நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Thursday

யாழ்பாணிய மேலாதிக்க அரசியலால் இழந்ததுபோதும்.

தளர்ந்து வரும் யாழ் குடா நாட்டிற்கு வெளியே வாழும் தமிழர்கள் மீதான யாழ்ப்பாணத்தாரின் மேலாதிக்கம்.

இலங்கைத் தமிழரின் அரசியல் வரலாற்று ஆரம்பகாலம்தொட்டே யாழ்ப்பாணத்தாரின் ஏனைய மாவட்டங்களில் வாழும் தமிழர்கள் மீதான மேலாதிக்கம் என்பது இருந்து வந்துள்ளது. இந்த மேலாதிக்கம் என்பது தமிழ் அரசியல்வாதிகளையும் தாண்டிச் சாதாரண குடாநாட்டுமக்கள் மத்தியிலும் சர்வசாதாரணமாக ஆழப்பதிந்திருக்கிறது. தோட்டக்காட்டான், வடக்கத்தையான், மட்டக்களப்பான், வன்னியான் போன்ற ஏளனமான சொற்பதங்கள் மூலம் தமது மேலாதிக்கத்தைக் கூறிக்கொள்வதில் குடாநாட்டாருக்கு ஒரு அலாதிப்பிரியம்.

தமிழ் அரசியல்வாதிகளும் தமது யாழ்பாணிய மேலாதிக்கத்தை நிலைநாட்டும் அரசியலையே நடத்திவந்தனர்.

மலையகத் தமிழரின் மிகவும் அடிமைத்தனமான வாழ்க்கையை மாற்றியமைப்பதிலோ அல்லது அவர்களது சமுகமேம்பாடு , அரசியல் அபிலாசைகளை அடையாளம் கண்டு அவற்றிற்கு உரிய வேலைத்திட்டங்களை அல்லது போராட்டங்களை முன்னெடுப்பதலேயோ குறைந்தபட்சம் அவர்களைத் தம்முடன் இணைத்து வைத்திருப்பதலேயோ தமிழரசுக்கட்சி, காங்கிரஸ் கட்சி, தமிழ்கூட்டணி போன்ற எக்கட்சிகளும் அக்கறை கொண்டிருக்கவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்புக்கூட மலையக் தமிழருக்குரிய சரியான தீர்வுத் திட்டம் அல்லது கொள்கை எதனையும் கொண்டிருக்கவில்லை. இவற்றின் வெளிப்பாடாகவே தமிழ்க் கட்சிகளுடன் இணைந்திருப்பதைவிட சிங்கள ஆளும் கட்சிகளுடன் இணக்கப்பாட்டு அரசியல்மூலம் தமது அபிலாசைகளைச் சிறதளவேனும் பெற்றுக்கொள்ளலாம் என்ற புதியபாதை தொண்டமானால் தொடக்கி வைக்கப்ட்டு இன்று சகல மலையகத்தமிழ் அரசியல் கட்சிகளாலும் பாகுபாடின்றி முன்னெடுக்கப்படுகிறது.
அடுத்து போராட்டகாலத்தைப் நோக்கினாலும் போராளிகளில் அமைப்பின் கோட்பாடுகளை வகுக்கக்கூடிய அல்லது தீர்மானங்களை எடுக்கக்கூடிய, தலைமைக்கு கருத்துக்களை எடுத்துக்கூறக்கூடிய முதல்நிலைப்போராளிகளில் மிகப்பெரும்பான்மையினர் யாழ்மாவட்டத்தினராகவே இருந்தனர். விரல்விட்டு எண்ணத்தக்க அளவில் ஒருசிலரே இதற்கு விதிவிலக்காக வெளிமாவட்டத்தவராக இருந்தனர். (இதையெல்லாம் எழுதுவதால் நான் வெளிமாவட்டக்காரன் என்று தப்பாக எண்ணிவிட வேண்டாம் நான் யாழ் வடமராட்சியைச் சேர்ந்தவன்தான்.) ஆனால் மூளை சலவைசெய்யப்பட்டு கட்டளைக்குக் கீழ்படிந்து போராடும் சாதாரண போராளிகளை எடுத்துக்கொண்டால் இவர்களில் மிகப் பெரும்தொகையினர் வன்னி, மட்டக்களப்பு, ஏனைய தென் தமிழ்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். இதனைப் புரிந்துகொண்ட தென் தமிழ்மாவட்டத்தாரும் தமக்குரிய பாதையைத் தெரிவுசெய்து கொண்டு தனி அரசியல் நடத்தத் தொடங்கிவிட்டார்கள்.

யாழ்ப்பாணத்தாருக்கு இன்று மிஞ்சியிருப்பது வன்னித் தமிழர் மட்டும்தான். அவர்களிலையும் பலர் போராட்ட இறுதிக் காலத்தில் பெற்றுக்கொண்ட மிகக் கசப்பான அனுபவங்களால் கோபத்திலும் வெறுப்பிலும் இருக்கிறார்கள்.
யாழ்பாணத்திலையிருந்து மிகப்பெரிய இடப்பெயர்வு நடந்தபோது வெறும்கையோட வன்னிக்கு வந்த அனைவரையும் அரவணைத்த வன்னிமக்களைப் பற்றி கூட்டணியினரோ, நெடியவன் அணி, K.P. அணி......  அல்லது வேறெந்த எஞ்சியிருக்கும் போராளிக்குழுவோ உண்மையான அக்கறை கொண்டு செயற்படுவதாகத் தெரியவில்லை. இந்தக் குழுக்களெல்லாம் ஏதோ ஒருவிதத்தில் இந்த வன்னி மக்களின் அவலங்களை வியாபாரமாக்கி விளம்பரப்படுத்தி தமது இருப்புக்களை நிலை நிறுத்திக்கொள்ளவும் தமது வங்கிக் கணக்குக்களை நிரப்பவுமே முட்டிமோதிக் கொள்கிறார்கள்.
புலம்பெயர் சமூகம் இன்று செய்யவேண்டியது. தமது இருப்புக்களை நிலை நிறுத்தவும் தமது பொக்கற்றை நிரப்பவும் இன்னமும் முயன்றுகொண்டிருக்கும் அனைத்துக் குழுக்களுக்கும் வக்காலத்துவாங்கும் அரசியல் செய்வதையும், அவர்கள்மூலம்தான் சீரழிந்த நமது தேசத்தை மீண்டும் கட்டி எழுப்பலாம், முகாம்களுக்குள் வாடும் மக்களை வாழவைக்கலாம் என்ற எண்ணத்திலான பங்களிப்புகளையும் பாரபட்சமின்றி முற்றும் நிறுத்தவேண்டும்.
ஆனால் அதற்காக எதுவுமே செய்யாமல் இருக்கவேண்டும் என்பதல்ல இப்பொழுதுதான் நாம் நிறையச் செய்ய வேண்டும் ஆனால் சரியாகச் செய்ய வேண்டும்.

முன்பு தாயகத்தில் போராட்டம்  நடந்தது அதற்கு அவர்கள் எம்மிடம் கேட்டதற்கு மேலாக உதவிகள் செய்தோம். ஆனால் சரியோ தவறோ இன்று அந்தப் போராட்டம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது.
இன்று அங்குள்ளவர்களது உடனடித்தேவை அவர்களது வாழ்வாதாரங்களை மீள் கட்டி எழுப்பத் தேவையான உதவிகள். அன்று ஆயுதங்களை வாங்கவும் போராடவும் கட்டுமானங்களைச் செயற்படுத்தவும் தனிப்பட்ட ஒவ்வொருத்தராலையும் முடியாது. அமைப்புரீதியாகச் செய்யவேண்டிய தேவை இருந்தது. இன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருவாய் கஞ்சி கொடுக்கவோ ஒரு குடிசைபோட்டுக் கொடுக்கவோ இடையில் தரகர்கள் வேண்டியதில்லை. ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்த தனது ஊரிலுள்ள நம்பிக்கைக்கு உரியவர்கள் பழையமாணவர்சங்கங்கள், உங்கள் ஊர்க் கிராம முன்னேற்றச் சங்கம், வாசகசாலை போன்றவற்றின்மூலம் பாதிக்கப்பட்டமக்களை இனங்கண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுங்ங்கள். ஒவ்வொரு புலம்பெயர் தமிழனும் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தை இனங்கண்டு உதவிசெய்தால் பாதிக்கப்பட்ட பெரும்பகுதியினருக்கும் உதவிகள் கிடைத்துவிடும்.
விழுந்த அந்தமக்கள் முதலில் தங்கள் கால்களில் எழுந்து நிற்கட்டும் அதன் பின் அவர்கள் தங்களுக்குரிய சரியான பாதையைத் தெரிவு செய்யட்டும். அப்பொழுது எங்கள் முழுஆதரவைக் கொடுப்போம். அதைவிடுத்து அவர்களுக்கு எது தேவை என்பதை புலம் பெயர் தமழிராகிய நாம் எமது விருப்புகளுக்கு ஏற்ப திணிக்க வேண்டாம். யாழ்பாணிய மேலாதிக்க அரசியலால் ஈழத்தமிழர்  இழந்ததுபோதும்.


அம்பலத்தார்

21 comments:

suryajeeva said...

உட்கட்சி பூசலால் இழந்தது இன்னும் உரைக்கவில்லை

Dr.எம்.கே.முருகானந்தன் said...

மிக அருமையான கட்டுரை. மிகுந்த துணிச்சலுடன் யாழ்ப்பாண மேலாதிக்கம் பற்றி எழுதியுள்ளீர்கள். நானும் உங்களைப் போலவே யாழ் வடமராட்சி.

Ramani said...

அவர்களுக்கு எது தேவை என்பதை புலம் பெயர் தமழிராகிய நாம் எமது விருப்புகளுக்கு ஏற்ப திணிக்க வேண்டாம். யாழ்பாணிய மேலாதிக்க அரசியலால் ஈழத்தமிழர் இழந்ததுபோதும்
.
உண்மை நிலையை மிக அருமையாகச்
சொல்லிப்போகிறீர்கள்
உண்மையில் இலங்கைத் தமிழர்களில்
இவ்வளவு பிரச்சனைகள் உள்ளது
பெரும்பாலானோருக்கு இங்கு தெரியாது
விரிவாக பதிவிட்டமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

நிரூபன் said...

வணக்கம் ஐயா

நல்லதோர் பதிவு,

யாழ்ப்பாண மோலாதிக்கம் பற்றித் தோலுரித்துக் காட்டியிருக்கிறீங்க.
விட்டுக் கொடுக்காத மனப்பாங்குடைய எம்மவர்கள் மூலம் நாம் இழந்தது அதிகம் தான் ஐயா.

இது தொடர்பாக நானும் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.

உங்களுக்கு நேரம் இருந்தால் பாருங்கள்.

http://www.thamilnattu.com/2011/05/1.html

காட்டான் said...

வணக்கம் அம்பலத்தார் முதல்ல கைய கொடுங்கோ நானும் ஒரு யாழ்பாணத்தான் தான் உங்கள் பதிவோடு முழுதும் ஒத்துப்போகிறேன்.. ஆனா ஒன்றை விளங்கிக்கொள்ளுங்கோ நாங்களும் வெளிநாட்டிற்கு வந்த பிறகு எங்கட சமூகத்தை தூர வைச்சு பார்க்கும்போதுதான் இவையெல்லாம் எங்கட கண்ணுக்கு தெரியுது நீங்களும் நானும் ஊரில் இருந்திருந்தால்!!!??? இப்ப அங்க இருக்கிறவங்க இன்னும் முழுதாய் மாறிவிடவில்லை....!!!!?

அடுத்து தவராக எடுக்காவிட்டால் உங்களிடம் ஒரு கோரிக்கை மசாலா மசாலா என்னும் பெயரை அம்பலத்தார்ன்னு மாற்றினால் இன்னும் அழகாய் இருக்குமய்யா...!!!

Anonymous said...

யாழ்ப்பாண மோலாதிக்கம் பற்றி நிறைய தெரிஞ்சுக்கிட்டேன்...

அம்பலத்தார் said...

suryajeeva தங்களது முதல் வரவிற்கும் கருத்துப்பகிர்விற்கும் நன்றிகள்

அம்பலத்தார் said...

தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் டாக்டர். நாம் சார்ந்த சமுதாய மேம்பாட்டிற்கும், மானிடமேன்மைக்கும் உரிய ஆரோக்கியமான கருத்துக்களை சொல்லவேண்டிய இடத்தில் சொல்லாமல்விடுவதும் நாம் செய்யும் ஒருவித துரோகம் என எண்ணுகிறேன்

அம்பலத்தார் said...

இலங்கைத்தமிழர், முஸ்லீம்கள், மலையகத்தமிழர், சிங்களவர் என இலங்கையில் வாழும் அனைத்து தரப்பினரினதும் சமூக முரண்பாடுகளிற்கு உரிய வேர்களையும் கண்டறிந்து எட்டப்படும் தீர்வுதான் இலங்கைத்தீவில் நிரந்தர சமாதானத்தையும் முன்னேற்றத்தௌம் கொண்டுவரும். @ Ramani

அம்பலத்தார் said...

தற்பொழுது எங்களை நாங்களே மீளாய்வு செய்யவேண்டிய ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம்.
இனியும் அதைச் செய்யத்தவறினால் நாங்கள் அடைந்த பாரிய பின்னடைவுகளிலிருந்து மீள்வது மிகவும் கடினம் நிரூபன்.
நீங்கள் சுட்டிக்காட்டிய இணைப்பை படித்தேன். அதுமட்டுமன்றி பெரும்பாலான உங்கள் பதிவுகளும் சமூக மாற்றத்திற்குரிய சிந்தனைகளைத் தூண்டும் பதிவுகளாக அமைவது வரவேற்பிற்குரியது. உங்களைப்போன்ற இளைஞர்கள்தான் இன்று எமது மக்களிற்குத்தேவை

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மிகவும் துணிச்சலான கட்டுரை...

அம்பலத்தார் said...

வணக்கம் காட்டான் நீங்களும் எனது கருத்துடன் ஒத்துப்போவது மகிழ்ச்சி. உங்களது கோரிக்கை விடயம் ஏற்கெனவே எனது மனதிலும் அவ்வப்போது வந்தது, நீங்கள் சொன்னதற்குப்பின் நேற்று பெயரை மாற்றியுள்ளேன். கருத்திற்கு நன்றி. ஐயா அப்படியென்றெல்லாம் பெரிய பெரிய வார்த்தைகள் சொல்லவேண்டியதில்லை. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் நல்ல நண்பர்களாக இருத்தலே முக்கியமானது.

அம்பலத்தார் said...

இதுபோன்ற பலவிடயங்கள் வெளிஉலகிற்கு தெரியாமல் இருக்கிறது ரெவெரி. சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவற்றையும் எழுதுகிறேன்.

அம்பலத்தார் said...

கருன், எமது விடயங்களை நாங்களே சுயவிமர்சனம் செய்து திருத்திக்கொள்ள பழகவெண்டும். விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலை எங்களிடம் மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால்தான் மீண்டும் மீண்டும் தவறுகள் உண்டாகிறது. உள்ளதை உள்ளபடி சொல்லுமளவிற்கும், அதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்கும் அளவிற்கும் எனக்குத் துணிச்சலுள்ளது அவ்வளவுதான். இந்த எண்ணம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். இது ஒன்றும் மகா பெரிய விடயம் இல்லை.

vidivelli said...

உண்மை உண்மை இந்தத் திமிர் அன்றுதொட்டு புரையோடிப்போனதொன்று யாழ்ப்பாணத்தாருக்கு....
நானும் யாழ்ப்பாணம் தான் ஆனாலும் இது உண்மை..
நல்ல விளக்கக் கட்டுரை..
அன்புடன் பாராட்டுக்கள்..

அம்பலத்தார் said...

விடிவிள்ளி - எனது கருத்துடன் ஒத்துப்போவது மகிழ்ச்சி. ஒரு விடயத்தை கவனித்தீர்களா. இந்தப் பதிவிற்குப் பின்னூட்டம் இட்ட ஒரு சிலரிலேயே நீங்கள், காட்டான், Dr.முருகானந்தன், நிருபன் என அநேக நம்மவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இப்படி இலைமறைகாயாக இருக்கும் எம்போன்றவர்கள் இன்னும் கொஞ்சம் அதிக அக்கறை செலுத்தினால் இதுபோன்றவிடயங்களை இல்லாது ஒழிப்பது ஒன்றும் கடினம் இல்லை.

எஸ் சக்திவேல் said...

எனக்கு அரசியல் அறிவு கொஞ்சம் மட்டம். ஆனால் புகைப்படங்கள் ஞாபகங்களைக் கிளறி வலிக்கச் செய்கின்றன.

அம்பலத்தார் said...

வணக்கம் சக்திவேல், கடந்தகால ஞாபகங்களைக்கிளறி உங்களிற்கு வலிதந்ததற்கு வருந்துகிறேன். நாங்களே எமது கடந்தகாலத்தை சுயவிமர்சனம் செய்து விட்ட தவறுகளிலிருந்து பெற்ற பாடங்களுடன் ஆரோக்கியமான சமுதாயமாக மாறி முன்னேற்றம் காணவேண்டும்.

Parasakthy said...

வணக்கம் திருவாளர் அம்பலத்தார் அவர்களே!யாழ்ப்பாண மேலாதிக்க குறுகிய எண்ணங்களை துணிந்து எழுதியமைக்காக தலை வணங்குகிறோம்.
உண்மை தான், "வடக்கத்தையான்" என்னும் சொல் வடமாகாணத்தை சேர்ந்த என்னை பலமுறை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நாம் இலங்கைத்தீவின் வடக்கு பகுதியில் இருந்துகொண்டே இன்னுமொரு சாராரை அதே சொல் கொண்டு வெகு ஏளனமாக விமர்சிக்கும் போது, வேதனைபட்டிருக்கிறேன் , அக்கம் பக்கம் இருப்போரிடம் குறைப்பட்டாலும் பகிரங்கமாக எழுதவும் சந்தர்ப்பம் தந்த அம்பலத்தாருக்கு நன்றிகள் பல.
ஒருவர் தன் வாழ்நாளில் தெரிந்து கொள்ளவும் அறிந்து கொள்ளவும் அனுபவப்படவும் தன்னையே நம்பியிருந்தால், ஒரு ஆயுட்காலம் போதாது. உங்களைப்போன்ற அனுபவஸ்தர்கள் கூறுவதை, கேட்டு அறிந்து வாழ்வியலை புரிந்து கொண்டால், வருடங்கள் சிலதை மீதமாக்கலாம்.
காட்டான் கூறுவது போல பெயரை மாற்றினால் நாமும் சந்தோசப்படுவோம்

அம்பலத்தார் said...

அம்மா பராசக்தி,
உங்களைப்போண்றவர்கள்தான் எமது சமுதாயத்திற்கு வேண்டும். தவறை ஒப்புக்கொள்ளும் உங்கள் மனதிற்குத் தலை வணங்குகிறேன். எமது செயல்களை நாமே சுயவிமர்சனம் செய்து எம்மை நாமே திருத்திக்கொள்ளும் மனநிலை ஒவ்வொருவருக்கும் உண்டாகவேண்டும். எனது பதிவுகளைப் படிப்பவர்களில் ஒருசிலராவது ஆரோக்கியமான சமுதாயம் நோக்கிய எனது எண்ணங்களைப் புரிந்துகொண்டால் அதுவே மிகப்பெரும் வெற்றியாகும். உற்சாகம் தரும் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள்.

அன்பு சகோதரி said...

மேலாதிக்க உணர்வே தமிழனைத் தாழ்த்தியது.