரு மாயையை உருவாக்கி வைத்திருப்பதனால்//
சரியா சொன்னீங்க...! நல்ல பதிவு !!

kowsy said...

மனிதன் வாழப்பிறந்தவன். வாழ்க்கை என்பது ஒருமுறையே வரும். மறுபிறப்பு என்பது எல்லாம் கட்டுக்கதை. அந்த வாழ்க்கையில் சமூகம், கட்டுப்பாடு என்ற தடைக்கற்களை வைத்துக் கொண்டு மிதமீறிய அடக்குமுறைகளைக் கையாளுவதுடன், தமது ஆசைகளையெல்லாம் தமது பிள்ளைகளின் மேல் போட்டுத் திணிப்பதுவும் தாராளமாக நடைபெறுகின்றன. இவி;விடயமும் அதுபோலவேதான். வெளிப்படையாக தமக்குப் பிடித்த கணவனைத் தேர்ந்தெடுத்துக் காலம் முழுவதும் வாழ்வது சிறப்பா? பிடிக்காதவருடன் காலம் முழுவதும் முணுமுணுத்தபடி வாழ்க்கையைக் கடத்துவது சிறப்பா? அருமையான பதிவு அனைரும் சிந்திக்க வேண்டியது. வாழ்த்துகள்

அம்பலத்தார் said...

சாருஜன் அப்படியாயின் இதை எப்படி எதிர்கொள்ளலாம்.

அம்பலத்தார் said...

angelin நீந்கள் கூறுவது உண்மைதான் இந்தவிடயம் புலம்பெயர் தேசங்களிளெல்லாம் மிக அதிகமாக இடம்பெறுகிறதுதான். இவர்களை எந்தவழியில் திருத்தமுடியும் என நினைக்கிறீர்கள்.

அம்பலத்தார் said...

Ramani, அனுபவங்கள்தான் சிறந்த ஆசான் ஒத்துக்கொள்கிறேன். இப்படியான பல பிரச்சனைகளும் திரும்பத் திரும்ப எத்தனையோ தடவைகள் எவ்வளவு பாடங்களை கற்றுத்தந்தாலும் சமுதாயத்தில் மாற்றங்களைக்காண்பது அரிதாக உள்ளதே.

அம்பலத்தார் said...

மகேந்திரன்,
//ஆயினும் காலப்போக்கினில் மாறிவரும் மாற்றங்களை
ஏற்றுக்கொள்ள பழகிக் கொள்ளவேண்டும்.
மாற்றங்கள் எப்போதும் மாற்றம் இல்லாதது.//
ஆம் நிச்சயமாக. ஆனால் அந்த மாற்றங்களை ஆரோக்கியமான மாற்றங்களாக உண்டுபண்ணுவது நல்லதல்லவா?

அம்பலத்தார் said...

K.s.s.Rajh, சி.பி.செந்தில்குமார், சென்னை பித்தன், வேடந்தாங்கல் கருன், தமிழ்வாசி Prakas, ரெவெரி,
உங்கள் உற்சாகம்தரும் பின்னூட்டங்களிற்கு நன்றிகள்.

அம்பலத்தார் said...

காந்தி, இப்படி நழுவலாமா? பிரச்சனைகளில் ஒதுங்கி நிற்கக்கூடாது. உங்கள் அறிவிற்கு, அனுபவத்திற்கு, உங்க வயதினரின் பார்வையில் உங்கள் கருத்தை தாராளமாக முன்வைக்கலாமே.

அம்பலத்தார் said...

suryajeeva said...

//ஒரு முறை சறுக்கிய பிறகு மீண்டும் சறுக்காமல் பார்த்துக் கொள்வது தான் புத்திசாலி தனம் என்பேன் நான்//

பட்டுத்தெளியவேண்டுமென சொல்வது இதைத்தானோ?

அம்பலத்தார் said...

dr.tj vadivukkarasi, உங்கள் துறைசார் அறிவையும் அனுபவத்தையும்கொண்டு அருமையான கருத்துக்களை முன்வைத்திருக்கிறீர்கள். உங்கள் ஆதங்கம் எதிர்பார்ப்பு, கோபம் புரிந்துகொள்ளமுடிகிறது. உங்களைப்போன்றவர்களின் கருத்துக்கள் நல்லதொரு சமுதாய மாற்றத்திற்கு மிகவும் அவசியம் தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நன்றி

அம்பலத்தார் said...

வணக்கம் காட்டான், உங்கள் பின்னூட்டங்களில் எப்பொழுதும் காட்டமான கருத்துக்களையும் நாசுக்காக நகைச்சுவையுடன் தெரிவிப்பதை நான் மிகவும் ரசிக்கிறனான்.
மூத்தோரைமட்டுமோ அல்லது அனைத்து மூத்தோரையுமோ குறை கூறவில்லை. அதைப் பதிவிலும் குறிப்பிட்டிருக்கிறேன்.
ஆமா நீங்கள் குறிப்பிடுவதுபோல மிகவும் முற்போக்கான எண்ணங்களுடைய மூத்தவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பது உண்மைதான். அவர்களை வாழ்த்தினால் அது உங்களையும் என்னையும்கூட வாழ்த்தினதாக இருக்கும் என்பது புரிகிறது. ஹி ஹீ

அம்பலத்தார் said...

மைந்தன் சிவா said...

//உண்மையான கருத்துக்களுடன் கூடிய பதிவு!உங்கள் வயதுக்கேற்ற முதிர்ச்சி எழுத்தில்!
இன்றைய சமூகத்தில் சரமாரியாக நடைபெறும் விஷயம் தான்.ஆனால் பெரிதாக வெளியில் கண்டுக்கப்படுவதில்லை அல்லது காட்டிக்கப்படுவதில்லை!//

உங்கள் பதிலைப்படித்து எனக்கு ஜல்தோசம் பிடித்துவிட்டது. ரொம்பவும் ஐஸ் வைக்கிறிங்கள்.

அடடா
"பெரிதாக வெளியில் கண்டுக்கப்படுவதில்லை அல்லது காட்டிக்கப்படுவதில்லை!"
அப்படியா சங்கதி அப்ப நாங்களும் புகுந்து விளையாடலாம் என்று சொல்லுறியள்.

M.R said...

சிறியவர்களுக்கு பெரியவர்கள் ரோல்மாடல்
அவர்கள் வழிகாட்டல் சிறப்பானதாக இருக்க வேண்டும் .

நல்ல கருத்துள்ள விவாதம் .நன்றி பகிர்வுக்கு

ஹேமா said...

தலைமுறை இடைவெளியை அழகாக அலசியிருக்கிறீர்கள்.இன்றைய இளைஞர்கள் தெளிவாக காதலில்கூட சுயநலத்தோடு இருக்கிறார்கள்.உண்மை அன்பு சற்றுக் குறைவாகவே காண்கிறேன் இன்றைய காதலில் !

மாய உலகம் said...

நடுத்தரவயதினரின் எல்லைமீறிய காதல்கள் எத்தனை குடும்பங்களிடையேயும் அவர்களின் குழந்தைகளிற்கும் எவ்வளவு பாரதூரமான சிக்கல்களை உண்டுபண்ணியிருக்கிறது.
எத்தனை ஆண்களும் எத்தனை பெண்களும் எதோ ஒரு காரணத்திற்காக பின்விழைவுகளின் தீவிரம் புரியாமல் தங்களின் தவறான காதலினால் தனக்கும் தன்னைச் சூழ உள்ளவர்களிற்கும் எவ்வளவு சிக்கல்களை உருவாக்கி இருக்கிறார்கள்//

மிக அருமையாக சொன்னீர்கள் சகோ.. சிக்கலை இன்னும் நிறைய இடங்களில் உருவாக்கிக்கொண்டு தானிருக்கிறார்கள்.. பின் விளைவை யோசிக்காமல்...

மாய உலகம் said...

இன்றைய காதலில் அன்பு இருப்பதை விட காமமே மேலோங்கி இருக்கிறது... இதனால் நல்வாழ்வை விட குழப்பமான வாழ்வே எதிர்காலத்தில் மிஞ்சும்...

மேல்நாட்டில் தெளிவாக.... பிடித்தால் ஒன்றாக இருக்கிறார்கள்... பிடிக்கவில்லை எனில் விவாகரத்து வாங்கி அடுத்த துணையை நாடி போய்விடுகின்றனர்... இங்கே மாறாக... விவாகரத்து நாடினால் ஒருவன் அல்லது ஒருவள் மீது குற்றமாக கருத்தபட்டு அவர்களது வாழ்க்கையே கேள்வி குறியாக குழப்பிவிடுகின்றனர்... இந்த சமூகத்தில் முற்போக்கு சிந்தனை இல்லாமல் சுயநலமும், நயவஞ்சகமும் கூடியிருப்பதால் இன்னும் ரொம்ப வருடம் பிடிக்கும் முரன்பாடானாலும் பிடித்த வாழ்வை வாழ.....

சுதா SJ said...

ஆம் இன்றைய இளைஞர்கள் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் காதலிக்கிறார்கள் தங்களிற்கிடையே சரியான புரிதல் ஏற்படாதபோது பிரிகிறார்கள் மீண்டும் மற்றுமொரு காதல் மீண்டுமொரு பிரிதல்///


பாஸ் இன்றைய காதலை சரியாக புரிந்து வைத்துள்ளீர்கள்...... ஹீ ஹீ...
ஒருதடவைதான் காதல் வரும் என்பது எல்லாம் ச்சும்மா உல்லுல்லாயி...... ஹீ ஹீ...
காமம் இல்லா காதலே இப்போ இல்ல...

முன்பு காதல் வந்த பின் காமம் மெல்ல வரும்
இப்போ காமம் வந்துதான் காதலே உருவாகுது..............................
இதுதான் கசக்கும் உண்மை..

சுதா SJ said...

உண்மைகள் எப்பவும் கசக்கும்....
உங்கள் கட்டுரை அப்படி..... உண்மை சொல்லும் நெத்தியடி கட்டுரை போகிற போக்கில் இப்பத்தைய காதல்களின் முக மூடி கிழித்து போகிறது...

Anonymous said...

அருமையான கட்டுரை

Anonymous said...

அம்பலத்தார் தங்கள் "வேறு ஒருவரால் பாராட்டப்படும்போது, தங்களை அறியாமலே அந்த நபர்மேல் ஒரு ஈடுபாடு ஏற்படலாம் ஆனால் அதுவே எல்லைமீறும்போது?"..............கருத்தை
ஆமோதிக்கிறேன், அதே நேரம் எல்லை மீறும் போது, ஒவ்வொருவரும் தங்களது வாழ்வின் கடந்த காலத்தில், வந்த பாதையை நிச்சயமாக சீர் தூக்கிப்பார்த்தால், சுய விமர்சனம் செய்தால், சரியான முடிவை எடுக்க முடியும். இது எனது தாழ்மையான எண்ணம்

குறையொன்றுமில்லை. said...

சமூக உணர்வுடன் எழுதப்பட்ட அருமையான ஓரு கட்டுரை....வாழ்த்துக்கள் சார்

அம்பலத்தார் said...

இராஜராஜேஸ்வரி said
.......... நேசமுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

நன்றியம்மா

அம்பலத்தார் said...

அனிஷ்ஜ்* said
// ....சரியா சொன்னீங்க...! நல்ல பதிவு !//
உங்கள் கருத்திற்கு நன்றிகள்.

அம்பலத்தார் said...

சந்திரகௌரி, தங்கள் வருகைக்கும் ஆணித்தரமான கருத்துக்களிற்கும் நன்றிகள்.

அம்பலத்தார் said...

தமிழினி, தகவலிற்கு நன்றி

அம்பலத்தார் said...

ஹேமா said...

//தலைமுறை இடைவெளியை அழகாக அலசியிருக்கிறீர்கள்.இன்றைய இளைஞர்கள் தெளிவாக காதலில்கூட சுயநலத்தோடு இருக்கிறார்கள்.உண்மை அன்பு சற்றுக் குறைவாகவே காண்கிறேன் இன்றைய காதலில் !//

இன்றைய உலகின் யதார்த்தத்தை சரியாக சொல்லியுள்ளீர்கள்.

அம்பலத்தார் said...

மாய உலகம் said...
//மேல்நாட்டில் தெளிவாக.... பிடித்தால் ஒன்றாக இருக்கிறார்கள்... பிடிக்கவில்லை எனில் விவாகரத்து வாங்கி அடுத்த துணையை நாடி போய்விடுகின்றனர்... இங்கே மாறாக... விவாகரத்து நாடினால் ஒருவன் அல்லது ஒருவள் மீது குற்றமாக கருத்தபட்டு அவர்களது வாழ்க்கையே கேள்வி குறியாக குழப்பிவிடுகின்றனர்... இந்த சமூகத்தில் முற்போக்கு சிந்தனை இல்லாமல் சுயநலமும், நயவஞ்சகமும் கூடியிருப்பதால் இன்னும் ரொம்ப வருடம் பிடிக்கும் முரன்பாடானாலும் பிடித்த வாழ்வை வாழ..... //

எமது சமுதாயம்பற்றிய உங்கள் மிகவும் சரியான கணிப்பீட்டைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

அம்பலத்தார் said...

துஷ்யந்தன், உங்கள் பதிவுகளில் பலதடைவைகளும் நான் படித்து உணர்ந்த உங்கள் வேகமும் துணிந்து எடுத்தாளும் விடயங்களும்போன்று பின்னூட்டங்களிலும் அதே தைரியமான கருத்துக்கள். பின்னூட்டத்திற்கு நன்றி.

அம்பலத்தார் said...

Anonymous said...

//.....அதே நேரம் எல்லை மீறும் போது, ஒவ்வொருவரும் தங்களது வாழ்வின் கடந்த காலத்தில், வந்த பாதையை நிச்சயமாக சீர் தூக்கிப்பார்த்தால், சுய விமர்சனம் செய்தால், சரியான முடிவை எடுக்க முடியும். இது எனது தாழ்மையான எண்ணம்//

நீங்கள் சொவது மிகவும் சரி அந்த பகுத்தறிவுடன்கூடிய சுய விமர்சனம் இல்லாமைதான் பல் பிரச்சனைகளிற்கும் முதற்காரணம்.

அம்பலத்தார் said...

Lakshmi said...

//சமூக உணர்வுடன் எழுதப்பட்ட அருமையான ஓரு கட்டுரை....வாழ்த்துக்கள் சார்//

ஊக்கம்தரும் பின்னூட்டத்திற்கு நன்றி