நேரம் 15.20
பஸ் மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது.
15.30 மணிக்குச் சந்திக்கிறன் என்றனான்.
எப்படியாவது நேரத்திற்குப் போய்ச் சேரவேணுமென்றால்,
ஒவ்வொரு சந்தியிலையும் சிவப்பில நாலுதரம் நின்று சொதப்புது.
குட்டிபோட்ட பூனைபோல நான் படுகிற அந்தரம் புரியாமல் பஸ்
ஆறித்தேறிப்போய் நின்றதும் நிற்காததுமாகப்
பாய்ந்து குதித்து இறங்கியபடி நேரத்தைப் பார்த்தன்.
நேரம் 15.27
கொஞ்சம் எட்டி நடந்தால் எப்படியும் நேரத்திற்குப் போடுவன்.
ஒட்டகத்துக்கு முதல் போட்டனென்றால் நல்லது,
இல்லையென்றால் அறுத்தே ஆளைக் கொண்டுபோடும் பாவி.
நடை மெல்ல ஓட்டமாக மாறியது.
நேரம் 15.33
மூச்சிரைத்தபடி சுற்றுமுற்றும் பார்த்தன்
ஆளைக்காணவில்லை. மக்டொனால்ஸ் வாசலிலை இருந்த
நீளக் கதிரையிலை.........
அந்த பெஞ்சிலதானே இருக்கிறன் என்றது.
அப்பாடா ஆள் இல்லை.
மெதுவாகப் போய் பெஞ்சில உட்கார்ந்தன்.
நேரம் 15.35
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி!
பார்த்திருந்து பார்த்திருந்து பூவிழி நோகுதடி!
பாடலை ரசித்தபடி குரல் வந்தபக்கம் பார்த்தால்
சில்லறைக்காக விரித்திருந்த துண்டை ஏக்கமாகப் பார்த்தபடி.
கிற்றாரைத் தட்டிக்கொண்டு பாடினான் நாடோடிப் பாடகன்.
நேரம்15.40
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி!
பார்த்திருந்து பார்த்திருந் பூவிழி நோகுதடி!
மீண்டும் ஒலித்த இளையராஜாவின் இனியபாடலை
மனதுக்குள் அசைபோட்டபடி,
கடைவீதியில் சென்றுகொண்டிருந்த சனக்கூட்டத்தை வேடிக்கை பார்த்தன்.
அதிலை ஒரு கூட்டமாக சிரிப்பும் கும்மாளமுமாக இளவயசுப் பெட்டையள்.
அந்தக் கூட்டத்திலை பால்த்தேத்தண்ணி நிறத்திலை
வடிவானதொரு பிள்ளையாக்கிடக்குதென்று பார்த்தால்
காட்டுவமோ விடுவமோ என்கிறமாதிரி
இரண்டு நூல்ப்பட்டியில தொங்குகிற பெனியனும்
கட்டைக்காற்சட்டையுமாக
சும்மா சொல்லக்கூடாது வடிவாகத்தன் இருக்குது பிள்ளை.
விளம்பரத்திலை நடிக்கலாம்.
மூக்கும் முழியும் எங்கட நாட்டுச் சாயலாகத்தான் கிடக்கு.
நேரம்15.45
ஒட்டகம் வந்தபாட்டைக்காணம்.
உது எப்பவுமே இப்படித்தான் ஒரு காரியத்தையும் ஒழுங்காகச் செய்யாது.
வாய்மட்டும் பெரிசா.........
கொஞ்சம் ரென்சனா எழும்பி அப்படியும் இப்படியுமாக நடந்தன்.
ரெலிபோன் எடுத்துப்பார்ப்பமோ?
சீ! சீ! வேண்டாம்
அநியாயத்திற்கு ஒருக்கால் கதைக்க 59 சதம் கொடுக்கக் கட்டாது.
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி!
பார்த்திருந்து பார்த்திருந்து பூவிழி நோகுதடி!
மூன்றாவது தடவையாகப் பாடிக்கொண்டிருந்தான்.
நேரம்15.55
மேகக்கூட்டம் கூடி இருண்டு மழை வரும்போலத் தெரியுது.
பதினைந்து மிஸ்கோல் அடிச்சட்டன் திருப்பி எடுக்கக்காணம்.
உதோட இனி ஒரு சாவகாசமும் வைக்கக்கூடாது.
சனியனை இன்றையோட கைகழுவிவிடவேணும்.
கோபமா முன்னாலை கிடந்த கோலாக்கப்பை எட்டிக் காலால் அடித்தன்.
எந்தக் குறுக்கால போற கண் கெட்ட பரதேசியடா எறிஞ்சது.
கோப்பை குருட்டுப் பிச்சைக்காரனுக்குமேலை விழுந்ததிலை
கோபமாகக் கத்தினான்.
ஆராவது கண்டவையோ என்று கலவரமாப் சுற்றுமுற்றும் பார்த்தபடி
கொஞ்சம் எட்டி உட்கார்ந்தன்.
நேரம் 16.00
நாசமாப்போன வெறும் பயல் கார் இடிச்சுச் சாக,....
குருடனின் வசைமாரி தொடர்ந்தது.
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி!
பார்த்திருந்து பார்த்திருந்து பூவிழி நோகுதடி!
ஒன்பதாவது தடவையாப் பாட்டுவர எரிச்சலா பாட்டுக்காரனை முறைச்சன்.
24 பதில் கிடைக்காத மிஸ்கோல்.
இந்தமுறை தொடர்ந்து கைத்தொலைபேசியை அடிக்கவிட்டன்.
குரல் ஒலித்தது.
நீங்கள் தொடர்புகொண்டிருப்பது ஒட்டகத்தாரின்
வீட்டுத் தொலைபேசி. ஒட்டகத்தார்
தற்பொழுது வேறு நபருடன் இணைப்பில் இருப்பதால்
அடுத்த வாய்ப்பு உங்களுக்காக ஒது...............
எரிச்சலாக இணைப்பைத் துண்டித்தன்.
நல்லா இருட்டிக்கொண்டு வந்தது.
நேரம்16.04
மெதுவாகத் தூறல்விழத்தொடங்கியது.
தொலைபேசி ஒலித்தது
எடுத்தா ஒட்டகம்.
என்ன வந்திட்டீரே?
எரிச்சலா பல்லை நெறுமியபடி இல்லை இன்னும் வெளிக்கிடவில்லை.
என்ன ஒற்றுமைபாரும் நானும் இன்னமும் புறப்படேல்லை.
அடுத்த பஸ் பிடிச்சன் என்றால் எப்படியும்
ஒரு அரைமணித்தியாலத்தில வந்திடுவன்.
என்ன விளையாடுறியே நான் வந்து அரை மணியாச்சு என்று கத்தினன்.
வீணாக் கத்திப் பிரசரை ஏத்தாதையும் அரைமணித்தியாலத்தில சந்திப்பம்.
இணைப்புத் துண்டிக்கப்பட்டது.
ஒரு மன்னிப்புக்கூட கேட்டுதே திமிர்பிடிச்ச ஒட்டகம். வரட்டும்...
கறுவினபடி நேரத்தைப் பார்த்தன்.
நேரம்16.10
மழை சோவெனக் கொட்டத்தொடங்கியது. சுழல் காத்துவேற
சுற்றுமுற்றும் சனங்கள் ஓட்டமும் நடையுமா!
பாட்டுக்காரன் அவசரஅவசரமாக சில்லறையள்
கிடந்த துண்டைக் கவனமாச்சுத்திப் பொக்கற்றுக்கை தள்ளினபடி
கிற்றாரையும் தூக்கிக்கொண்டு ஓடத்தொடங்கினான்.
ஏய் ஏய் இந்தப்பாட்டையும் ஒருக்கால் பாடிப்போட்டுப் போ! ஏளனமாக உச்சரித்தன்.
மழை மழை இது முதல் மழை...............
விசர் விசிர் உனக்கென்ன விசரே?
என்று கத்தியபடி ஓடினான் பாட்டுக்காரன்.
நேரம்16.15
ஒட்டகம் வரும்.
ஆனால் வராதோ?
வந்தாலும் வருமோ?
குணத்தைக் காட்டிவிட்டுதோ?
கொட்டும் மழையில் பைத்தியமாக நான்.
ஒட்டகம்?
ஒட்டகம் மீண்டும் வரும்..............
No comments:
Post a Comment