உடுக்கை நழுவின்
கை பார்த்திருப்பதில்லை
ஒரு கண் அழ
மறு கண் சிரிப்பதில்லை
இனம் தேடி மலர்
மணம் பரப்பவில்லை
மதம் பார்த்துப் பசு
பால் சுரந்ததில்லை
மானினம் வனத்தில்
மரையினை அழித்ததில்லை
பசுங்கிளியும் வெண்புறாவும்
நிறபேதம் காட்டியதில்லை
கூவும் குயிலும் அகவும் மயிலும்
மொழி சரி பார்த்ததில்லை
கழுகும் பருந்தும் வானில்
தரம் என்றும் பிரித்ததில்லை
ஆறறிவு படைத்த மனிதா!
அஃறிணை மாக்களின்
பண்பினை உணர மாட்டாயோ?
பகலினில் வீசிடும் தென்றல்
இரவினில் ஒளிந்ததுண்டா?
மண் வளம் பார்த்து வானம்
மழை என்றும் பொழிந்ததுண்டா?
இனம் பார்த்துப் பிறக்காத மனிதா
இனவெறி நீ கொள்வதேனோ?
மதம் தேடி ஜனிக்காத மாந்தரே
மதம் எனும் மதம்பிடித்து அலைவது சரியோ?
பெண் இனத்தை இகழ்வதும் - நீ
உன் இனத்தை வெறுப்பதும் முறையோ?
புத்தர், யேசு, காந்தி சொன்னதை நினைத்திடு
பூமி எங்கும் சாந்தி நிலவ உழைத்திடு
கலங்கிடும் எளியோர்க்காய் கண்ணீர்விடு
இறைவன் உன் துன்பம் துடைத்திடுவான்
செத்து மடிவது ஒருமுறைதான் - அதுவரை
மனிதனே..... மனிதனாய் வாழ்ந்துவிடு
மனிதத்தை மதிக்கப் பழகிவிடு
மனிதனாய் வாழத் துணிந்துவிடு!
ஆக்கம்: கேளரி மகேஸ்
அம்பலத்தாரை மதித்து கவிதையை இடுக்கையிடத் தந்ததற்கு கௌரி மகேஸ் அவர்களிற்கு நன்றிகள்
23 comments:
நல்லா இருக்கு!வாழ்த்துக்கள்!
ஆறறிவு படைத்த மனிதா!
அஃறிணை மாக்களின்
பண்பினை உணர மாட்டாயோ?
//
உணர்ந்திருந்திருந்தால் பிரச்சினையே இல்லையே!
//
மனிதனே..... மனிதனாய் வாழ்ந்துவிடு
மனிதத்தை மதிக்கப் பழகிவிடு
மனிதனாய் வாழத் துணிந்துவிடு!
//
நிச்சயம் துணிய வேண்டும்!
வாழ்த்திற்கு நன்றிகள் மைந்தா......
இனம் பார்த்துப் பிறக்காதா மனிதா
இனவெறி நீ கொள்வதேனோ?
மதம் தேடி ஜனிக்காத மாந்தரே
மதம் எனும் மதம்பிடித்து அலைவது சரியோ?
பெண் இனத்தை இகழ்வதும் - நீ
உன் இனத்தை வெறுப்பதும் முறையோ?
புத்தர், யேசு, காந்தி சொன்னதை நினைத்திடு
பூமி எங்கும் சாந்தி நிலவ உழைத்திடு
கலங்கிடும் எளியோர்க்காய் கண்ணீர்விடு//
எவ்வளவு உன்னதமான வரிகள்...
மனிதத்தை மதிக்கப் பழகிவிடு.... மதிக்க பழகினால் தான் பிரச்சனையே இல்லையே நண்பா... மூடர்கள் அல்லவா வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்....
கவிதை அருமை... வாழ்த்துக்களுடன் நன்றி நண்பா
//செத்து மடிவது ஒருமுறைதான் - அதுவரை
மனிதனே..... மனிதனாய் வாழ்ந்துவிடு
மனிதத்தை மதிக்கப் பழகிவிடு
மனிதனாய் வாழத் துணிந்துவிடு! //
அருமையான வரிகள் பகிர்வுக்கு நன்றி
//இனம் பார்த்துப் பிறக்காத மனிதா
இனவெறி நீ கொள்வதேனோ?
மதம் தேடி ஜனிக்காத மாந்தரே
மதம் எனும் மதம்பிடித்து அலைவது சரியோ?//
நச்
"...பெண் இனத்தை இகழ்வதும் - நீ
உன் இனத்தை வெறுப்பதும் முறையோ?.."
அருஐமயான வரிகள்
அருமையான படைப்பை பதிவாக்கித்
தந்தமைக்கு நன்றி
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
நன்று!
அஃறிணை மாக்களின்
பண்பினை மக்கள் வடிவிலிருக்கும்
மாக்களும் உணர உரைத்தீர்கள் அருமை..
ஆமாம் கோகுல் மனிதனாக வாழத்துணிந்திடுவோம்.
மாயா... நீங்கள் கூறிப்பிட்டவரில் ஒருவராவது இக்கவி வரிகளைப் படித்து தன்னை மாற்றிக்கொண்டால் அதுவே இக்கவிக்குக்கிடைக்கும் உன்னத பெருமை. உங்கள் வாழ்த்துக்கள் யாவும் இக்கவிவரிகளை வடித்த கௌரி மகேஸ் அவர்களிற்கே.
முதன்முதலாக வந்திருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். வருகைக்கும் பாராட்டுக்களிற்கும் நன்றி angelin
நச்செல்லாம் அப்புறம் எங்களிற்குப் பெருநாள் பட்சணங்கள் ஒன்றும் இல்லையா? பெருநாள் கொண்டாட்டங்களெல்லாம் இனிதே அமைந்ததா ஆமினா
டாக்டர், உங்கள் உறவினர் கௌரி மகேஸ் மீண்டும் ஒருதடவை சிறப்பானதொரு படைப்பைத் தந்திருக்கிறார்.
உங்கள் வாழ்த்துகளிற்கும் உற்சாகம் தரும் வார்த்தைகளிற்கும் நன்றிகள் ரமணி.
நன்றி ஐயா சென்னை பித்தன்
முனைவர் அவர்களே, உங்கள் கருத்துப்பகிர்விற்கும் முதல் வருகைக்கும் நன்றிகள்
அருமையான கவிங்க..
வணக்கம் ஐயா,
கௌரி மகேஸ் அவர்கள்...அஃறிணைப் பொருட்கள் வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையோடு வாழும் உலகினில், உயர் திணையாகிய மனிதர்கள் ஏன் ஒற்றுமையாக வாழ முடியாது எனும் வினாவினை எங்கள் மனங்களுள் விட்டுச் சென்றிருக்கிறார்.
நல்ல கவிதை ஐயா..
கவிதையினூடே..மனித மனங்களிலிருந்து வேறுபாடுகளைக் களைவதற்கான சிந்தனையும் சேர்ந்து வந்திருக்கிறது.
விரிவான கருத்துப் பகிர்விற்கு நன்றிகள் நிரூபன்
பரிணாம வளர்ச்சியில் மனிதம் தொலைத்தான் மனிதன்
செரிமானம் இன்றி தேய்கின்றான் கால் நடந்து
கலிகாலம் வேண்டாம் இனி செல்வோம் கற்காலம்
வலியேதுமின்றி வாழ்வை புதிதாய் ஏற்போம்
புதிய பூமியில் மதம் வேண்டாம் இனம் வேண்டாம்
அதில் வேறு தரம் வேண்டாம் நிறம் வேண்டாம்
புத்தன் இயேசு காந்தி கூட வேண்டாம் -நாம்
அத்தனை பேரும் ஆவோம் அவர்களாய்
மனதினில் மனிதம் ஏற்போம் -தனி
உலகினில் புனிதம் காப்போம் -உன்
கவிதை என்னை ஏளனம் செய்தது -இனி
புவியை மாற்ற கனவை காண்போம்
கௌரி மகேஸ் அவர்களிற்கு சமர்ப்பணம்
அம்மாடி பராசக்தி நீங்களும் கவிஞரோ இப்படி அசத்தீட்டியள்.
Post a Comment