நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Saturday

அந்த அழகிய பிறந்ததினப் பரிசுகள்!

எங்கள் மகள் சௌம்யாவையும்,சாராவையும் கூட்டிக்கொண்டு பாலர் பாடசாலை போகிற நாட்களிலெல்லாம் பிஞ்சு விரலைப் பிடித்து மண்ணில் 'அ ' எழுதிய காலங்கள் என் மனத்தில் மின்னி மின்னி மறையும். அதைப் பிள்ளைகளுக்குச் சொன்னால் "அப்ப நீங்கள் படித்த Kinder garden ல் 5,6 விளையாட்டுச்சாமான் கூட இல்லையா" என்று பிள்ளைகள் அனுதாபத்துடன் என்னை ஒரு பார்வை! பிறகு அண்ணணும் தங்கையுமாக ஏதோ குசுகுசுப்பு!

லிசா வீடும் அருகிலேயே இருப்பதால் ஒரு வாரம் நாங்கள் சாராவையும் சௌம்யாவையும் Kinder garden ற்குக் கூட்டச் சென்று கூட்டி வருவது அடுத்த வாரம் சாராவின் அம்மாவிற்கு அந்த வேலை.
சாராவின் அப்பா டெனிஸ் 300 கி.மீ இற்கப்பாலுள்ள ஓர் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இது அவர்களின் சொந்த வீடென்பதுவும் டேனிஸ் வேலை பார்க்கும் நிறுவனம் அவரைப் பல ஊர்களிலுமுள்ள கிளை நிறுவனங்களிற்கும் அனுப்புவதால் அவர்கள் இங்கேயே இருக்க டெனிஸ் வார இறுதிகளில் வருவார். சில நாட்களில் இவர்கள் அங்கு போவார்கள்.
கோடைகாலம் முடிந்து இலையுதிர் காலம் ஆரம்பித்த ஒரு நாளில் கின்டர் காடினில் ஒன்று கூடல் விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. குழந்தைகளெல்லாம் வர்ணங்கள் பூசப்பட்ட முகத்துடன் வண்ணத்துப்பூச்சிகளாக, வண்டுகளாக, கரடிகளாக, புலிகளாக வளைய வந்து கொண்டிருந்தன. மாலைச் சூரியன் பரவி விரிந்திருந்த மரங்களினுடே ஒளிப்பொட்டுக்களை பூமித்தாய்க்கு இட்டிருந்தான். மரபெஞ்சுகளில் ஓய்வாக இருந்தபடி பெரியவர்கள் பியரை இராட்சதக் குழந்தை போலக் கொழுத்திருந்த கிளாஸ்களில் அருந்தினர். பின்னர் உணவுகள் நிறையவே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதிகளை நோக்கிப் படையெடுத்தனர். பொதுவாக இப்படியான விழாக்களுக்கு எமது உணவு வகைகளையே செய்துகொண்டு போவதை நான் அண்மைக்காலத்தில் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ஒரு தட்டில் உணவுகளை நிறைத்தபடி வந்து எங்களுக்கருகில் அமர்ந்தார் டெனிஸ். அவரின் தட்டில் எங்கள் நாட்டுணவுகள் நிறைந்திருந்தன. அதைப் பார்த்த எனக்குள் ஓர் மகிழ்ச்சி பரவியது. அவர் சொன்னார் "எனக்கு இந்தச் சுவையான ஆசிய உணவுகளை அறிமுகம் செய்தது எனது முன்னாள் காதலியாக இருந்த லிசாதான். எங்கள் முகத்தில் வந்து விழுந்த குழப்ப ரேகைகளைப் பார்த்த டெனிஸ் ஒரு குறும்புச் சிரிப்புடன் கூறினார் " எனது முதற் காதலியின் பெயரும் லிசாதான். அவளும் நானும் இந்திய ரெஸ்டோரன்டுகளை நாடித்தான் எப்போதும் போவோம்"..... .
உள்ளே போன பியரும் நன்றாக வேலை செய்யவே டெனிஸின் வாயிலிருந்து வார்த்தைகள் வழுக்கியபடி உதிர்ந்தன.
"எனது இளமைக் கால வாழ்வில் மிகத் துயரமான சம்பவங்களும் மிகச் சந்தோசமான தருணங்களும் வாய்த்தன. எனது அம்மா ஓரு விபத்தில் காலமானபின் அப்பாவினது முழு அன்பில் நனைந்தபடி வளர்க்கப்பட்ட பிள்ளைதான் நான். லீவுகளுக்குப் போய்விட்டு வரும்போது எனது பாட்டியும் தாத்தாவும் தம்மிடம் என்னை விடும்படி கேட்டும் அப்பா மறுத்துவிடுவார். அம்மா இறந்த பின்னர் வேறு எந்தப் பெண்ணுடனும் சேர்ந்து வாழவும் அப்பா முற்படவில்லை........" அப்பொழுது சாரா சொன்னார்" இந்தக் கதை இனி முடிந்தபின்தான் நிற்பாட்டுவீர்களா? அல்லது இடைவேளை உண்டா?" செல்லமாக அவவை அடிக்கக் கையை ஓங்கினார் டெனிஸ். ஒரு பஸ்ஸை விட்டால் அடுத்ததாக வரும் கடுகதி பஸ்ஸில் பாய்ந்து ஏறுவதில் அனைத்து ஜேர்மனியரும் கில்லாடிகள் என எம்மில் பலர் நினைக்கிறோமல்லவா! அது எவ்வளவு தவறான கருத்தென்பதை நேரடியாக அனுபவத்தில் காணும் சந்தர்ப்பங்கள் பல தடவை எனக்கு ஏற்பட்டிருக்கின்றன. மிக அழகான கட்டுக்கோப்பான குடும்ப அமைப்பில் கூட்டுக்குடும்பங்களாகப், பாச வலையில்ச் சிக்கி வாழும் பலரை இன்றும் ஜேர்மன் கிராமங்களிற் காணலாம். அதனால் டெனிஸின் அப்பாவைப் பற்றிய விடயம் என்னுள் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. .. "கடவுள் நல்ல மனிதரைத்தான் சோதிப்பான் என்பார்கள். கெட்டவனென்றால் தண்டிப்பான் என்பார்கள் ...... சரி அது எதற்கு இங்கு.......... எனது தந்தைக்கு கடுமையான தலையிடி மணிக்கணக்கில் நாட்கணக்கில் தொடர்வதும் திடீரென மயங்கியும் இரு தடவை விழுந்து விடவே வைத்திய நிபுணர்கள் பல வித பரிசோதனைக்கெல்லாம் அவரை உட்படுத்தினர். இறுதியாகக் மூளையில்க் கட்டி இருப்பதைக் கண்டு பிடித்தனர்.. அதன்பின் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். என்னை உலுக்கியெடுத்த இந்த அதிர்ச்சியைச் சமாளிக்க முடியாமல் நான் தவித்துவிட்டேன். என்னதான் வைத்திய வசதிகள் பெருகிய நாடென்றாலும் நெருக்கமானவர்களிற்கு ஆபத்தான நோய் எனும்போது இந்ந மனம்படுகிறபாடு இருக்கிறதே! இங்கும் மனிதர்கள் வைத்தியம் பலனளிக்காமல் மறையும் நிதர்சனம் எம்முன் விரிந்து கிடக்கிறதல்லவா. எத்தனை தடவைதான் வைத்தியர்களும் தாம் செய்யவிருக்கும் சிகிச்சைகள் பற்றி பொறுமையாக எனக்கு விளங்கப்படுத்தியும் எனது மனம் சமாதானமாகாமல் இரவுகளெல்லாம் துங்கா இரவுகளாயின. எந்தத் தகப்பனிற்குத்தான் சிவந்து சோர்ந்த கண்ணுடன் தன்னிடம் வரும் தன் மகனைக் காணச் சகிக்கும்? பல சந்தர்ப்பங்களில் எனக்கு ஆறுதல் கூறியபடி தானும் தேம்புவார் அப்பா. ஒரு நிமிடம" என்றுவிட்டு மீன்டும் உணவுகளை நிறைத்து வர அப்பால் நகர்ந்தார் டெனிஸ்.
லிசாவின் முகத்திலும் சோகச் சாயல் அப்போது படர்ந்திருந்தது. லிசா மெதுவான குரலில் கூறினார் "டெனிசின் இளமைக் கால அதிர்ச்சிகள் இன்னும் அவரை வதைக்கத்தான் செய்கின்றன.
உணவுத்தட்டுடன் வந்த டெனிஸ் மீண்டும் தொடர்ந்தார். எங்களின் இந்த மனச் சஞ்சலங்கள் தோய்ந்த பேச்சுக்களைப் பல தடவை கேட்ட நேர்ஸ் ஒருவர் அறிமுகப்படுத்திய பெண்தான் லிசா. இரவு பகல் பாராது ஆராய்சசிகளையே தனது சுவாசமாகக் கொண்ட இளம் பெண்தான் லிசா. ஆராய்ச்சிக்கூடம்தான் அவரின் வீடு.. பல தடவை அவரிற்கேற்பட்ட தலைச்சுற்றுக்களை வேலைப்பழுவினால் என லிசா அலட்சியப்படுத்தியதன் விளைவு ஒரு இளம் விஞ்ஞானியின் மூளையிலேயே இரகசியமாக வேர்விட்டுத் தனது கிளைகளைப் பரப்பியிருந்தது Brain tumer என்ற மூளைக்கட்டி நோய்.
வைத்தியர்கள் அதைக் கண்டுபிடித்தபோது அது மிகவும் அபாயக்கட்டத்தில்த்தான் இருந்தது. சத்திரசிகிச்சை செய்யாவிடின் அவர் இறப்பது நிச்சயம். ஆனால் சத்திரசிகிச்சை வெற்றியளிக்கும் வாய்ப்பும் மிகக் குறைவானதே. வேறெந்த வழியுமற்ற நிலையில் லிசாவின் சத்திரசிகிச்சைக்கான நாள் குறிக்கப்பட்டது. அந்த நிலையிலும் உற்சாகத்துடன் இருந்த அப்பெண்ணை அங்குள்ள எல்லோரிற்குமே மிகவும் பிடித்துப்போனது. இரு துருவங்களாக விளங்கும் என்னையும் லிசாவையும் அறிமுகப்படுத்திய அந்த தாதிப்பெண் மனோதத்துவம் தெரிந்தவர்தான். விரைவிலேயே லிசாவின் உற்சாகம் என்னையும் அப்பாவையும் தொற்றிக்கொண்டது. அதுமட்டுமா? அந்தக் கலகலப்பு நிறைந்த பெண்மேல் காதல் வயப்பட்டேன் நான். எவ்வளவுதான் தைரியமான பெண்ணாக இருந்தாலும் இப்படியான நிலையில் மனம் அன்பிற்கு ஏங்கும் போலும். காதலைப் பற்றியே சிந்திக்க நேரமின்றி தனது ஆராய்ச்சிகளையே காதலித்தபடி இருந்த அப்பெண்ணும் அதே உணர்வுக்கு உள்ளானாள்.
லிசாவின் வாழ்வு இன்னும் சில நாட்களில் முடியக்கூடும் எனத் தெரிந்தும் எங்கள் இருவரின் காதலும் அவளின் மூளையிலிருந்த கட்டி போல, வளர்ந்துதான் வந்தது."
வெயில் தாழச் செல்ல லேசான குளிருடன் கூடிய காற்று எம்மைத் தழுவிச் சென்றபடி இருந்தது. எதுவும் பேசத் தோன்றாது மௌனம் மட்டுமே எங்கள் மொழியாய் டெனிஸின் முகத்தைப் பார்த்தபடி இருந்தோம்.
"எவ்வளவு எதிர்பாராத விடயங்கள் நடக்கிறது பாருங்கள். பெரிதாக ரிஸ்க் எதுவுமில்லை எனச் சொல்லி சத்திர சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவிற்கு அந்த மேசையிலேயே heart attack வந்து மயக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது. அவர் மிகவும் பயந்து விட்டார் என்றார்கள், வைத்தியர்கள் அவரின் இருதய இயக்கங்களை சரியாகக் கணிக்கவில்லை வழக்குப் போட்டு நஸ்டஈடு வாங்கு என்று சில நண்பர்கள் கூறினர். நான் எதுவுமே செய்யவில்லை. எனக்கு இறந்த அப்பாவை நினைத்து அழவா சாவின் விளிம்பில் நிற்கும் லிசாவை நினைத்துக் கலங்கவா எனப் புரியாமல் நான் தவித்த தவிப்பு இருக்கிறதே! டெனிஸின் உடல் ஒரு தடவை அதிர்ந்து குலுங்கியது.
"ஆனால் நடந்ததைக் கேளுங்கள். லிசா கட்டி அகற்றப்பட்டு உயிர் பிழைத்த அதிசயம் சில தினங்களில் நடந்தது. அதன் பின்பும் மூன்று மாதங்கள் வரை அவள் பல வைத்திய சாலைகளில் மாறி மாறி இருந்து முற்றாகக் குணமாகும் வரை எனது பொழுதுகளெல்லாம் அவளுடனேயே கழிந்தது. பின்னர் அவளும் நானும் ஒன்றாக வாழ ஆரம்பித்தோம்".
ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் கதையைச் சொல்லியபடி இருந்த டெனிஸ் தன்னைத் தானே உணர விரும்புபவர் போல எதுவும் பேசாது இருந்தார். பின்பு மெதுவாகக் கூறினார் "எங்கோ கோளாறு ஆரம்பமானது, லிசாவிற்கு உடலில் உரம் வந்ததும் அவளின் உயர உயரப் பறக்கும் வேகமும் மீண்டும் உயிர்த்தெழுந்தது. நான் அவளுக்கேற்ற துணை இல்லையோ என்ற எண்ணம் அடிக்கடி தோன்றியது. போதாததுக்கு எனக்குக் குழந்தையென்றால் கொள்ளைப் பிரியம். அவளோ குழந்தைகள் தனது முன்னேற்றத்துக்குத் தடை என நினைப்பவள். வெறுமையான வாழ்வைத் தொடர முடியாமல் நாங்கள் பிரிந்து விட்டோம். "ஆனாலும் ஒரு விதத்தில் நான் லிசாவிற்கு நன்றி கூற வேண்டும். எனது தந்தையின் மறைவால் அன்று நான் மனம் உடைந்து போகாமல் பேசிப் பேசி என்னை வலுவுள்ளவன் ஆக்கியது அவளின் அன்புதான் .
மேலே கரிய மேகங்கள் சூழத் தொடங்க களைத்துப்போன குழந்தைகளும் எம்மிடம் ஓடி வந்தனர். நன்றாக விளையாடிய திருப்தியுடனும் குளிர் பானங்களை எடுத்து ஒரே மூச்சில் குடித்தனர்.
கோடை காலச் சந்தோச தினங்கள் விரைவில் ஓடிப்போனது.
காலமும் எவருக்காகவும் காத்திருக்காமல் தன் கடமையைச் செய்தது. குளிர் மனிதரைப் பிடுங்கி எடுத்த ஒரு காலையில் பூனைக் குட்டிகள் போலப் போர்வைக்குள் சுருண்டிருந்த குழந்தைகளை எழுப்பி சந்திர மண்டலத்திற்குப் போவது போல வெளிக்கிடுத்த வேண்டும் என்ற எண்ணமே அலுப்பை ஏற்படுத்தியது. இனி ஒரு வாரத்திற்கு சாராவும் வரமாட்டா. நாளைக்கு மறுநாள் டெனிஸின் பிறந்த நாள் வருவதால் இன்று மதியமே தாயும் மகளுமாக அங்கே பயணப்பட இருந்தனர்.
நேற்றும் பின்னேரம் முழுவதும் வானமெனும் தலையணை பொத்துக்கொண்டது போல வெண் பஞ்சுகளாக பனி பூமியை வந்து முத்தமிட்டபடி இருந்தது. பஞ்சுப் பொதிகளாகக் குவிந்துகிடந்த முற்றத்துப் பனிகளையெல்லாம் கூட்டி அள்ளி snow man செய்கிறோமெனப் பிள்ளைகள் கொட்டமடித்தனர். அவரும் மூக்கில் கரட்டுடனும் தலையில் தொப்பியும் போட்டு கையில் ஒரு துடைப்பமும் வைத்தபடி கம்பீரமாகத்தான் இருந்தார். அதைப் பார்த்த பலரும் ஒரு நிமிடம் நின்று அவரை ரசித்துவிட்டுச் சிரிப்புக்களை உதிர்த்தபடி சென்றனர். கையில் ஒரு பரிசுப் பொருளுடன் வந்த ஒரு இளம் பெண் அப்பரிசை அவரின் பனி உடலிற்கும் துடைப்பத்திற்கும் இடையிற் செருகவே குழந்தைகளின் உற்சாகம் கரைபுரண்டது.
காலை நேரப் பரபரப்புடன் பம்பரமாகச் சுழன்றபோது தொலைபேசி அழைத்தது. நிரு அதை எடுத்துக் கதைத்துவிட்டு முதலில ஓடிப்போய் தனது தங்கையிடம் சொன்னான" சாரா இண்டைக்கு உன்னோட வாறாள் உனக்கு குளுக்(அதிஸ்டம்)"...... பின்பு " அம்மா உங்களைப் போகேக்கை வந்து சாராவைக் கூட்டிப் போகட்டாம்."
சாரா வீட்டிற்கு நாங்கள் போனபோது சாராவின் அம்மா சோபாவில் படுத்திருந்தவ மெதுவாகக் கூறினா, "எனக்கு நேற்று இரவிலிருந்து சரியான காய்ச்சலாக இருக்கிறது. இரவு வீட்டிற்கு வைத்தியர் வந்து பார்த்துவிட்டு இது ஒரு வித வைரஸால் ஏற்படும் கடும் காய்ச்சல் என்று மருந்து தந்தவர் " என்றா. காய்ச்சலால் சிவந்திருந்த முகத்தில் டெனிஸின் பிறந்த தினத்துக்கு அங்கு போக முடியாத கவலையும் சேர்ந்திருந்தது. பின்பு லிசா கூறினா "எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்வீர்களா..." எதுவானாலும் கூறுங்கள் என்று நான் கூறவே உள்ளே சென்று ஒரு பரிசுப் பார்சலை எடுத்து வந்தா. "லிஸா ஒவ்வொரு வருடமும் தவறாது வருவது போல இம்முறையும் வந்தவ. டெனிஸிடம் கொடுக்கும்படி அவ தந்த பரிசுப் பொருளை தவறாது உரிய நேரத்தில்ச் சேர்க்க வேண்டியது எனது கடமையல்லவா?" தயக்கமோ, தன்னிரக்கமோ, தனது செயலை உயர்த்திக் காட்டுவது போலவோ அன்றி ஒரு சாதாரண தொனியில்ச் சொன்னவர், டெனிஸிற்கான எங்களது பரிசையும் தருகிறேன்........ஒரு பார்சல் அனுப்பும் பெட்டி ஒன்றை வாங்கி அதனுள் வைத்து அனுப்பிவிடுகிறீர்களா? என்று கேட்டதுதான் தாமதம் தனது குட்டிக் கையால் அப்பாவிற்குப் பரிசளிக்கக் கீறிய ஒரு படத்தை சாரா ஓடிப் போய் எடுத்துக் கொண்டு வந்து தந்தா. எனக்கு நன்றி கூறியபடி லிசாவும் தயாராகக் கட்டி வைத்திருந்த பரிசுப் பொருளைத் தந்துவிட்டு பணத்தை எடுக்க உள்ளே சென்றா. மிக அழகாகக் கட்டப்பட்டிருந்த அந்த பரிசுப் பொருளின் மேல் எனது பார்வை சென்றது. இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்............. நேசத்துடன் Lisa to Lisa என எழுதப்பட்டிருந்தது. சட்டென்று என்னுள்ளே ஓரு விபரிக்க முடியாத உணர்ச்சிகளுடன் கூடிய அலை ஒன்று பொங்கிப் புரண்டது. நான் நிமிர்ந்து லிசாவைப் பார்த்தேன். லிசாவின் சுடர் விடும் அழகிய முகத்தில் சோர்வையும் மீறிய ஒரு இதமான சிரிப்புத் தவழ்ந்து கொண்டிருந்தது.

அனைத்துலக ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் - தமிழின் வெளியீடான புலம் சஞ்சிகையில் கௌரி மகேஸ் அவர்களால் எழுதப்பட்ட சிறுகதை இது.அவர் நட்புடன் தந்ததால் இங்கு பகிரப்படுகிறது.




16 comments:

கோகுல் said...

சுவாரஸ்யமாக இருக்கிறது.எழுதியவருக்கும்,பகிர்ந்த உங்களுக்கும் பாராட்டுக்கள்!

இராஜராஜேஸ்வரி said...

குழந்தைகளெல்லாம் வர்ணங்கள் பூசப்பட்ட முகத்துடன் வண்ணத்துப்பூச்சிகளாக, வண்டுகளாக, கரடிகளாக, புலிகளாக வளைய வந்து கொண்டிருந்தன. //

மிக அழகாக இருக்கிறது.

இராஜராஜேஸ்வரி said...

நேசத்துடன் Lisa to Lisa என எழுதப்பட்டிருந்தது//

நேசத்துடனான பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

Riyas said...

நல்லாயிருந்தது

குறையொன்றுமில்லை. said...

சற்றே பெரிய சிறுகதை வெகு சுவாரசியமா இருக்கு

அம்பலத்தார் said...

ஊக்கம் தரும் வார்த்தைகளிற்கு நன்றி கோகுல்

அம்பலத்தார் said...

சகோ. இராஜராஜேஸ்வரி நீங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் ரொம்ப ரசித்துப்படிப்பவர் என்பது புரிகிறது உங்கள் கருத்துக்களிற்கு நன்றிகள்

ரெவெரி said...

அருமை...ரெவெரி

Muruganandan M.K. said...

நல்ல சிறுகதை. கெளரி மகேஸ் எனது உறவினரும் கூட அவருக்கு எனது பாராட்டுகள்.

அம்பலத்தார் said...

நன்றி றியாஸ்

அம்பலத்தார் said...

சகோ. லட்சுமி உங்கள் வார்த்தைகள் உற்சாகம் தருகின்றது.

அம்பலத்தார் said...

Thanks Revari

அம்பலத்தார் said...

அடடா கௌரி உங்க உறவினரா டாக்டர்? உங்களிற்குமட்டுமன்றி உங்க உறவுக்காரங்களுக்கும் இயற்கை இப்படியொரு வரத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறது. எல்லோரும் அசத்தலாக எழுதுகிறீர்கள். இன்னமும் எத்தனை உறவுக்காரங்க இப்படிப் புறப்பட்டிருக்கிறார்கள். கூறினால் படிப்பதற்கு இன்னமும் பல புதையல்கள் கிடைக்கலாம்.

பராசக்தி said...

கௌரி மகேஷ் அவர்கட்கு வாழ்த்துக்களும் பூங்கொத்தும் உரித்தாகட்டும். அழகான கவிதை போன்ற உங்கள் படைப்பு , வாசிப்போரையும் "எழுதினால் என்ன" என்ற நிலைமைக்கு ஒரு உந்துதல் தருகின்றது. வாழ்வின் ஒவ்வொரு கணமும் அழகே ,அதை ரசிக்கின்ற மனது மட்டுமல்லாமல் மற்றவரையும் ரசிக்கச்செய்கின்ற உங்கள் கலைப்பணி தொடர வாழ்த்துக்கள் .

தனிமரம் said...

ஜேர்மனிய இயல்பு மக்களின் இன்னொரு அன்பைச் சொல்லிய விதம் அழகு அதைப் பகிர்ந்த உங்களுக்கும் நன்றி ஐயா!

Anonymous said...

குழந்தைகளும் எம்மிடம் ஓடி வந்தனர். நன்றாக விளையாடிய திருப்தியுடனும் குளிர் பானங்களை எடுத்து ஒரே மூச்சில் குடித்தனர்.

This satisfaction is very important in life.

Very nice story.

Sivaganesan
siva59s@yahoo.com