நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Thursday

ஆண்களின் உலகத்தில் பெண்கள்


மீண்டும் ஒருதடவை உங்களுடன் பேசாப்பொருட்களை பேச முனைகிறேன். இங்கும் முன்புபோல உங்கள் ஆணித்தரமன கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிபார்த்திருக்கிறேன்.கடலையும் மலையையும் ரசிக்கிறோம்,முற்றத்து ஒற்றைப்பனையையும் கருங்குரங்கையும்கூட ரசிக்கிறோம். இவை எல்லாம் அதனதன் இயல்பான நிலையினிலேயே எம்மை ஈர்க்கவில்லையா? ஆனால் எமக்குள்மட்டும், மனிதருள்மட்டும் ஏன் ஒரு பாகுபாடு? ஏன் ஒரு மனநிலை, கருத்தியல் மாற்றம்?
பெண் என்றால் இப்படி இப்படித்தான் இருக்கவேண்டும். இப்படி இப்படித்தான் உடுத்திக்கொள்ளவேண்டும். ஆண்களென்றால் இப்படித்தான் இருப்பார்கள் இருக்கவேண்டும் என்ற வரைமுறைகளும் போலிச்சித்தாந்தங்களும் எதற்கு?


பெண்ணென்றால் தன் அழகாலும் கவர்ச்சியாலும்தான் மற்றவர்களை ஈர்க்க வேண்டுமா? அழகுபடுத்திக்கொள்ளுங்கள். அதில் தப்பில்லை. ஆனால் அதுமட்டும்தான் உங்கள் முதலான மூலதனமா? தன் அறிவாலும் ஆளுமையாலும் ஆற்றலாலும் குணத்தாலும் உங்களால் மற்றவர்களைக் கவர முடியாதா?


வரும் ஆனால் இப்ப வராது என்பதுபோல, மார்பிடைப்பள்ளங்கள் தெரிந்தும் தெரியாமலுமாக ஒரு சட்டையைபோடுவது அல்லது சேலையை கட்டிக்கொள்வது. அப்புறம் நிமிடத்திற்கொருதரம் மேலாடையை இழுத்துவிட்டுக்கொள்வதுவும் சேலைத்தலைப்பை சரிசெய்துகொள்வதுவும் எதற்கு? எதிரே இருப்பவன் தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் அந்த இடங்களைத் தேடி ஜொள்ளுவிட்டு கிறங்கி நிற்கவேண்டுமென்ற எண்ணமும் உங்களை அறியாமலே உங்கள் ஆள்மனதில் பதிந்திருக்கிறதென்று இதற்கு அர்த்தம் கொள்ளலாமா?  பதினைந்து பதினாறு வயது  இளம் பெண்கள்முதல் ஐம்பது அறுபது வயது அம்மணிகள்வரை  இதைத்தானே பெரும்பாலும் செய்துகொண்டிருக்கிறீர்கள். இது தேவைதானா? இப்படிச் செய்யச் சொல்லித்தந்தது யார்? கவர்ச்சி காட்டியும் முகப்பூச்சுக்களும் கண்மையும் இட்டுத்தான் மற்றவர்கள் முன்னிலையில் உங்களை முதன்மைப்படுத்திக்கொள்ளவேண்டுமா என்ன? 

அதற்காக சிக்குப்பிடித்த வாரிவிடப்படாத தலைமுடியும் கிட்ட வந்தாலே மூக்கை பொத்துகிறமாதிரி அழுக்கும் வியர்வை நாற்றமுமாக இருக்கச் சொல்லவில்லை. ஆணோ பெண்ணோ நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.


உலகிலேயே மருந்துப் பொருட்களுக்கு அடுத்ததாக அழகுசாதனப் பொருட்கள் சம்பந்தமான ஆராய்ச்சிகளிற்கே உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிக பணம் செலவு செய்கின்றன. ஏனெனில் அழகுசாதனப் பொருட்களிற்கான சந்தை வாய்ப்புக்கள் மிகவும் பெரியது. அதனால்தான் ஆணாதிக்க கருத்தியலுடன் இப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் கைகோர்த்து நிற்கின்றன. பெண்களது கவர்ச்சியான தோற்றங்களும், அவர்கள், கம்பீரமான ஆண்கள் அநாயசமாக தூக்கிவிளையாடும் ஒல்லிக்குச்சி பொம்மைகள் போன்றதோற்றத்தில் இருப்பதுவும் ஆண்களிற்குப் போதை தரும். ஒரு போதைப் பொருளாக இருப்பதுவேதான் பெண்களிற்கு அழகு, உங்களிடம் உள்ள அதியுச்ச திறமை உங்கள் அழகும் கவர்ச்சியும்தான் என்ற இந்தக் கருத்தியல் காலாகாலமாக பெண்கள் மனதில் விதைக்கப்படுகிறது.


எத்தனை இளம்பெண்கள் Zero size என்ற மாயமானை நம்பி, அதுவே இலட்சியமாகி அடிமையாகி, உணவை உட்கொள்வதையே மிகவும் குறைத்து, அதுவே ஒருவித மனநோயாகி தமது கல்வி, எதிர்காலம் எல்லாவற்றையும் தொலைத்துக்கொண்டு இந்த மனப்பிறள்விற்கான சிகிச்சை முகாம்களில் நீண்டகாலமக தங்கியிருக்கிறார்கள்.


பெண்களே நீங்கள் அழகியலை முதன்மைப்படுத்தி உங்கள் புறத்தோற்றத்தில் கவர்ச்சியை உண்டுபண்ணி மற்றவர்களை ஈர்ப்பதனால், உங்கள் அறிவிலும் ஆளுமையிலும் நம்பிக்கை அற்றவர்கள் என்பதை ஒப்புக்கொள்வதற்கு வெட்கப்பட்வில்லையா? உங்களிடம் உள்ள ஒரே ஆயுதம் அழகுமட்டும்தானா?
நீங்கள்தான் உங்களை ஆளுமை மிக்கவர்களாகவும் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் மாற்றிக்கொள்ளவேண்டும். இந்த ஆணாதிக்கச் சமுதாயம் தானாக முன்வந்து இதனை உங்களுக்காகச் செய்யாது.
உயர் சாதியில் இருந்துகொண்டு சாதிய முறைமைகளின் பலனை ருசித்துக்கொண்டிருப்பவர்கள் சாதிய எதிர்ப்புக்கு குரல் கொடுக்கமாட்டார்கள். அதேபோலத்தான் உங்களை அறியாமலே காலாகாலமாக நீங்கள் கடைப்பிடிக்கும் இந்த வழமைகளினால் சொகுசாக சுகங்களை அனுபவித்துகொண்டிருக்கும் பெரும்பாலான ஆண்கள் இதில் மாற்றங்கள் ஏற்பட குரல் கொடுக்கமாட்டாரக்ள். 


ஆண்களில் எத்தனைபேர் தன்னைவிட ஆளுமை மிக்க பெண்ணை தன் வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். அடக்க ஒடுக்கமாக தனது சொல்லுக்கு கீழ்ப்படிந்து தனது விருப்பு வெறுப்புகளை ஏற்று நடக்கும் பெண்களைத்தானே விரும்புகிறார்கள். ஊருக்கு உபதேசம் செய்யும் ஆண்கள் பலரும் தமது சொந்த வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்தால் நிலைமை புரியும்.  

ஒவ்வொரு பெண்ணும் தானாக உணர்ந்து தன்னம்பிக்கையையும் ஆளுமயையும் வளர்த்துக்கொண்டால்தான் ஆணும் பெண்ணும் சமத்துவமாக புரிந்துணர்வுடன் வாழும் ஒரு சமுதாயத்தை உருவாக்கமுடியும். பெண்களே நீங்கள் மாறினால்தான் பெரும்பாலான ஆண்களும் வேறு வழியின்றி மறுவார்கள். வெறுமனே பெண் உரிமை பெண் உரிமையென்று கூறிக்கொண்டிருப்பதால் மாற்றங்கள் வராது. பெண் அடிமைத்தனத்தின் ஆணிவேர்களைத் தேடி அறிந்து அவற்றை அறுத்தால்தான் புரிந்துணர்வுடன்கூடிய சமத்துவம் உண்டாகும்.


இந்த இடத்தில் மற்றுமொருவிடயத்தையும் குறிப்பிடவேண்டும். இன்றைய இளைஞரில் சிலர் பார்ப்பதற்கு பிள்ளைபிடிகாரன்போன்ற தோற்றத்தில் இருப்பார்கள் அல்லது தமக்குள் பேசிக்கொள்ளும்போது கம்பனை மிஞ்சும் விதமாக காமரசம் நிரம்ப பேசிக்கொள்வார்கள். ஆனால் அவர்களின் மனங்கள் திறந்ததாக அழுக்கற்றதாக இருக்கும். எந்த ஒரு பெண்ணையும் காமக்கண்களுடன் பார்க்காமல் பெண்களை மதித்துப் பழகுவதுடன் நல்லதொரு புரிதலும் இருக்கும். 


ஆனால் தம்மை மிகவும் நல்லவராகவும் பண்பாட்டின் காவலர்களாகவும் காட்டிக்கொள்ளும் நடுத்தர வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய சில ஆண்களின் பார்வைகள்தான் மிகவும் வக்கிரமானதாக இருக்கும். தவறுதலாகத் தொடுவதுபோல முட்டக்கூடாத இடங்களில் முட்டிக்கொளவது, பொது இடங்களில் எதிர் எதிர் மேசையில் உட்கார்ந்திருக்கும்போது கால்களினால் சுரண்டுவதென வக்கிரமாக நடந்துகொள்கின்றனர்.


இதை நானாக கற்பனைபண்ணிச் சொல்லவில்லை. இங்கு பிறந்து வளர்ந்த எமது இரண்டாவது சந்ததியை சேர்ந்த பதினெட்டு இருபது வயதைச் சேர்ந்த மிக இளவயது பெண்பிள்ளைகள் பலர் இந்தவிடயங்களை என்னிடம் கூறி வேதனைப்பட்டிருக்கிறார்கள். இதில் வேதனைக்குரிய முக்கிய விடயம் என்னவென்றால் இவ்வாறு செய்பவர்கள் பெரும்பாலும் அந்தப் பெண்பிள்ளையின் தூரத்து உறவினராக இருப்பார் அல்லது அவர்களது பெற்றோருடன் நெருங்கிப் பழகும் ஒரு நண்பராக இருப்பார். இதனால் இந்தவிடயத்தை தமது பெற்றோரிடம் சொல்லவும் பயந்து அந்தப்பிள்ளைகள் இந்தவிடயத்தை தமது மனதிற்குள்ளேயே வைத்து வேதனைப்படுகிறார்கள். 


இளவயதுப்பிளைகளின் பெற்றோர்களே, இனியாவது உங்கள்து நண்பர்கள் உறவினர்கள் பற்றி சரியான கணிப்பீடுகள் செய்துகொள்ளுங்கள். சந்தேகத்திற்குரியவர்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். நட்புகள் உறவுகளைவிட உங்கள் குழந்தையின் நல்வாழ்வுதான் உங்களுக்கு முக்கியம். அதை மறந்துவிடாதீர்கள். 


எனக்கும் இந்தவிடயங்களை என்னுடன் பகிர்ந்துகொண்ட அந்தப்பிள்ளைகளுக்கும் இடையில் உள்ள புரிதலைபோன்றதொரு புரிதலை உங்களுக்கும் உங்கள் குழந்தைகளிற்கிடையேயும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அவர்களுக்கு உங்களுடன் அனைத்து விடயங்களையும் பகிர்ந்துகொள்ளும் தைரியத்தையும் மனப்பக்குவத்தையும் உண்டுபண்ணுங்கள்.

எங்கள் வருங்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான சமுதாயத்தை அமைத்துக்கொடுப்போம்.


நேசமுடன் அம்பலத்தார்

65 comments:

ஆமினா said...

இன்றைய பெண்கள் பெண் உரிமையும் பெண் சுதந்திரத்தையும் தவறான அர்த்தத்தில் தான் புரிந்துக்கொள்கின்றார்கள். பெரும்பாலும் இவர்களின் எண்ணங்கள் " பசங்க இப்படி நடந்துகிட்டா நாங்களும் அப்படி செய்வோம்" என்ற ரீதியில் தான் இருக்கும். பாவம் இவர்களின் இளமைக்காலம் அவர்களாகவே புதைக்குழிக்குள் தள்ளுகிறார்கள் என்ற உண்மையை அறியாமலேயே........

ஒரு தேவதை இருந்தா. திறமை இருந்தும் முடங்கி கிடந்தா. இந்த க்ரீம் யூஸ் பண்ணதும் பெரிய பாடகி ஆகிட்டா என்பது போல் வரும் அழகுசாதன விளம்பரங்கள் பார்த்தா கோபம் எரிச்சல் தான் வருது. அழகு இருந்தா சாதிக்கலாம் என்ற ஒரு மாயை தெரிந்தோ தெரியாமலோ சமுதாயத்தில் பரவி இன்று பெரிய நோயாகவே மாறிவிட்டது :-(

இன்றைய சூழ்நிலைகளை படம் பிடித்து காட்டும் அருமையான பதிவு சகோ

வாழ்த்துக்கள்

காட்டான் said...

vanakkam!

காட்டான் said...

வணக்கம் அம்பலத்தார்!
நல்லதோர் பதிவு.. அண்மையில் ஒரு தகவல் கேள்விப்பட்டேன் இந்தியாவில் இருந்து அதிக உலக அழகிகளை தேர்வு செய்வது அங்கிருக்கும் மாபெரும் அழகு சாதன சந்தையை குறி வைப்பதற்கு மட்டுமே..!!!

ஹி ஹி ஒரு சாதாரண கிறீமால் நிறத்தை மாற்ற முடியும்,நன்றாக விளையாடமுடியும்,படிக்க முடியும் என்றால்? இதையும் சில பேர் நம்புகிறார்கள் என்றால் கட்டாயம் நம்புகிறவர் மனநோயாளிகள்தான் இருப்பார்..!!!???

வேலைக்கு செல்கிறேன் பின்னர் வருகிறேன்..

காட்டான் said...

பெற்றோர்கள்  தமது பிள்ளைகளோடு நண்பர்கள் போல் பழகினால் இந்த வக்கிர புத்திக்காரர்களை கட்டாயம் களையலாம்.. 

ஒரு நண்பனை போல் பிள்ளைகளுடன் பழகும்போது அவர்கள் எதையுமே எங்களிடம் மறைக்க மாட்டார்கள்..  

சிலர் தாங்கள் சிறந்த பெற்றோர் என அதிக கண்டிப்பு காட்டும்போது கட்டாயம் பிள்ளைகள் இப்படியான வக்கிரகாரர்களின் சேட்டைகளை கூற தயங்குவார்கள்..!!?  ஏன் எனில் அவர்கள்தானே "சிறந்த"பெற்றோர்கள்..?? உண்மை நிலை தெரியாது கேட்கும் முதல் கேள்வியே நீ இடம் கொடுத்ததால்தானே அவன் உரஞ்சுகிறான்னு..!!!?? 

"பெரும்பாலான" பெற்றோர்கள் இன்னும் திருந்த இருக்கு..!!!!!!((

புங்கையூரன் said...

எவ்வளவு நிதர்சனமான உண்மையைச் சுட்டிக்காட்டியுளீர்கள்,அம்பலத்தார்! எங்கள் இனத்தில் உள்ள மிகப் பெரிய குறைபாடு, அவர்கள் உறவினர்கள் தவறு செய்யும் போது, சுட்டிக் காட்டுவதற்குத் தயங்குவதே!

K.s.s.Rajh said...

////பெண்ணென்றால் தன் அழகாலும் கவர்ச்சியாலும்தான் மற்றவர்களை ஈர்க்க வேண்டுமா? அழகுபடுத்திக்கொள்ளுங்கள். அதில் தப்பில்லை. ஆனால் அதுமட்டும்தான் உங்கள் முதலான மூலதனமா? தன் அறிவாலும் ஆளுமையாலும் ஆற்றலாலும் குணத்தாலும் உங்களால் மற்றவர்களைக் கவர முடியாதா? /////

சரியான கேள்விகள் சிறப்பான ஒரு பதிவு பாஸ் பலவிடயங்களை சிறப்பாக அலசியிருக்கின்றீர்கள் உங்கள் ஆதங்கம் நியாயமானது...

ஓரு பெண்ணுக்கு அவளின் குண இயல்புகளே சிறந்த அழகு....அதைவிட்டு விட்டு மேக்கப் சாதனங்களால் அழகு வந்து விட்டாது

பொதுவாக சொல்வார்கள் ஓரு பெண்ணின் உண்மையான அழகை காணவேண்டும் என்றால் அவள் தூக்கத்தில் இருந்து காலையில் எழும்பியதும் காணவேண்டும் என்று காரணம் அதுக்கு பிறகு மேக்கப் சாதனங்கள் அவள் முகத்தை அலங்கரித்துவிடும்..

சிறப்பான பதிவு பாஸ்

Unknown said...

//பொதுவாக சொல்வார்கள் ஓரு பெண்ணின் உண்மையான அழகை காணவேண்டும் என்றால் அவள் தூக்கத்தில் இருந்து காலையில் எழும்பியதும் காணவேண்டும் என்று காரணம் அதுக்கு பிறகு மேக்கப் சாதனங்கள் அவள் முகத்தை அலங்கரித்துவிடும்..//
சிறப்பன கருத்து ராஜா அவர்களே...
இனி பெண் பார்க்க போகும்போது பெண் வீட்டுக்கு முந்தினம் இரவே போய் தங்கி பெண் படுக்கையரைக்கு போய்...காலையில் எழுந்தவுடன் .. பல்விளக்க குளிக்க போகுமுன் பார்த்து விட்டு வரவேண்டும். அப்படித்தானே ? இப்படி யாரவது பெண் பார்க்க உங்க வீட்டுக்கு வந்த வரவேற்பீங்களா?

சும்மா சந்தேகம் தான்.
http://mydreamonhome.blogspot.com

அம்பலத்தார் said...

ஆமினா said...

//இன்றைய பெண்கள் பெண் உரிமையும் பெண் சுதந்திரத்தையும் தவறான அர்த்தத்தில் தான் புரிந்துக்கொள்கின்றார்கள். பெரும்பாலும் இவர்களின் எண்ணங்கள் " பசங்க இப்படி நடந்துகிட்டா நாங்களும் அப்படி செய்வோம்" என்ற ரீதியில் தான் இருக்கும். ......//

ஒரு பெண்ணான நீங்கள் பெண்களின் மனநிலையை நன்கு புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.

அம்பலத்தார் said...

காட்டான் said...
//அண்மையில் ஒரு தகவல் கேள்விப்பட்டேன் இந்தியாவில் இருந்து அதிக உலக அழகிகளை தேர்வு செய்வது அங்கிருக்கும் மாபெரும் அழகு சாதன சந்தையை குறி வைப்பதற்கு மட்டுமே..!!!//
உண்மைதான் காட்டான் இந்தியா மட்டுமல்ல கறுப்பின பெண்கள் தென்னமரிக்க நாடுகள் உடிந்துபோன ரஸ்சிய நாடுகள் என இந்தப்பட்டியல் நீளுகிறது.

கோகுல் said...

வணக்கம்,
நல்லதோர் பதிவை தந்திருக்கிறீர்கள் .
ஒரு ஆணை தவறான பார்வையில் பார்க்க தூண்டாமல் கண்ணியமாக பார்க்க தூண்ட வேணும்.
தன் தோற்றத்தில் கவருவதை விட தன் குணாதியசதால்
கவர வேண்டும்.
ஆண்களும் அப்படி தோற்றத்தில் மயங்குவதை தவிர்க்க வேண்டும்.

rajamelaiyur said...

கரப்பு இருவருக்கும் சமம் .. தவறு செய்ய தூண்டுவது யாராக இருந்தாலும் தப்பு தான்
வணக்கத்துடன் :
ராஜா

விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..

Inuvaijurmayuran said...

அம்பலத்தார்! நல்லதோர் பதிவு

பிஞ்சு அப்பாவி அதிரா:) said...

நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்கள்.... எதிர்க்கருத்துக்கள் எதுவும் எனக்கு எழவில்லை...

ஒரு பெண் சொன்னார், தான் எயார்போர்ட்டில் நிற்கும்போது எம்மவர் ஒருவர் தன்னையே உற்றுப் பார்த்ததாகவும், தனக்கு கோபம்தான் வந்ததெனவும்...

இதப்பற்றி ஒருவரோடு கதைத்த இடத்தில் அவர் சொன்னார்.... பெண்கள் மேக்கப் இல்லாதுபோனால் நாம் ஏன் திரும்பிப் பார்க்கப்போகிறோம், அவர்கள் மேக்கப் போடுவதே நாம் பார்க்கவேண்டும் என்றுதானே... அப்போ நாம் பார்க்காதுவிட்டால் அது பாவமில்லையா... என:)))

எப்பூடியெல்லாம் சிந்திக்கிறாங்கோ... நகைச்சுவையோடு ஞாயமும் இருப்பதை உணர்ந்தேன்...

அம்பலத்தார் said...

காட்டான் said...
//"பெரும்பாலான" பெற்றோர்கள் இன்னும் திருந்த இருக்கு..!!!!!!((//
யதார்த்தம் இதுதான்.

அம்பலத்தார் said...

புங்கையூரன் said...
//எங்கள் இனத்தில் உள்ள மிகப் பெரிய குறைபாடு, அவர்கள் உறவினர்கள் தவறு செய்யும் போது, சுட்டிக் காட்டுவதற்குத் தயங்குவதே!//
உண்மை அதுதான் நண்பரே.

அம்பலத்தார் said...

K.s.s.Rajh said...
//ஓரு பெண்ணுக்கு அவளின் குண இயல்புகளே சிறந்த அழகு....அதைவிட்டு விட்டு மேக்கப் சாதனங்களால் அழகு வந்து விட்டாது//
சரியாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள் ராஜ்.

BOOPATHY said...

நல்லதோர் கருப்பொருளை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். விரும்பிப்படித்தேன். உங்களது எழுத்தின் ஆற்றல் எனது கருத்தையும் பதியத் தூண்டுகின்றது.

எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் அவர்களது ஆளுமை வெளிப்படாவிட்டால் புத்தியுள்ளவர்கள் எவரும் அவர்களை நாடமாட்டார்கள். இது இருபாலினத்திற்கும் பொருந்தும்.

ஆனால் திருமணம் என்று வருகின்றபோது பெண் அழகாக இருக்கவேணும் என்பதில் ஆண்கள் கவனமாக இருக்கின்றார்கள் என்பதை மறுக்கமுடியாது. பெண்களின் அறிவுக்கும் திறமைக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மிகவும் சொற்பமானவர்களே. அவர்களுக்குக்கூட திருமணமாகி சில ஆண்டுகள் சென்றபின் புறத்தோற்றத்தின் சாயம் வெளுத்துவிடுகின்றது.

ஆண்களின் அழகு பற்றிய மோகம் புரிந்ததனால்தான் பெண்களும் தம்மை அழகு படுத்தவேண்டும் மற்றய பெண்களோடு போட்டி போட்டு தன்னை சந்தைப்படுத்தவேண்டும் என்று எண்ணுகின்றார்கள் போலும்.

சின்ன வயதில் நானும் அழகாக இருக்கவேண்டும் என்று எண்ணியவள்தான் அதற்காக என்னை கவனித்துக்கொண்டதும் உண்டு. ஆனால் இப்போது வெளியில் செல்லும்போது என்னை கவனித்துக் கொள்வதற்கான காரணம் ஆண்களை கவரவேண்டும் என்பற்காக அல்ல. ஒன்று நான் அழகாக இருக்கின்றேன் என்ற எண்ணம் என்னை சந்தோசத்துகின்றது மற்றயது இன்னுமொருவர் முன்னால் நிற்கின்றபோது அவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் என்ற தன்னம்பிக்கை எனக்குள் வளர்க்கின்றது. அதனால் தன்னை அழகுபடுத்துவதில் தவறு ஏதுமில்லை என்பதே எனது கருத்து.

அதீத பூச்சுக்களும் ஆடம்பர ஒப்பனைகளும் தேவையற்றவையே.

பெண்கள் தம்மை அழகுபடுத்துவதால் தமது ஆளுமையை வளர்த்துக் கொள்ளாது விடுகின்றார்கள் என்று கூறமுடியாது அழகோடு ஆளுமையும் இணைந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சிதானே. இது ஆண்களுக்கும் பொருந்தும்.

நீங்கள் கூறிய அரைகுறை ஆடை அணிவதை அழகுபடுத்துவது என்று கூறமுடியாது அது பலவீனமானவர்களை கவர்வதற்கான ஓர் முயற்சியாக இருக்கலாம்.

ஹேமா said...

எங்களை பெண்களைக் குற்றம் சொல்லியிருந்தாலும் உண்மையைச் சொன்னபடியால் ஒன்றும் சொல்லாமலே போகிறேன்.இதே கருப்பொருள்கொண்டே போன கிழமை நீயாநானாவிலும் கதைத்திருந்தார்கள் !

shanmugavel said...

ஆண்களின் உலகத்தை கூர்ந்து கவனித்திருக்கிறீர்கள்,அருமை.

அம்பலத்தார் said...

நண்ப வினோத், முதல்முதலாக வந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். உங்கள் வரவிற்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றிகள்.

அம்பலத்தார் said...

வணக்கம் கோகுல், உங்கள் புரிதலுடன் கூடிய பின்னூட்டத்திற்கு நன்றி

அம்பலத்தார் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
//கரப்பு இருவருக்கும் சமம் .. தவறு செய்ய தூண்டுவது யாராக இருந்தாலும் தப்பு தான்...//
சரியாக சொன்னீர்கள் நண்பரே!

அம்பலத்தார் said...

இணுவையூர் மயூரன் said...
//அம்பலத்தார்! நல்லதோர் பதிவு.//
உற்சாகம்தரும் வார்த்தைகளுக்கு நன்றி.

அம்பலத்தார் said...

athira said...
//நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்கள்.... எதிர்க்கருத்துக்கள் எதுவும் எனக்கு எழவில்லை...
ஒரு பெண் சொன்னார், தான் எயார்போர்ட்டில் நிற்கும்போது எம்மவர் ஒருவர் தன்னையே உற்றுப் பார்த்ததாகவும், தனக்கு கோபம்தான் வந்ததெனவும்...
இதப்பற்றி ஒருவரோடு கதைத்த இடத்தில் அவர் சொன்னார்.... பெண்கள் மேக்கப் இல்லாதுபோனால் நாம் ஏன் திரும்பிப் பார்க்கப்போகிறோம், அவர்கள் மேக்கப் போடுவதே நாம் பார்க்கவேண்டும் என்றுதானே... அப்போ நாம் பார்க்காதுவிட்டால் அது பாவமில்லையா... என:)))
எப்பூடியெல்லாம் சிந்திக்கிறாங்கோ... நகைச்சுவையோடு ஞாயமும் இருப்பதை உணர்ந்தேன்...//
உங்கள் கருத்திற்கு நன்றி. நண்பர்களுடான சம்பாசனைமூலமாக மக்களின் உணர்வுகளை பகிர்ந்ததை வரவேற்கிறேன்

சுதா SJ said...

ஒரு நல்ல பதிவுக்கு பிந்தி வந்தமை வருத்தம் தருது... ;(

நீங்கள் சொல்வது மிக சரியே.... கலாச்சார காவர்காரர்களாக தங்களை காட்டிகொள்ளும் பலரின் மறுபக்கம் மிக அசிங்கமானது...

பெற்றோருக்கு தங்கள் பிள்ளைகளில் மிக கவனம் தேவை.. மிக நெருங்கிய உறவாக இருந்தாலும் அவர்களுடன் ஆண் பிள்ளையோ பெண் பிள்ளையோ வித்தியாசம் இன்றி அவர்களை நம்பி விடுவதை தவிர்க்க வேண்டும்..

எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்று அறிய முடியாத காலம் இது... அதிகமானோர் முக மூடிகளுடந்தான் அலைகிறார்கள்.

Admin said...

தங்கள் தளத்திற்கு எனது முதல் வருகை..
இரு பாலினருக்கும் ஒரு புரிதலைத் தந்தீர்கள்..

இராஜராஜேஸ்வரி said...

வருங்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான சமுதாயத்தை அமைத்துக்கொடுப்போம்.


அருமையான சிந்தனைப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

அம்பலத்தார் said...

BOOPATHY said...
//நல்லதோர் கருப்பொருளை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். விரும்பிப்படித்தேன். உங்களது எழுத்தின் ஆற்றல் எனது கருத்தையும் பதியத் தூண்டுகின்றது.//
வணக்கம் பூபதி, உங்கள் ஆணித்தரமான கருத்துக்களை வரவேற்கிறேன். ஆரோக்கியமான கருத்துப் பகிர்வுகள், விவாதங்கள் மூலமே எங்களையும் எமது சமுதாயத்தையும் திருத்திக்கொள்ளமுடியும். தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

அம்பலத்தார் said...

ஹேமா said...
//எங்களை பெண்களைக் குற்றம் சொல்லியிருந்தாலும் உண்மையைச் சொன்னபடியால் ஒன்றும் சொல்லாமலே போகிறேன்.//

வணக்கம் சகோ.ஹேமா நான் பெண்களைமட்டும் குறைகுறை கூற முற்படவில்லை. ஆண்களின் தவறுகளையும் சுட்டிக்காட்டியுள்ளேன். பொதுவாக எமது சமுதாயத்திலுள்ள சீர்கேடுகளை, தவறுகளை, மூடத்தனமான பண்பாடுகளை எமக்குள் விவாதித்து தெளிவு பெறுவதன்மூலம் நல்லதொரு சமுதாயமாக மாறவேண்டும் என்பதே எனது அவா.

அம்பலத்தார் said...

shanmugavel said...
//ஆண்களின் உலகத்தை கூர்ந்து கவனித்திருக்கிறீர்கள்,அருமை.//

வணக்கம் சண்முகவேல், உற்சாகம்தரும் பின்னூட்டத்திற்கு நன்றி

அம்பலத்தார் said...

துஷ்யந்தன் said...
//ஒரு நல்ல பதிவுக்கு பிந்தி வந்தமை வருத்தம் தருது... ;(//
துஷி, இன்றைய அவசர உலகத்தில் எல்லோருக்கும் நேரப்பழு உள்ளது. தாமதமானாலும் உங்கள் ஆணித்தரமான கருத்துப் பகிர்விற்கு நன்றி.

Unknown said...

நல்ல கருத்துத்தான் சொல்லியிருக்கீங்க! செம்ம லேட்டா வந்துட்டேன் பாஸ்!

naren said...

இன்றைய நேரமில்லாத இயந்திர வாழ்க்கையில், பிள்ளைகளுடனான உறவு ஒரு தரமானதாக இருக்க வேண்டு, நீங்கள் சொன்னதைப் போல நண்பனாக இருக்க வேண்டுமானால் பேச்சு தொடர்பு இருக்க வேண்டு. அது இன்றைய காலத்தில் குறைந்து கொண்டே வருவதால், குழந்தைகளிடம் இடைவெளி அதிகமாகி கொண்டே வருகிறது.

நல்ல பதிவு நல்ல கருத்துக்கள்.

dr.tj vadivukkarasi said...

மிக சரியாக சொன்னீர்கள். இருந்தாலும்,இந்த child-abuse விஷயத்தை தனிபதிவாகவே போட்டிருக்கலாம். சொல்வதற்கு அவ்வளவு விஷயம் உள்ளது. பெண்களுக்கு அழகியல் என்பது,இயல்பிலேயே உள்ளது. ஆனால் எது அழகு என்ற definition ல் தான் பிரச்சனையே. சக ஆண்களும், வியாபார நிறுவனங்களும் வகுத்திருக்கும் இலக்கணத்தையே,பெரும்பாலும் பெண்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அதிலும்,படித்த பெண்கள் தான் இதற்கு முதல் பலி.தற்கால கல்வி முறை அறிவை மழுங்கடிக்கவே செய்கிறது என்பதற்கு இதுவும் அத்தாட்சி. என்னை பொறுத்தவரையில், பெண்கள் அழகியலை தூக்கிப்பிடிக்கும் அதே வேளையில் அறிவு-அன்பு விரிவுபடுத்துதலையும் செய்ய வேண்டி இருக்கிறது. ஒரு வகையில், உடலில் சிக்கி போவது..ஆணாயிருந்தாலும்..பெண்ணாயிருந்தாலும்..வியாதியே!!இப்போது நம் சமூக வியாதியாக உருவெடுத்திருக்கிறது. ஐஸ்வர்யா ராயிற்கு பெண் குழந்தை பிறந்ததை கொண்டாடிய என் மருத்துவ நண்பர்கள் பலருக்கு,அடையார் புற்று நோய் துறையின் தலைவர் மருத்துவர்- சாந்தாவை தெரியாது.இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்..தமிழர்-முத்துலட்சுமி அம்மாவையும் தெரியாது..

Anonymous said...

அம்பலத்தார் மற்றுமொரு கண்ணிய பதிவு ...என் முந்தய பின்னூட்டம் ஸ்பாம்(Spam Folder) இல் இருக்கும்...Pl check...-:)

அம்பலத்தார் said...
This comment has been removed by the author.
அம்பலத்தார் said...

மதுமதி said...
//....இரு பாலினருக்கும் ஒரு புரிதலைத் தந்தீர்கள்..//
தங்கள் முதல் வருகைக்கும் கருத்துப்பகிர்விற்கும்
நன்றி.

அம்பலத்தார் said...

இராஜராஜேஸ்வரி அம்மா உங்க வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றிகள்.

அம்பலத்தார் said...

ஜீ... said...
//நல்ல கருத்துத்தான் சொல்லியிருக்கீங்க! செம்ம லேட்டா வந்துட்டேன் பாஸ்!//
Better late than never. take it easy jee.

அம்பலத்தார் said...

naren said...
//...பிள்ளைகளுடனான உறவு ஒரு தரமானதாக இருக்க வேண்டு, நீங்கள் சொன்னதைப் போல நண்பனாக இருக்க வேண்டுமானால் பேச்சு தொடர்பு இருக்க வேண்டு. அது இன்றைய காலத்தில் குறைந்து கொண்டே வருவதால், குழந்தைகளிடம் இடைவெளி அதிகமாகி கொண்டே வருகிறது...//
உங்கள் ஆதங்கம் புரிகிறது நண்பா! முதல்தடவையாக வந்திருக்கிறிங்க என நினைக்கிறேன். நன்றி.

அம்பலத்தார் said...

dr.tj vadivukkarasi said...
//... எது அழகு என்ற definition ல் தான் பிரச்சனையே. சக ஆண்களும், வியாபார நிறுவனங்களும் வகுத்திருக்கும் இலக்கணத்தையே,பெரும்பாலும் பெண்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அதிலும்,படித்த பெண்கள் தான் இதற்கு முதல் பலி.தற்கால கல்வி முறை அறிவை மழுங்கடிக்கவே செய்கிறது என்பதற்கு இதுவும் அத்தாட்சி. என்னை பொறுத்தவரையில், பெண்கள் அழகியலை தூக்கிப்பிடிக்கும் அதே வேளையில் அறிவு-அன்பு விரிவுபடுத்துதலையும் செய்ய வேண்டி இருக்கிறது. ஒரு வகையில், உடலில் சிக்கி போவது..ஆணாயிருந்தாலும்..பெண்ணாயிருந்தாலும்..வியாதியே!!..//
வணக்கம் டாக்டர் வழமைபோல உங்கள் கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்திருக்கிறீர்கள் தலைவணங்குகிறேன்.

//மிக சரியாக சொன்னீர்கள். இருந்தாலும்,இந்த child-abuse விஷயத்தை தனிபதிவாகவே போட்டிருக்கலாம். சொல்வதற்கு அவ்வளவு விஷயம் உள்ளது//
நானெல்லாம் கத்துக்குட்டி எதோ எனது சிறிய அறிவிற்கு எட்டியவரை எழுதுகிறேன்.உங்களைப்போன்ற விபரம் தெரிந்தவர்கள் நிறைய எழுதவேண்டும் என்பதுதான் எனது அவா.

அம்பலத்தார் said...

ரெவெரி said...
//அம்பலத்தார் மற்றுமொரு கண்ணிய பதிவு ...என் முந்தய பின்னூட்டம் ஸ்பாம்(Spam Folder) இல் இருக்கும்...Pl check...-:)//

கருத்துப் பகிர்விற்கும் தகவலிற்கும் நன்றி ரேவேரி.
உங்களது கருத்துப்பகிர்வு மட்டுமல்ல மேலும் பல பகிர்வுகளும் Spam இல் இருந்தது.

பராசக்தி said...

நிறைய விடயங்களை உள்ளடக்கிய இந்த பதிவில் எல்லாமே பொருள் நிறைந்தவை , காலத்துக்கு ஏற்றவை, சிறுவர்களை ஆளாக்குவதில் பெற்றோருக்கே முதலிடம், நினவு படுத்தியமைக்கு நன்றிகள் அம்பலத்தார் அவர்களே!
//வரைமுறைகளும் போலிச்சித்தாந்தங்களும்// உங்கள் சித்தாந்தப்படி இயற்கையாக ஆண் பெண் வித்தியாசமின்றி ஒரேமாதிரி உடுத்தலாம் என்று சொல்ல வருகிறீர்களா? இது மட்டும் புரியவில்லை

திருமகள் said...

அழகை விரும்பாத மனமே இல்லை . பெண் உடல் என்பது உயிருள்ள, உணர்ச்சிகளால் தூண்டப்பெறும் சாதனமாய் இருப்பதால் விளம்பரங்கள் மற்றும் ஊடகங்களிலும் பிரதிபலிக்கிறது !!பெண்கள் தங்களின் ரசனையைக் காட்டுவது மட்டுமன்றி , தமது உடல்வாகுக்கு ஏற்ற வகையில் ,பொது இடத்தில் தாம் வேலை பார்க்கும் இடத்தில் தங்கள் மீதான மதிப்பைக் குறைக்கா வண்ணமும் ஆடைகளைத் தெரிவுசெய்து உடுத்துவது முக்கியமானது. பெண்கள் தம்மை அழகுபடுத்திக் கொள்வது ஒன்றும் தவறான காரியமல்ல. ஆனால் ஒரு பெண்ணின் அழகு அவளின் தோற்றத்தில் மட்டுமில்லை நடத்தையில் அறிவை வளர்துக்கொல்வதிலும் இருக்கிறது என்பதை பெண்கள் புரிந்துகொண்டால் தோற்றப்பொலிவு மட்டுமல்லாமல் அவர்களது சிந்தனை,செயல்பாடு ஆகியவையும் கூட அழகாக மாறி விடுகிறது. துஷ்யந்தன் சொன்னதுபோல எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்று அறிய முடியாத காலம் இது.பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும் !!

ம.தி.சுதா said...

ஃஃஃஃபெண்களே நீங்கள் அழகியலை முதன்மைப்படுத்தி உங்கள் புறத்தோற்றத்தில் கவர்ச்சியை உண்டுபண்ணி மற்றவர்களை ஈர்ப்பதனால், உங்கள் அறிவிலும் ஆளுமையிலும் நம்பிக்கை அற்றவர்கள் என்பதை ஒப்புக்கொள்வதற்கு வெட்கப்பட்வில்லையா?ஃஃஃஃ

ஐயா இது இன்று நேற்று வந்ததல்லவே அந்தக்கல சிவபெருமான் நக்கீரனை எரிக்கும் அளவுக்கு பாரதூரமானது...

ஊருக்கு வாங்க நான் உங்களை எரிக்கிறன்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)

Angel said...

ஒரே வார்த்தையில் சொல்லணும் என்றால்
FANTASTIC .
//ஒவ்வொரு பெண்ணும் தானாக உணர்ந்து தன்னம்பிக்கையையும் ஆளுமயையும் வளர்த்துக்கொண்டால்தான் ஆணும் பெண்ணும் சமத்துவமாக புரிந்துணர்வுடன் வாழும் ஒரு சமுதாயத்தை உருவாக்கமுடியும். //WELL SAID

மற்றுமோர் அருமையான பதிவு .அழகுபடுத்திக்கொள்கிறேன் என்று அகோரப்படுத்தி கொள்ளும் பெண்களை நினைத்தால் வேதனை தான் மிஞ்சுகிறது .இப்ப சில மருந்து கம்பெனிகளும் அழகுசாதன பொருட்கள் விற்பனையில் இறங்கி விட்டார்களாம் .அவர்களே FOOD SUPPLEMENTS மற்றும் BEAUTY PRODUCTS எல்லாம் வியாபார தந்திரம் .
இங்கே
CHILD ABUSE பற்றி தனியே ஒரு பதிவாகவே போட்டிருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.நம் சமூகத்தில்தான் சின்ன பிள்ளையை அழைத்து "அங்கிள் (AUNTIES AND TEACHERS ARE NOT EXCLUDED )வந்திருக்கார் பாட்டு பாடி காட்டு ரைம்ஸ் சொல்லு என்று பெற்றோர் சொல்வது வழக்கம் அதனால் பிள்ளைகளுக்கும் எது சரி எது தவறு என்ற குழப்பம் இதன் காரணமா நிறைய வல்லூறுகள் தப்பிக்குது .

திருமகள் said...

ஆமாம் . angelin மற்றும் vadivukkarasi சொன்னதுபோல CHILD ABUSE பற்றி விரிவாகப் பேசவேண்டியது பெற்றோரின் கடமை. சிறுபிள்ளைகள் பொதுவாக தெரிந்த நபர்களினாலும் உறவினர்களாலும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிறார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. எது good touch, எது bad touch போன்ற அறிவுரைகளை பெற்றோர்கள் விவரமாக குழந்தைகளிடம் எடுத்துச் சொல்லி எந்தெந்த முறைகளைக் கையாண்டு அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதை விளக்க வேண்டும். அதுபோல் நண்பர்கள் உறவினர் சமூகத்தில் உள்ள `பெரியமனிதர்´ யாராக இருப்பினும் குழந்தைகளிடம் தவறான எண்ணத்துடன் நடப்பதாக சந்தேகம் வந்தால் அந்த உறவை அறவே வெட்டி விடவேண்டும். நம் அப்பா அம்மாவுக்கு எல்லா வல்லமைகளும் உண்டு. அவர்களை யாரும் எதுவும் செய்துவிட முடியாது அவர்களிடம் சொன்னால், நம் பிரச்சினை தீர்ந்துவிடும்" என்கிற தைரியத்தை குழந்தையின் மனதில் உண்டாக்குவதும் மிகவும் அவசியமானது.

அம்பலத்தார் said...

பராசக்தி said...
//நிறைய விடயங்களை உள்ளடக்கிய இந்த பதிவில் எல்லாமே பொருள் நிறைந்தவை , காலத்துக்கு ஏற்றவை, சிறுவர்களை ஆளாக்குவதில் பெற்றோருக்கே முதலிடம், நினவு படுத்தியமைக்கு நன்றிகள் அம்பலத்தார் அவர்களே!//
சகோ. பராசக்தி அடிக்கடி வந்து நல்ல கருத்துக்களைப் பதிவதற்கும் மேலும் மேலும் எழுதத்தூண்டும் விதமாக உற்சாகம்தருவதற்கும் நன்றிகள்.

//உங்கள் சித்தாந்தப்படி இயற்கையாக ஆண் பெண் வித்தியாசமின்றி ஒரேமாதிரி உடுத்தலாம் என்று சொல்ல வருகிறீர்களா? இது மட்டும் புரியவில்லை//
ஆணோ பெண்ணோ அழகுபடுத்திக்கொள்வதில் தப்பில்லை. ஆனால் பெண்ணென்றால் தனது கவர்ச்சிகரமான தோற்றத்தினால் ஆண்களை கவரவேண்டும் ஆண்களெனில் அவர்கள் பெண்களின் கவர்ச்சியில் மயங்கி நிற்கவேண்டும். இதுதான் நியதி என்பதுபோன்ற ஒரு கருத்துருவாக்கம் இருக்கிறதே இது மாறவேண்டும் என்று சொல்லமுனைகிறேன்.

அம்பலத்தார் said...

திருமகள் சைட்...
//....பெண்கள் தங்களின் ரசனையைக் காட்டுவது மட்டுமன்றி , தமது உடல்வாகுக்கு ஏற்ற வகையில் ,பொது இடத்தில் தாம் வேலை பார்க்கும் இடத்தில் தங்கள் மீதான மதிப்பைக் குறைக்கா வண்ணமும் ஆடைகளைத் தெரிவுசெய்து உடுத்துவது முக்கியமானது. பெண்கள் தம்மை அழகுபடுத்திக் கொள்வது ஒன்றும் தவறான காரியமல்ல. ஆனால் ஒரு பெண்ணின் அழகு அவளின் தோற்றத்தில் மட்டுமில்லை நடத்தையில் அறிவை வளர்துக்கொல்வதிலும் இருக்கிறது என்பதை பெண்கள் புரிந்துகொண்டால் தோற்றப்பொலிவு மட்டுமல்லாமல் அவர்களது சிந்தனை,செயல்பாடு ஆகியவையும் கூட அழகாக மாறி விடுகிறது.//
வணக்கம் திருமகள் உங்கள் ஆணித்தரமான கருத்துப் பகிர்வு மகிழ்வுதருகிறது. தற்பொழுதெல்லாம் சமூக அக்கறையுடைய பதிவுகளிற்கு உங்களைப்போன்று அதிகளவில் பெண்கள் வந்து கருத்துக்கள் சொல்வதுகூட நல்லதொரு மாற்றத்திற்கான ஆரம்பமாகவே எண்ணத்தோன்றுகிறது.
//எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்று அறிய முடியாத காலம் இது.பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும் !!//
மிகவும் சரியாகச் சொன்னீர்கள்.

அம்பலத்தார் said...

♔ம.தி.சுதா♔ said...
//.... ஐயா இது இன்று நேற்று வந்ததல்லவே அந்தக்கல சிவபெருமான் நக்கீரனை எரிக்கும் அளவுக்கு பாரதூரமானது...//
அட ஆமா. ஆரம்பம் அங்கேயல்லோ இருக்கிறது.

//ஊருக்கு வாங்க நான் உங்களை எரிக்கிறன்..// மதி ஏனப்பு இப்படியொரு கொலவெறியோட நிக்கிறியள். அடிக்கடி கண்டகண்ட பாட்டுக்களையும் கேட்காதையுங்கோ.

அம்பலத்தார் said...

angelin said...
//....மற்றுமோர் அருமையான பதிவு . அழகுபடுத்திக்கொள்கிறேன் என்று அகோரப்படுத்தி கொள்ளும் பெண்களை நினைத்தால் வேதனை தான் மிஞ்சுகிறது .இப்ப சில மருந்து கம்பெனிகளும் அழகுசாதன பொருட்கள் விற்பனையில் இறங்கி விட்டார்களாம் .அவர்களே FOOD SUPPLEMENTS மற்றும் BEAUTY PRODUCTS எல்லாம் வியாபார தந்திரம் .
இங்கே CHILD ABUSE பற்றி தனியே ஒரு பதிவாகவே போட்டிருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.நம் சமூகத்தில்தான் சின்ன பிள்ளையை அழைத்து "அங்கிள் (AUNTIES AND TEACHERS ARE NOT EXCLUDED )வந்திருக்கார் பாட்டு பாடி காட்டு ரைம்ஸ் சொல்லு என்று பெற்றோர் சொல்வது வழக்கம் அதனால் பிள்ளைகளுக்கும் எது சரி எது தவறு என்ற குழப்பம் இதன் காரணமா நிறைய வல்லூறுகள் தப்பிக்குது .//
அடேங்கப்பா கூச்சசுபாவமுள்ள பயந்தபொண்ணு அஞ்சலினா இப்படி ஆணித்தரமான கருத்துக்களை முன்வைப்பது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்தும் எழுதுங்கள்.

அண்மையில் நான் உங்க பதிவுகளுக்கு எழுதிய பின்னூட்டங்கள் comment spam இல் உள்ளதா என ஒருதடவை பருங்கோ

அம்பலத்தார் said...

திருமகள் said...
//ஆமாம் . angelin மற்றும் vadivukkarasi சொன்னதுபோல CHILD ABUSE பற்றி விரிவாகப் பேசவேண்டியது...//
திருமகள் கருத்துப்பகிர்வுகளுக்கான களங்களை நான் திறந்துவிடுகிறேன். சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரும் தொடர்ந்து தங்களது கருத்துக்களை முன்வைப்பதன்மூலமே பிரச்சனைக்குரிய விடயங்களில் எம்மிடையே ஒரு புரிந்துணர்வும் சரியான தீர்வுகளும், மாற்றங்களும் எட்டப்படும் என்பதுவே எனது எண்ணம். முற்றும் தெரிந்தவனும் யாருமில்லை எதுவும் தெரியாமலும் ஒருவரும் இல்லை. ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்ததை சரியெனப்பட்டதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வோம். நல்லதொரு சமுதாயம் படைப்போம்.

நிரூபன் said...

வணக்கம் ஐயா, நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

எம் மனதில் உள்ள ஆண் பெண் புரிதல் பற்றிய சரியான அணுகு முறை இன்மையால் தான் பெண்கள் ஓவராக கவர்ச்சி காட்ட நினைப்பதும், ஆண்கள் அதனைத் தமக்குச் சார்பாக எடுத்துக் கொண்டு ரசிப்பதும் நிகழ்கிறது என நினைக்கிறேன்.

ஆண் பெண்களை பரஸ்பர புரிந்துணர்வுகளோடு நண்பர்களாகப் பழக விட்டால் இப்படியான நிலமை வராது அல்லவா?

Unknown said...

அருமையான விழிப்பு பதிவு

Anonymous said...

நீங்கள் சொல்வது மிக சரியே...வாழ்த்துக்கள்...

KANA VARO said...

என்னண்ணே! பள்ளம், கிள்ளம் எண்டு ஒரே கலக்கலா இருக்கு... இந்த பதிவிலை எனக்கு அந்த வரி தான் கண்ணை உறுத்திச்சு எண்டா பார்த்துக்குங்களன். யூத்து சார்

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி.

அம்பலத்தார் said...

நிரூபன் Said...
//எம் மனதில் உள்ள ஆண் பெண் புரிதல் பற்றிய சரியான அணுகு முறை இன்மையால் தான் பெண்கள் ஓவராக கவர்ச்சி காட்ட நினைப்பதும், ஆண்கள் அதனைத் தமக்குச் சார்பாக எடுத்துக் கொண்டு ரசிப்பதும் நிகழ்கிறது என நினைக்கிறேன்....//
ஆமா நிரூபன் நீங்கள் கூறுவதும் ஒரு முக்கிய காரணிதான்.

அம்பலத்தார் said...

வணக்கம் M.சண்முகம் வரவிற்கும் கருத்துப்பகிர்விற்கும் நன்றி

மகேந்திரன் said...

எதிர்வாதமிட முடியாத
அத்தனையையும் முழுமையாய் ஏற்றுக்கொள்ளக்கூடிய
கருத்துக்கள் நண்பரே...

அம்பலத்தார் said...

கருத்துப்பகிர்விற்கு நன்றி ரெவெரி.

அம்பலத்தார் said...

KANA VARO said...
//என்னண்ணே! பள்ளம், கிள்ளம் எண்டு ஒரே கலக்கலா இருக்கு... இந்த பதிவிலை எனக்கு அந்த வரி தான் கண்ணை உறுத்திச்சு எண்டா பார்த்துக்குங்களன். யூத்து சார்//
வரோ, யூத்து யூத்தா யூத்துக்காக எழுதுவது வழமைதானே.

அம்பலத்தார் said...

Rathnavel said...
//அருமையான பதிவு//
வணக்கம் ஐயா, தங்கள் வருகைக்கு நன்றி.

Anonymous said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..
வாழ்த்துக்கள்...

கோகுல் said...

இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி மகிழ்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2012/01/blog-post_13.html