நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Tuesday

மாற்றங்களைத் தேடி....

வடக்கின் வசந்தம்
கிழக்கின் உதயம்
என்றெல்லாம் சிங்கள அரசு பெரிதாக பிலிம்
காட்டும்.
ஆனால் அப்பாவித் தமிழனுக்கு வாய்கரிசியும் கிடைக்காது.
பாவம் சதாரண சிங்களவன். அவனுக்கு அரசாங்கம்

தமிழருக்கு எதிரான இராணுவ வெற்றிகளை ஊதி ஊதிப்பெரிசாகக்காட்டும். ஆனால் அவனது வாழ்வாதாரத்தை உயர்த்த முயற்சிக்காது.
 

வெளிநாடுகளில் இருந்து தாராளமாகக் கிடைக்கும் உதவிகளை அரசியல்வாதிகள் ஆளாளுக்குப் பங்குபோட்டுக்கொள்வார்கள். சாதாரண நாட்டுச் சிங்களவனுக்கு பாலாறும் ஓடாது தேனாறும் ஓடாது. பாணுக்கும் பருப்புக்குமே லாட்டரி அடித்துக்கொண்டுதான் இருப்பான்.
 
இந்த நிலை தொடர கொஞ்சக் காலத்தில், ஒருசில வருசத்தில்
எப்ப ஐயா எங்கட வீட்டில பாலாறு, தேனாறெல்லாம் ஓடும் என்று
அந்தச் சிங்களவன் மகிந்த மாத்தையாவைப் பார்த்துக் கேட்கும்போது
அதற்கெல்லாம் காரணம் என்று கைகாட்டிவிட 
புலிப்பூச்சாண்டியும் அப்பொழுது இருக்காது.
அப்பொழுதுதான் ஒருபகுதிச் சிங்களச் சனம் அடடா இவ்வளவு நாட்களாக 
மயக்கத்தில இருந்திட்டமே!
பிரச்சனை வேறு எங்கோ இருக்கிறதே! என்று தேட முற்படும்.
 
அப்பொழுது அவர்களுடனும் இணைந்து கஸ்டப்படுகிற 
அனைத்து இன மக்களையும் இணைத்து 
முழு இலங்கைக்குமான பாரிய மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான
செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதான் இலங்கையிலுள்ள 
அனைத்து மக்களுக்குமான சரியான தீர்வைப் பெற்றுத்தரும்.
அதற்கான வேலைகளை நாம் மெதுவாக
இப்பொழுதே ஆரம்பிப்பதுதான் சரியானதென நினைக்கிறேன்.
 
அதைவிடுத்து இராணுவ மற்றும் அரசியல் ரீதியாக 
நாம் மிகவும் பலமிழந்து நிற்கும்
இன்றைய நிலையில் பழைய கள்ளுப் புதிய மொந்தை வேலைகளைச் 
செய்வது பொல்லைக் கொடுத்து அடிவாங்கின கதையாக, 
முழுமையாக எமது வாழ்வாதார மற்றும் அரசியல் அபிலாசைகளை 
அழிக்க நாங்களே சிங்களவரிற்கு பாதைபோட்டுக்கொடுத்த 
கதையாகத்தான் அமையும்.
 
அனைத்துச் சமூகத்திலும் உள்ள முற்போக்குசக்திகளை இனங்காணவேண்டும். அவர்களுடன் அனைத்துவிடயங்களிலும் இணைந்து செயற்படமுடியாவிட்டாலும் ஒன்றிணையக்கூடிய குறைந்தபட்ச வேலைத்திட்டங்களிலாவது முதலில் ஒன்றிணந்து செயற்பட முற்படவேண்டும். இதன்மூலம் அனைத்துத்தரப்பு நலிவடைந்த மக்களிடையேயும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான பரஸ்பர நம்பிக்கையை தோற்றுவிக்க முடியும்.
 
ஐந்தாம்கிளாஸ் படிக்கிற பிள்ளை கதைக்கிற கதைக்கும் வயசான காலத்தில எப்படா மேலே போவான் என்றிருக்கிற பழசுகளின்ரை ஆதங்கத்திற்கும் என எதெற்கெல்லாமோ துரோகிப் பட்டம் கொடுக்கிற சமுதாயத்தில் எனக்கும் சிலபேர் எப்பவோ அந்த லிஸ்ரில இடம்போட்டிருப்பீர்கள், என்றாலும் நாங்கள் எல்லோரும் தேடுகிற அந்தச் சுதந்திரத்திற்குள் இந்தப் பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரமும் இருக்கென்ற நம்பிக்கையில்தான் தொடர்ந்து முரண்டுபிடிக்கிறமாதிரிக் கருத்துக்களை எழுதுகிறேன் புரிந்துகொண்டால் சரி. 

குமரிமுதல் இமயம்வரை கொடிகட்டிப் பறந்தம், 
அது செய்தம் இது செய்தம் 
ஆண்டபரம்பரை 
என்ற பழைய பெருமைகளைமட்டும் பேசிக்கொண்டு இருப்பதைவிட்டு உலகாளும் பரம்பரை என்று பேசப்படும் சமுதாயமாக மாறுவோம்.
மாறிவரும் உலக நடப்புக்களைக்கண்டு மலைத்து நிற்காமல் 
மாற்றங்களை நமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளக் கற்றுக்கொள்வோம்.                   
உச்சங்களைக் காணலாம். 

22 comments:

Ramani said...

இதுதான் தற்போது நடைமுறைக்குச் சாத்தியமான சிந்தனை
ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எத்தனை பேருக்கு இருக்கும் ?
அருமையான சிந்தனையை முன்வைத்திருக்கிறீர்கள்
தொடர வாழ்த்துக்கள்

சென்னை பித்தன் said...

//மாற்றங்களை நமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளக் கற்றுக்கொள்வோம். //
அருமையாகச் சொன்னீர்கள்.

Kannan said...

மிகவும் அருமையான பகிர்வு.......
தொடர்ந்து எழுதுங்கள்.......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

தமிழ்வாசி - Prakash said...

நல்ல பகிர்வு....

suryajeeva said...

மாற்றுச் சிந்தனை... விடுதலை வேட்கையுடன் திரியும் இனம் சொக்கப் பனை போல் எரிந்து கொண்டே தான் இருக்கும்

K.s.s.Rajh said...

நல்ல பதிவு

Surya Prakash said...

சிந்திக்க தூண்டும் பதிவு . உங்களை போன்றோர் தொடர்ந்து எழுத வேண்டும். உங்களின் எழுத்துக்கள் அத்துணையும் அனுபவம் சார்ந்தவை என்பதால் இது அனைவருக்கும் பயன்படும் .

Surya Prakash said...

// முரண்டுபிடிக்கிறமாதிரிக் கருத்துக்களை எழுதுகிறேன் // எனக்கு அப்படி ஒன்றும் தோன்ற வில்லை

Anonymous said...

தொடர்ந்து எழுதுங்கள்...

அம்பலத்தார் said...

ரமணி, சென்னை பித்தன் உங்கள் புரிதல் மகிழ்வுதருகிறது.

அம்பலத்தார் said...

கண்ணன், தமிழ்வாசி.
உங்கள் ஊக்கம் தரும் வார்த்தைகளிற்கு நன்றிகள்.

அம்பலத்தார் said...

ஆம். நீங்கள் சொல்வது சரிதான் சூரியஜீவா

காட்டான் said...

வணக்கம் அம்பலத்தார்
நீங்கள் வியாபாரரீதியாக சிங்களவர்களுடன் பழகியதால் இப்படி சொல்கிறீர்கள்.. எனக்கும் அந்த அனுபவம் இருப்பதால் ஒத்துக்கொள்கிறேன்... எப்படியோ படிச்சு வாங்காம நீங்க ஈசியா எல்லோருக்கும் கொடுக்கும் அந்த பட்டத்தை வாங்கப்போறீர்கள்,..ஹி ஹி

நிரூபன் said...

வணக்கம் ஐயா,
நலமா?
உண்மையில் நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

பேசிப் பேசியே வீரமுள்ள பரம்பரை என நாம் மார்தட்டி அழிந்த காட்சிகள் தான் இப் பதிவின் ஊடாக கண் முன்னே வருகின்றது.

இனியும் வீராப்பு பேசுவதை விடுத்து அடுத்த செயற்பாடுகள் நோக்கி நகர்வதை தவிர்த்து, வீர வசனங்கள் பேசுவதால் பயனில்லை என்பதனை அனுபவப் பதிவாக உங்கள் எழுத்துச் சொல்லி நிற்கிறது.

Rathnavel said...

நல்ல பதிவு.
பொறுமையுடன் படித்துப் பாருங்கள்.
நன்றி.

dr.tj vadivukkarasi said...

நல்ல கருத்துரை. எது "வேலை" செய்யுமோ அதை செய்யும் மொழியும் இனமும் என்றும் வென்றிருக்கும் என்பதே வரலாறு.நம்மின வரலாறும் அதுவே. இந்திய சுதந்திரத்திற்கு பின் நம்மை நாமே ஒழுங்குபடுத்திக்கொண்டு,அமைதியான வாழ்வை தேர்ந்தெடுத்து,கல்வியில்,தொழில்வளர்ச்சியில்,உடல் நலத்தில்,தனி நபர் வருமானத்தில் என்று அனைத்திலும் முன்னிடம் வகிக்கிறோம். வன்முறையை தேர்ந்தெடுத்த சில வட இந்திய மாநிலங்களின் நிலை கண்கூடு.

அம்பலத்தார் said...

K.s.s.Rajh, ரெவெரி, Rathnavel
உங்களைப்போன்றவர்களின் உற்சாகம்தரும் வார்த்தைகளே எழுதும் மனநிலையை தருகிறது.

அம்பலத்தார் said...

காட்டான், வியாபாரரீதியாக அல்ல எனது இளமைக்காலம் முதல் சிங்களவர்,இஸ்லாமியர், தோட்டத்தொழிலாளர் என அனைத்துதரப்பினரிலும் அதிகளவு நண்பர்கள் இருந்தர்கள் - இருக்கிறார்கள். நான் எனது வாழ்வின் பல வருடங்களையும் போராட்டத்திற்காக முழுமையாக ஒப்படைத்தவன், புலம்பெயர்ந்த 20 வருட வாழ்விலும் இன்றுவரை எமது மக்களின் விடிவிற்காக இயன்றவரை உதவுபவன் என்பதால் விமர்சிப்பதற்கான உரிமையும் எனக்கிருக்கிறது. பொதுவாழ்வில் இணைந்துகொன்றநாள்முதல் போற்றுதலையும் தூற்றுதலையும் நிதானமாக அணுகும் மனத்திடம் எனக்கு இருக்கிறது.

அம்பலத்தார் said...

உங்களது பக்குவமான நிதானமான பின்னூட்டங்களிற்கு தலைவணங்குகிறேன்.

அம்பலத்தார் said...

யதார்த்தங்களைப் புரிந்துகொண்ட உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நிரூபன்.

அம்பலத்தார் said...

வணக்கம் dr.tj vadivukkarasi,
உங்கள் முதல்வருகைக்கும் காத்திரமான பின்னூடத்திற்கும் நன்றிகள். உங்கள் பதிவுகளை படித்தேன் நன்றாக எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

ஹேமா said...

ஒட்டுமொத்தத் தமிழரையும் கொஞ்சமாவது சிந்திக்க வைக்கும் பதிவு !