பால் இல்லையா? பழம் இல்லையா?
பருக்கையற்ற கஞ்சியேனும் தா! எனக்
கதறிடும் மழலைகள்
மழலைகள் முகம்பார்த்து வாடிடும்
மங்கையர் இதயங்கள்.
கைதாகிக் கொலையுண்ட
காளையர் கன்னியர்
வேதனைக் கண்ணீருடன் அன்னையர் தந்தையர்
கல்வித்தடையால்
கவலையுறும் பாலகர்
மருந்துத்தடையால்
அவதியுறும் பிணியாளர்
வன்னிக் காட்டின்
இன்றைய நிகழ்வுகள்
கந்தலோ கோணியோ உடையாக
காயோ கிழங்கோ உணவாக
இலையோ வேரோ மருந்தாக
மரமோ மதிற்சுவரோ வீடாக
மரணப்படுக்கையில்
கையது கொண்டு மெய்யது பொத்தி
சுருண்டுகிடந்திடும் ஒருவர்
ஈனஸ்வரத்தில் முனகிடும்
வார்த்தைகள் சில இதோ!
"வன்னிப் பாதையில்
வந்திடும் வழிப்போக்கா
நின்றிடு சிலகணம்
மூடிவிடு என் விழியை
அடக்கம் செய் என் உடலை
விலங்கும் பறவையும்
இழுத்துப்போகுமுன்
ஆயிரம் வேட்டலில் சிறந்தது
அனாதைப் பிணத்தை அடக்கம் செய்வது
இருவரும் நாங்கள் ஈழத்தமிழரடா!
தொப்புள் கொடிச் சொந்தமடா!"
புலம் பெயர்ந்திங்குவாழ் எம் உறவுகளே
கேட்குதோ உம் காதில் வன்னிக்காற்று
எமக்கு வீசிடும் செய்தியை
தட்டுங்கள் உங்கள் மனக் கதவுகளை
திறக்கட்டும் சிறிதேனும்.
................................................................
இந்திராணி திருநாவுக்கரசு.