இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை ஆட்சி செய்த எந்த ஒரு அரசுமே
தமிழர்களிற்குரிய உரிமைகளைப் பகிர்ந்துகொள்வதில் இதயசுத்தியுடன்
நடந்துகொள்ளவில்லை. அதுமட்டுமன்றி தமிழ், சிங்களம், இஸ்லாமிய , மலையகதமிழர்
என அனைத்துத் தரப்பிலும் உள்ள நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ்
உள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவோ அவர்களின் உரிமைகளைப்
பாதுகாக்கவோ முற்படவில்லை.
முதலாளித்துவ அரசமைப்பின் நலன்களை பாதுகாப்பதில் அனைத்துதரப்பு உயர்மட்டத்தினரும் இணைந்தே இருக்கின்றனர். சாதாரண மக்கள் பிரித்தாளும் தந்திரத்தினால் ஒன்றிணையவிடாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
முதலாளித்துவ அரசமைப்பின் நலன்களை பாதுகாப்பதில் அனைத்துதரப்பு உயர்மட்டத்தினரும் இணைந்தே இருக்கின்றனர். சாதாரண மக்கள் பிரித்தாளும் தந்திரத்தினால் ஒன்றிணையவிடாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பான்மை
ஏழை சிங்கள இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட 1971 சேகுவரா புரட்சியின்போது
இந்திய அரசு செயல்பட்டவிதத்தையும் இங்கு கவனத்தில்கொள்ளவேண்டும்.
அன்றைய
காலத்தில் சோவியத்யூனியனுடன் மிகவும் நெருங்கிய உறவுகளையும் அணிசேரா
அமைப்பினை வலுப்படுத்துவதையும் தனது முக்கிய வெளியுறவுக் கொள்கையாக
கொண்டிருந்த இந்தியா மிகவும் துணிச்சலாக தனது கொள்கைகளை பாதுகாக்க
முனைந்தது. இலங்கையில் சீன அரசின் ஆதரவைப்பெற்ற சேகுவராபுரட்சி
வெற்றிபெற்று சீன சார்பு அரசு உருவாவதை விரும்பவில்லை. ஆதலால் உடனடியாக
தனது இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி புரட்சியை முறியடித்து அணிசேரா
நாடுகளில் தீவிரமாக செயல்பட்ட அன்றைய இலங்கை அரசை பாதுகாத்தது.
தமிழீழ
போராளி அமைப்புக்களில் ஒன்றான PLOT எண்பதாம் ஆண்டுகளில் மாலைதீவில்
சதிப்புரட்சி ஒன்றை மேற்கொண்டு தனக்கு ஆதரவானவர்களை அங்கு ஆட்சியில்
அமர்த்தமுற்பட்டபோது இதே இந்திய அரசு தனது துருப்புக்களை அங்கு அனுப்பி
அதனை முறியடித்தது.
பாகிஸ்தானின் பலத்தை குறைக்க பங்காளதேசம் உருவாக
நேரடியாக தலையிட்டது. இப்படியாக தன்னை சுற்றிலும் உள்ள நாடுகளில் தனது
ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்கொள்ள தயங்கியதில்லை. சீனாவின் ஆதிக்கத்தை
கட்டுப்படுத்துவதற்காக மேற்குலக நாடுகளும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு
மறைமுக ஆதரவை வழங்கும்.
மற்றுமொருபுறத்தில் சீனா இலங்கையின் ஒரு
பகுதியில் நாங்கள் இப்பொழுது கனவுகாண்பதுப்போல அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் கைகோர்த்து நாடுகடந்த அரசின் செயற்பாடுகளூடாக மேற்குலகிற்கு ஆதரவான ஒரு அரசு உருவாக ஒருபோதும்
இடம்கொடாது இலங்கை அரசை பாதுகாக முற்படும்.
இவற்றையெல்லாம் கவனத்தில்கொண்டு
பார்க்கும்போது எமக்கென ஒரு நாடு உருவாகுவது இன்றைய களநிலையில் மிகவும்
சிரமம்.
எண்பதாம் ஆண்டுகளில் இலங்கையில் மீண்டும் தலைதூக்கிய சேகுவரா புரட்சியை அடக்க
அன்றைய இலங்கை அரசு விடுதலைப்புலிகளுடன் ஒரு மறைமுக ஒப்பந்தத்தை செய்து
அவர்களிற்குத்தேவையான ஆயுதங்களைக்கொடுத்து இந்திய அமைதிகாக்கும் படைகளுடன்
மோதவிட்டுவிட்டு தனது அதிஉச்ச படைபலத்தையும் சேகுவராப் புரட்சியாளரிற்கு
எதிராகப் பாவித்து அதை அடக்கியது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான
இறுதியுத்தகாலத்தில் இனத்துவேசத்தை ஊக்குவிக்கும் பரப்புரைகள்மூலம் மிகவும்
வறுமைக்கோட்டின்கீழ் இருந்த தென்னிலங்கையின் காலி, அம்பாந்தோட்டைபோன்ற
பிரதேச இளஞரை பெருமளவில் இணைத்து எம்மை நசுக்கியது.
இந்த நிலைமையில் எமது உரிமைகளை அவர்கள் தாமாக பகிர்ந்துகொடுக்க முன்வருவார்கள் என்ற கனவுகாணமுடியாது.
ஆதலால்
பிரித்தாளும் சூழ்ச்சியினால் முரண்பாடுகளை தோற்றுவித்து பிரிந்து
கிடக்கும் இலங்கையிலுள்ள அனைத்து சமூக அடித்தட்டு சாதாரண மக்களையும்
வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ள மக்களையும் தொழிலாளர்களையும் ஒரு
புரிந்துணர்வினூடாக ஒன்றிணைத்து அனைத்து தரப்பினரிற்குமான உரிமைகளையும்
பாதுகாக்கவும் பெற்றுக்கொள்ளவும் முனைவதன் ஊடாக எமது உரிமைகளையும்
பாதுகாப்பதே நடைமுறைச்சாத்தியமானது.
நேசமுடன் அம்பலத்தார்
49 comments:
இந்த வரலாற்றுத் தகவல்கள் மூலம் ஒரு முக்கிய விடயத்தை தெரிந்து கொண்டேன்..
மரம் நட குழி வெட்டும் மண்வெட்டிகள் தான் மரத்தையும் அழிக்க எத்தனித்தது...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாவி உயிர்களுக்காய் ஏங்கும் பச்சோந்தி ப.சிதம்பரத்தின் கோரப் பற்கள்
ஒற்றுமை வலிமையான ஆயுதம் தான்...
அனைத்து மக்களையும் ஒன்றிணைப்பது இப்போதைக்கு இயலாது என்றே தோன்றுகிறது ........
//Surya Prakash said...
அனைத்து மக்களையும் ஒன்றிணைப்பது இப்போதைக்கு இயலாது என்றே தோன்றுகிறது ........//
மனம் செயல்படுவதைப் பொறுத்து இணைப்பதும் பிரிப்பதும்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!
நான் எழுதிய கவிதை(புலத்தி வாழும் தமிழருக்கம்...)இக்கருத்தை ஒட்டியே எழுதப்பட்டது!
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு...
ஆதலால் பிரித்தாளும் சூழ்ச்சியினால் முரண்பாடுகளை தோற்றுவித்து பிரிந்து கிடக்கும் இலங்கையிலுள்ள அனைத்து சமூக அடித்தட்டு சாதாரண மக்களையும் வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ள மக்களையும் தொழிலாளர்களையும் ஒரு புரிந்துணர்வினூடாக ஒன்றிணைத்து அனைத்து தரப்பினரிற்குமான உரிமைகளையும் பாதுகாக்கவும் பெற்றுக்கொள்ளவும் முனைவதன் ஊடாக எமது உரிமைகளையும் பாதுகாப்பதே நடைமுறைச்சாத்தியமானது.
இது எனக்கு மிகவும் பிடித்திருக்கு. மனிதம் தோற்ற நிலையில் மனிதாபிமானத்தை எங்கு நாம் தேடுவது. அடுத்தவர் பக்கத்தில் நின்று சிந்திக்கும் பக்குவம் மனிதனுக்கு வரும்வரை ஏக்கம்தான் மிஞ்சும்.
////தமிழீழ போராளி அமைப்புக்களில் ஒன்றான PLOT எண்பதாம் ஆண்டுகளில் மாலைதீவில் சதிப்புரட்சி ஒன்றை மேற்கொண்டு தனக்கு ஆதரவானவர்களை அங்கு ஆட்சியில் அமர்த்தமுற்பட்டபோது இதே இந்திய அரசு தனது துருப்புக்களை அங்கு அனுப்பி அதனை முறியடித்தது./// இது உண்மையா ????
அன்றைய இந்தியாவின் மத்திய அரசு மற்றும் றோ அமைப்பு தான் புளேட் உறுப்பினர்களுடன் ஒரு ஒப்பந்தம் போட்டு அதற்கமைய அவர்களில் சிலருக்கு ஆயுதப்பயிற்சி அளித்து மாலைதீவுக்கு அனுப்பியதாக பல இடங்களில் படித்துள்ளேன் ...
முக்கியமாக இனி ஒருவில் ஐயர் எழுதிய தொடரிலும் என்று நினைக்கிறேன் ..!
இந்த நிலைமையில் எமது உரிமைகளை அவர்கள் தாமாக பகிர்ந்துகொடுக்க முன்வருவார்கள் என்ற கனவுகாணமுடியாது.//
அதை கண்டிப்பாக இக்காலத்தில் எதிர்பார்க்க முடியாது... அனைத்து மக்களின் ஒற்றுமையே..விடியலை காட்டும்... பகிர்வுக்கு நன்றி சகோதரா!
நல்ல பதிவு
இனிய காலை வணக்கம் ஐயா,
அரசியல் ரீதியில் தமிழர்களின் உரிமைப் போர் எங்கே நிற்கிறது என்றும், யார் தடைக்கற்களாக நிற்கின்றார்கள் என்பதனையும் அழுத்தமாகச் சொல்கிறது இந்தப் பதிவு.
மிக்க நன்றி ஐயா.
நாம் ஒன்று பட்டால் தான் பேதங்களைக் களைய முடியும்,.
பூனைக்கு மணி கட்டப் போவது யார் என்று தான் தெரியவில்லை.
மரம் நட குழி வெட்டும் மண்வெட்டிகள் தான் மரத்தையும் அழிக்க எத்தனித்தது...
//
சுதா நல்ல உதாரணச் சொற்தொடர் ஒன்றை சொல்லினீர்கள். மிகவும் ரசித்தேன்.
சூரியஜீவா, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று சும்மாவா நம்ம ஆளுங்க அப்பவே சொன்னாங்க
வணக்கம் Surya Prakash , எப்பவுமே positive thingingஅவசியம். முதல் தமிழீழப்போராளி உருபிராய் சிவகுமாரன் கைத்துப்பாக்கி ஒன்றுடன் மேஜர் துரையப்பாவை சுடப்புறப்பட்டபோது எமது போராட்டத்தை மிகப் பெரிய அளவில் முன் நகர்த்தமுடியுமா என நினைத்திருந்தால் இன்று நாங்கள் இந்தவிடயங்கள் எதையுமே பேசிக்கொண்டிருக்கமாட்டோம். ஒரு லெனின் ஒரு மாவோ, ஒரு பிடல் கஸ்ரோ இவ்வாறு எதிர்மறையாக நினைத்திருந்தால்.......
முயற்சிக்காமலே துவண்டுபோகக்கூடாது நண்பரே.
சரியாகச் சொன்னீர்கள் ராஜ நடராஜன். மனமே மிகப்பெரும் ஆயுதம்.
@அம்பலத்தார், ராஜ நடராஜன்
தங்கள் இருவரின் கருத்தையும் நான் எற்றுக்கொள்கிறேன்... பாசிடிவ் ஆட்டிட்யூட் நம்மை வீழ அனுமதிக்காது என்பது உண்மை தான்..... நான் மேலே குறிப்பிட்டதற்காண காரணம், இந்த அரசியல் பிரித்தாலும் சூழ்ச்சியை மக்கள் உணரும் வரை //அனைத்து மக்களையும் ஒன்றிணைப்பது இப்போதைக்கு இயலாது என்றே தோன்றுகிறது ........//
என்பதே .....
வணக்கம் அம்பலத்தார்
நீங்கள் சொல்ல்வது உண்மைதான்.. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வுதான் "சில"புல்லுருவிகள் விடுவார்களா..?
மாலைத்தீவை தன் கையில் வைத்திருப்பதற்காக இந்தியா நடத்திய நாடகம்தான் அந்த மாலைதீவி புரட்சி ஏன்னா பாகிஸ்தான் ஆதரவு ஆட்சி வரும் சாத்தியக்கூறு இருந்தது அங்கு அப்போது...!!!??
உண்மை சுத்த மனதுடனுள்ள போராட்டம் எல்லாம் தமிழர்களுக்கு சரிவருமா என்று தோன்றவில்லை. ஈழப்போரட்டத்தில் எனது சாட்சியம் என்ற புத்தகத்தில் ஈழபோராளியான புஸ்பராசா எழுதியிருப்பதை வைத்து பார்க்கும் போது உரிமை, போராட்டம் என்பது வீண் வேலை!!! உருப்படியாக இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை தன் குடும்பத்தை பார்த்து கொள்வதே சிறப்பு!
சரியான கருத்தை முன்வைத்துள்ளீர்கள்
அதிகம் பாதிக்கப் பட்டவர்களின் மன் நிலை
ஏற்றுக் கொள்ள மறுக்கும் என நினைக்கிறேன்
ஆயினும் நீங்கள் சொல்வதுபோல்
வேறு வழியில்லை இது காலத்தின் கட்டாயம்
அருமையான யதார்த்தம் சொல்லிப் போகும் பதிவு
சாதாரண மக்கள் பிரித்தாளும் தந்திரத்தினால் ஒன்றிணையவிடாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
நல்ல பதிவு.
நன்றி.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_21.html
அப்பாடா முதல் முறையாக, இலங்கை தமிழர் பிரச்சனையில் மாற்று கருத்தை பார்க்கிறேன். நன்றி. இந்தியாவின் பெரியண்ணன் மனோபாவத்தை காட்டியதற்கும் ஒரு சபாஷ். உலகம் முழுதும் ஏழைகளும் எளியவர்களும் ஒரே நாடு.. இனம் தான். இவ்விடம் புரிந்துணர்வும், ஒற்றுமையும், வன்முறையில்லா கோபமும்,வெற்றி கொள்ளும் தீவிரமும், தேவையான பொறுமையும்,வழிநடத்தும் தன்னலமில்லா தலைமையும் உண்டாகுமென்றால்.. சொர்க்கம் கைக்கெட்டும் தூரம் தான். நிச்சயமாக நிகழும்.தேவை அதி தீவிரமாகும் போது. அது வரை நல்லிதயங்கள் இணைந்திருப்போம்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!
நன்றாக சொன்னீர்கள் கோகுல் & ரெவெரி
எது எதற்கெல்லாமோ ஓபோடுகிறோம்.
இதற்கொரு ஓ போடலாமா
எல்லோரும் சேர்ந்து உரக்கச் சொல்லிடுவோம்.
ஓ போடு!...........ஓ ஓ ஓ ஓ....................
ஆம் ஐயா புலவர் சா இராமாநுசம் இருவரதுகருத்துக்களும் ஒருமித்திருப்பது மகிழ்வுதருகிறது.
ஒன்று பத்தாகி பத்து பல ஆயிரங்களாக ஒன்றிணையும்போது எங்களாலும் சாதிக்கமுடியும். சாதிப்போம்.
அடுத்த சந்ததிக்கு நிம்மதியான வாழ்வை விட்டுச்செல்வோம்.
என்னையும் மதித்து எனது பின்னூட்டத்தை கௌரவித்திருப்பதற்கு நன்றி மனசாலி. நான் எப்பொழுதுமே பதிவுகளை படிக்கும்போது பின்னூட்டங்களையும் தவறாமல் படிப்பேன். அப்பொழுதுதான் வாசகர்களை, மக்களை புரிந்துகொள்ளமுடியும். மக்கள் மனங்களை அறிந்துகொள்ளாமல் அந்த மனங்களை வசப்படுத்தமுடியாது.
வணக்கம், சந்திரகௌரி உங்கள் புரிந்துணர்வுடன்கூடிய கருத்துப்பகிர்வு மகிழ்வு தருகிறது. ஒத்தகருத்துள்ள நாமெல்லோரும் ஒன்றிணையும்போது நிச்சயமாக எங்களால் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கமுடியும்.
உங்கள் எண்ணங்களும் முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அம்பலத்தாரே.
முன்னைய பதிவைப் போலவே இதற்கும் சொல்ல நினைக்கிறேன்.சிந்திப்போம் செயற்படுவோம் !
வணக்கம் கந்தசாமி, காட்டான்.
என்று எமது போராளி அமைப்புகள் இந்தியாவை தமது பின் தளமாக பாவிக்கத்தொடங்கினவோ அன்றுதொட்டு PLOT இல் மட்டுமன்றி விடுதலைப்புலிகள் உட்பட அனைத்து போராளி அமைப்புகளிலும் இந்திய புலனாய்வுத்துறையைனரின் ஊடுருவல் இருந்தது. இதற்கான காரணமே இலங்கைப் பிரச்சனையின் அனைத்து விடயங்களையும் முடிந்தளவு தனது கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் வைத்திருக்கவேண்டும் என்ற நோக்கமேயாகும். 83 ஆம் ஆண்டுக்கலவரத்தின் பின்னைய சிலவருடங்களில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர், ஒரத்தநாடு, மதுரை ஆகிய பகுதிகளில் 20 இற்கு மேற்பட்ட PLOT அமைப்பு பயிற்சி முகாம்கள் இருந்தன இவறில் பலவற்றில் முன்னாள் இந்திய இராணுவ வீரர்கள் என்ற போர்வையில் இந்திய புலனாய்வுத்துறையினர் போராளிகளிற்கு போரியல்துறையில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக இணைந்திருந்தனர். இதை தவிர இந்தியாவின் வடமாநிலங்களில் இருக்கும் பல இராணுவமுகாம்களில் போராளிகள் பயிற்றுவிக்கப்பட்டனர். இவைப்பற்றி நேரம்கிடைக்கும்போது விரிவான ஒரு பதிவு எழுதுகிறேன்.
மாயா உலகம் ராஜேஸ்,K.s.s.Rajh ஒற்றுமைபற்றிய உங்கள் ஆதங்கம் புரிகிறது.
வணக்கம் நிரூ. உங்களைப்போன்ற அடுத்த தலைமுறை இளைஞரும் இந்தவிடயங்கள்பற்றி தீவிரமாக சிந்திக்கத்தொடங்கிவிட்டீர்களே. இனி மணிகட்டுவது ஒன்றும் கஸ்டமான காரியம் இல்லை.
Surya Prakash உங்கள் புரிதல் மகிழ்வளிக்கிறது.
சகோதரி Josephine, விரக்தி அடையத்தேவையில்லை.காலத்திற்கேற்ப போராட்ட வழிமுறைகளை மாற்றிக்கொண்டு அடக்கப்பட்ட மக்கள் தங்களின் உரிமைகளிற்காக தாங்களே போராடியே ஆகவேண்டும். அரேபிய நாடுகளில் அண்மைய காலங்களில் உண்டான போராட்டங்களில் மேற்குலக ஊக்குவிப்புகள் அவர்களின் நலன்களிற்கான தேடல்கள் முதன்மை இடம்பிடித்தாலும் மக்கள் போராட்டங்கள் வென்றது ஒரு வழியில் நன்மையே. மக்கள்போராட்டஙகள் வெற்றிபெறுவது இன்றைய உலக அமைப்பில் சாத்தியம் இல்லையென சோர்வடைந்திருந்த அடக்கப்பட மக்களிற்கு இது ஒரு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
உலகம்பூராவும் இன்று பரவ ஆரம்பித்திருக்கும் We are 99% போராட்டம் மற்றும் ஒரு ஆரம்பம்.
Ramani, Rathnavel, உங்கள் புரிதலை உணர்த்தும் பின்னூட்டங்கள் மகிழ்ச்சிதருகிறது.
தங்கள் கருத்து உண்மையானது தான் நண்பரே
ஒற்றுமையின் சக்தி பலம் மிக்கது
ஆதலால் பிரித்தாளும் சூழ்ச்சியினால் முரண்பாடுகளை தோற்றுவித்து பிரிந்து கிடக்கும் இலங்கையிலுள்ள அனைத்து சமூக அடித்தட்டு சாதாரண மக்களையும் வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ள மக்களையும் தொழிலாளர்களையும் ஒரு புரிந்துணர்வினூடாக ஒன்றிணைத்து அனைத்து தரப்பினரிற்குமான உரிமைகளையும் பாதுகாக்கவும் பெற்றுக்கொள்ளவும் முனைவதன் ஊடாக எமது உரிமைகளையும் பாதுகாப்பதே நடைமுறைச்சாத்தியமானது.
ஆதங்கம் பகிர்வுக்கு நன்றி
dr.tj vadivukkarasi உங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றிகள். ஆம் நாங்கள் ஒன்றாக இணைந்திருப்போம் ஒன்றாக இணைந்து செயல்படுவோம்.
@சிவகுமாரன்
வாழ்த்துக்களிற்கு நன்றி நண்பரே
நீண்டநாட்களின்பின் உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி ஹேமா
M.R.ஒற்றுமையின் பலத்தை நாம் எல்லோரும் உணர்ந்துகொள்வது மகிழ்வே
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் உரித்தாகட்டுக்கும் மிக்க நன்றி பகிர்வுக்கு ......
தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ!... மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்...
தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா...
தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
PLOT அமைப்பை இந்திய அரசு ஏமாற்றிவிட்டது உண்மை
இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
தீபாவளி வாழ்த்துக்கள்!
Post a Comment