நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Wednesday

மதம் பிடிச்சு அலையுறமா?


இந்த வயதுபோன காலத்திலையும் அம்பலத்தாரின் லொள்ளைப் பாருங்கோ! எப்பபார் விவஸ்த்தை இல்லாமல் அந்தமாதிரிக் கசமுசா கதைகளாக எழுதிக்கொண்டு என கொஞ்சச்சனங்கள் கிசுகிசுப்பது எனது காதிலையும் விழுந்தது. அதுதான் இன்று கொஞ்சம் வித்தியாசமான ஒரு விடயத்தைப்பற்றிச் சொல்லவாறன்
எங்கட சுவாமி நித்தியானந்தாவும் மதம்பிடித்து அடக்கமுடியாமல்தான் அந்தவேலைகள் எல்லாம் செய்தவர். அதைப்பற்றியும் பின்னாடி எழுதுகிறேன். இப்ப இந்த விசயத்தைக் கேளுங்கோ.
நான் பாருங்கோ இங்க ஜேர்மனிக்கு வந்த புதிதில் ஊரோரமா காட்டுப்பக்கத்திலை இருக்கிற ஒரு விடுதியிலை இடம் ஒதுக்கிவிட்டாங்கள். எனக்கும் மனுசிக்குமா ஒரு சின்ன அறைதான். சமையல் எண்ட பேச்சுக்கே இடமில்லை. மணியடிச்சாச் சோறு என்கிற நிலைமைதான். நேரத்துக்கு நேரம் விடுதியிலை கீழே இருக்கிற உணவகத்திலை அவங்கள் சாப்பாடு என்ற பேரிலை தாற களிகளையும், மாடு, ஆட்டுத் தீவனங்களையும் (அதுதான் சலாட்டு வகைகளைச் சொன்னனான்.) ஒரு மாதிரி விழுங்கிப்போட்டு அறையிலேயே அடைஞ்சு கிடக்க வேண்டியதுதான். ஊரிலை தோட்டம், காணி பூமி என்று ஓடித் திரிஞ்ச எனக்கும், எப்ப பார்த்தாலும் சமையல்கட்டெண்டு கிடந்த மனுசிக்குமெண்டால் பொழுதே போகாமல் படுவிசராக்கிடக்கும்.

ஒரு நாள் எங்கட அறைக்கதவை யாரோ தட்டினார்கள். யாரா
இருக்குமென்று யோசிச்சுக் கொண்டு கதவைத் திறந்தால்......2,3 பொடிப்பிள்ளையளும் ஒரு அக்காவுமாக நின்றினம்.

கதவைத் திறந்த உடனை வலு நட்போட நாங்களும் சிலோன்தான் உள்ளவரலாமோ? என்றபடி உள்ளே வந்தினம். காம்பில அடைபட்டுக் கிடக்கிறது சரியான கஸ்டமா இருக்குமெண்டு எங்களுக்கும் தெரியும். உங்களுக்கு நாங்கள் எங்கட ஊர் புட்டும் மீன் குழம்பும் கட்டிக்கொண்டு வந்திருக்கிறம். இரவைக்குச் சாப்பிடுங்கோ என்று சில பொட்டலங்களையும் தந்தினம். எனக்கெண்டால் மீன் குழம்பை நினைக்க அப்பவே வாயூறத் தொடங்கிவிட்டுது. அப்பிடி இப்பிடி என்று கொஞ்ச நேரம் கதைச்சுக் கொண்டு இருந்திட்டு , உங்களுக்கும் ஒரு பொழுது போக்கா இருக்கும் வாற சனிக்கிழமை நாங்கள் வந்து உங்களை எங்கட கோயிலுக்குக் கூட்டிக்கொண்டு போறம். அங்க இன்னும் கன தமிழாக்கள் வருவினம் அவர்களுடனும் கதைச்சுப் பழகலாம் என்று சொல்லிச்சினம். ஊரிலை வாயோயாமல் கதைச்சுக்கொண்டு திரிஞ்ச என்ரை மனுசிக்கெண்டால் புழுகம் தாங்கேலாமல் அப்ப நாங்கள் கட்டாயம் வாறம் மறக்காமல் வந்து கூட்டிக்கொண்டு போங்கோ என்றா
ஒரு மாதிரியா சனியும் வந்துது, டானெண்டு சொன்ன நேரத்துக்கு தம்பியொருத்தர் வந்து வானிலை எங்களையும் ஏத்திக்கொண்டு புறப்பட்டார். வானுக்கை பார்த்தால் வேள்விக்கு வெட்டக்கொண்டு பொற ஆடுகள் மாதிரி முழிசிக்கொண்டு சில பொடி பெட்டையளெல்லாம் இருந்தினம். அவையோட கதைச்சுப்  பார்த்ததில் விளங்கியது அவையளும் இந்த நாட்டுக்கு வந்து கொஞ்ச நாள்தானெண்டு.

ஒரு மாதிரியா ஒரு மணித்தியால ஓட்டத்துக்குப் பிறகு ஒரு இடத்தை போய்ச் சேர்ந்தம். அங்கை மண்டபம் மாதிரியும் இல்லாமல் ஒரு அறைமாதிரியும் இல்லாத இரண்டும் கெட்டான் இடத்துக்கை நிறைய எங்கட சனங்கள் கூடி இருந்தினம்.
பிரார்த்தனை, ஜெபம் எல்லாம் நடந்துகொண்டிருந்தது.  
முடிஞ்சாப்பிறகு ஒருத்தர் - எனக்கு இப்ப எல்லாம் எங்கட சாமிப்படங்களைப் பார்த்தாலே உடம்பெல்லாம் எரியுது, தலையுக்கை எதோ செய்யுது என்றெல்லாம் சொன்னார். அதுக்கு அங்க போதகர் என்று நின்றவர் அவை எல்லாம் கடவுள்களே இல்லை சாத்தான்கள் சாத்தான்களையெல்லாம் தூக்கிக் குப்பையில் போடுங்கோ என்று கேக்கிறவைக்கெலல்லாம் ஒருவித வெறியைத் தூண்டிவிடுற மாதிரிப் பேசினார். இதுக்குப் பிறகும் இரண்டு மூன்று தடவை டவுனைச் சுத்திப் பார்க்கிற ஆசையிலை அவை அனுப்பின வாகனத்திலை அங்கை போனால் ஒவ்வொரு முறையும் கிட்டத்தட்ட இதே கதைதான். இதற்கிடையிலை ஆரோ கதையைக் கட்டிவிட்டிட்டாங்கள் வலு கெதியிலை அம்பலத்தார் ஞானஸ்நானம் எடுக்கப்போறார் எண்டு, எனக்கெண்டால் இஞ்சத்தையக் குளிருக்கை சும்மா குளிக்கிறதெண்ண்டாலே கள்ளம், இதுக்குள்ளை இவங்கள் ஞானஸ்நானம் என்று சொல்லி என்னைக் கொண்டுபோய் எந்த ஆத்திலை, குளத்திலை தாட்டெடுக்கிறானுகளோ என்ற பயத்திலை அந்தப்பக்கம் போறதையே விட்டிட்டு அவையளைக்கண்டால் ஒளிச்சு ஓடித்திரியத் தொடங்கிவிட்டன்..

இப்ப கிட்டடியிலை நடந்த ஒரு விசயத்தையும் சொல்லுறன் கேளுங்கோ. எங்கட வீட்டுக்குக் கிட்ட இருந்த என்னைப்போன்ற பழசொண்டுக்கு விசாப் பிரச்சனை வந்திட்டுது. அவரெண்டால் அண்ணை எனக்கு ஒரே கவலையாக் கிடக்கு ஒருக்கா கோயிலுக்கு போய் வந்தால்தான் ஒரு நிம்மதியா இருக்கும்போல கிடக்கு கூட வாருங்களன் எண்டார். நானும் சரியென்று ஒருநாள் வேலைக்கு லீவும் போட்டிட்டு அவர் சொன்ன கோயிலுக்குக் கூட்டிக்கொண்டு போனன். அங்கையென்றால் பூசைகளைல்லாம் தடல்புடலாக நடந்துது. நான் பக்தியில கனநேரம் கண்ணை மூடிக்கொண்டு நிண்டுட்டன் போல. கண்ணைத் திறந்து பார்த்தால் அந்த அண்ணையைக் காணலை. எங்கையெண்டு தேடினால் பக்கத்திலை காலத்தில ஊரிலை அகதியாக பாணுக்கு கியூ நிண்டதுபோல ஒரு பெரிய வரிசை நிக்குது. அதில இந்ந அண்ணையும் அடிச்சுப் பிடிச்சு நிற்கிறார். உங்க என்னண்ணை செய்யுறியள் என்று கேட்டன். முக்காலமும் அறிந்த பிரசித்தி பெற்ற காண்ட ஜோசியர் ஒருத்தர் வந்திருக்கிறாராம். அந்தாளிட்டை என்ரை காலம் எப்பிடிக் கிடக்கெண்டு கேப்பமெண்டு நிற்கிறன் என்றார்.

தங்கட பெயர் பதிச்சுப் பூசையிலை வைச்ச தகடொன்றை வேண்டி கோயில் நிலத்திலை பதிச்சால் தங்கட பரம்பரைக்கே நல்லது என்று கொஞ்ச சனம். இன்னொரு பக்கத்தாலை அதுக்கு ஆரவாரமாக ஆய்த்தங்கள் செய்தபடி.

இன்னொரு பக்கம் அந்த ஓமம் ரொம்ப பிரசித்தம் இந்த அர்ச்சனை வலு நல்லதெண்டு பிரச்சாரம். இதுக்கிடையிலை இவர் பழசும் அதுக்குமிதுக்குமாக ஓடி ஓடி நோட்டுகளை எடுத்தெடுத்துக் குடுத்தபடி இருந்தார். பாவம் மனுசனுக்கு நாட்டாலேயே ஓடுற கட்டமெண்டு நான் காருக்கு மனுசன் பெற்றோல் அடிச்சு விடுறனெண்டு சொல்லவும் வேண்டாமென்டறூ மறுத்து கூட்டிக்கொண்டு வந்தால், மனுசன் எக்கச்சக்கமாக காசை இறைக்குதேயெண்டு ஒரே ஆத்திரம். சரி அவரின்ர நம்பிக்கையை நான் ஏன் கெடுப்பான் எண்டு பொறுமையாக ஒரு ஓரமாக உட்காந்திட்டன்.

கடைசியாக அவர் பயபக்தியாக ஜோசியரிடம் போய் நிண்டார். ஜோசியர் அப்பிடி இப்பிடி நீட்டி முழங்கி ஏதேதோ சொல்லியிட்டு முத்தாய்ப்பாக உமக்குக் கெட்டகாலம் பிடிச்சு அலைக்குது ..... உம்மை ஒரு கெட்ட கிரகம் பார்க்குது அதை விலக்க வேணுமெண்டால் கொஞ்சம் செலவு செய்து சாந்தியொண்டு செய்ய வேணுமெண்டார். அதுக்கு எவ்வளவு முடியுமெண்டு இவர் கேட்க அவன் சொன்ன தொகையை கேட்டதும் எனக்கெண்டால் தலை ஒருக்கால் பயங்கரமாகச் சுத்திச்சுது. இவரெண்ண்டால் சரி ஐயா ......வாற கிழமை வாறன் என்றார்.

எனக்கு இந்த விசயங்களை எல்லாம் பார்க்க கோயிலுக்கு வந்தமோ இல்லாட்டில் எதாவது வழிப்பறி கோஸ்டியிட்டை மாட்டுப்பட்டிட்டமோ என்கிறமாதிரிக் கிடந்துது. ஒருவழியா தலைதப்பினது தம்பிரான் புண்ணியமெண்டு பழசையும் இழுத்துக்கொண்டு வெளிக்கிட்டன். வாற வழியிலை பழசு சொல்லிச்சுது பாத்தீரே காண்டக்காரன் அந்தமாதிரிச் சொன்னான். அந்த சாந்தி பூசையை செய்து பாக்கலாமெண்டு யோசிக்கிறன என்றார். எனக்கெண்டால் அதைக் கேக்க விசர்தான் வந்தது. அட உதைச் சொல்லுறதுக்கு உவன் எதுக்கு உம்மட முகத்திலை தெரியிற கவலையைப்பார்த்தால் எவனும்தான் சொல்லுவான் நீர் ஏதோ கவலையிலை திரியிறீர் எண்டு. சும்மா மோட்டுத்தனமா உப்பிடிக் காசுகளைச் செலவழிக்காமல் பிரச்சனை இறுக முந்தி என்ன செய்யலாம் எங்கை போகலாம் என்கிற விசயங்களைக் கவனியும் என்று நல்லாக் குடுத்துவிட்டன். இதுக்குப் பிறகு மனுசன் எனக்குச் சொன்னால் பேசிப்போடுவன் என்ற பயத்திலை வேற ஆக்களோட அந்தக் கோயிலே கதி எண்டு போய் வந்திச்சுது. இப்படியே 2,3 மாதமும் ஓடீட்டுது. ஜோசியரும் கொஞ்ச இளிச்ச வாயனுகளிட்டை கறக்கிறவரை கறந்து கொண்டு அடுத்த ஊருக்கு மூட்டையைக் கட்ட எங்கட ஆளுக்கும் விசாப் பிரச்சனை முத்தி காவல்துறை வந்து மூட்டை முடிச்சைக்கூட கட்ட விடாமல் நாட்டைவிட்டு ஏத்தி அனுப்பவும் சரியா இருந்துது.

சொல்லத் தொடங்கினனான் இதையும் ஒருக்கால் சொல்லுறன் கேளுங்கோ. 2, 3 கிழமைக்கு முன்னம் ஒருநாள் காருக்குப் பெற்றோல் அடிப்பமெண்டு பெற்றோல் நிலையத்துக்குப்போனால் எங்கட காருக்கு முன்னாலை ஒரு வெள்ளைக்காரப் பொம்பிளை எங்கட பெண்டுகளைப்போல வடிவாச் சீவிமுடிச்சு சீலையும் கட்டிக்கொண்டு நின்று பெற்றோல் போட்டா. என்ரை செல்லம்மாவுக்கு உப்பிடி என்னவும் விசயங்களைண்டால் கேக்கவும் வேணுமே, உடனை என்ன புதினமெண்டு அறிவமென்று காருக்கால குதிச்சு அந்த மனுசியோட கதைக்கப்போட்டா, சாவகாசமா கதைச்சுப்போட்டு வந்து அவளப்பா Hare Rama Hare Krishna அணியாம். தங்கட கோயில் விலாசம் ரெலிபோன் நம்பரைல்லாம் தந்திட்டுப்போறா எங்களையும் ஒருநாளைக்குப் பஜனைக்கு வரட்டுமாம் என்றா.

உதென்னடியம்மா கே.பி. அணி, டக்ளஸ் அணி என்ற மாதிரி Hare Rama Hare Krishna  அணி எண்டு பகிடி பண்ணினாலும் அடுத்த வெள்ளிக்கிழமை அவங்கட கோயிலுக்குப் போனம்.

அங்கை பூசை, பஜனை எல்லாம் அந்தமாதிரி வடிவா நடந்துது.அங்கையென்றால் எங்களைத் தவிர மற்றவை எல்லாம் வெள்ளையள்தான். பிறகு எல்லாரும் இப்ப சாப்பிடலாம் அடுத்த மண்டபத்துக்கு வாங்கோ என்றார்கள்.  இப்ப சாப்பாட்டை கையாலை சாப்பிடுறதோ இல்லாட்டில் கரண்டியாலை சாப்பிடுறதோ என்று மனதுக்கை கணக்குப் போடத்தொடங்க முன்னமே அவங்கள் எல்லாம் ஊரிலை பந்தியள்ள சாப்பீடுறமாதிரி நிலத்திலை வரிசையா உட்கார்ந்து கையாலை அந்தமாதிரிச் சாப்பாட்டை ஒருபிடி பிடிச்சாங்கள்.

சாப்பாடு முடிய தியானமும் பிறகு சமய வகுப்பும் நடந்துது. வகுப்பிலை என்றால் ஆத்மா, கர்மா அது இதெண்டு எங்களுக்கே தெரியாத எங்கட சமய தத்துவங்களை விளக்கினாங்கள். எனக்கெண்டால் அவை டொச்சிலை சொன்னதுகளை வடிவாக் கிரகிக்கேலாமல் போச்சே எண்டு கவலையாப் போச்சு. ஊரிலை எங்கட பள்ளிக்கூட சமய வாத்தியள் கூட இப்பிடி விளக்குவினமோ தெரியாது. கடைசியிலை ஒரு கேள்வித்தாளை ஒவ்வொருவருக்கும் கொடுத்து விடையளிக்கும்படியும் கேட்டார்கள். அப்பத்தான் எனக்கு இஞ்சை தன்ரை சொந்தச் சமயத்தைப் பற்றி ஒழுங்காத் தெரியாமல் அதாலை அடுத்த மதத்துக்கு பாஞ்சு அதையும் சரியாப் புரியாமல் ஓடித்திரியிற எங்கட சனங்களைக் கொஞ்ச நாளைக்கு உந்த வகுப்புக்கு அனுப்பினால் என்ன என்ற ஞானோதயம் உதிச்சுது.

அதோட ஊரிலை தலைக்கு வெளியிலையும் ஒண்டுமில்லாமல் உள்ளுக்குள்ளையும் ஒண்டுமில்லாத காவியளின்ரை அட்டகாசங்களையும், இந்தியாவிலை சுவாமி நித்தியானந்தா, சந்திரசாமி போன்ற பம்மாத்துச் சாமியார்களையும் மற்றும் விஸ்வ இந்துப்பரிசத், ஆப்கானிலை தலைபான், பாலஸ்தீனத்திலை கமாஸ் போன்ற தீவிர சமய வெறி பிடிச்ச அமைப்புகளையும், இங்கை எங்களுக்குப் பக்கத்திலை கொல்லையுக்கை நடக்கிற வட அயர்லாந்து கத்தோலிக்க புர்ட்டஸ்தாந்து பிரச்சனை என வஞ்சகமில்லாமல் எல்லாச் சமயகாரரும் மதம் மதமெண்டு மதம் பிடிச்ச யானைபோல நிற்கும்போது இப்பிடியும் சில விசயங்கள் நடக்குதே எண்டு வியப்பாக் கிடந்தது.

18 comments:

இராஜராஜேஸ்வரி said...

வியப்பான பகிர்வு. அருமையான விடயங்கள்.

நிரூபன் said...

ஒவ்வொரு மதங்களும் எப்படியெல்லாம் வாழ்கின்றன என்பதனை அருமையாகப் பகிர்ந்திருக்கிறீங்க.

புட்டும் மீன் கறியும் எதிர்பார்ப்பும்,
ஞானஸ்தானம் பெற்ற நகைச்சுவை எழுத்து நடையும் சிரிப்பை வரவழைக்கின்றது.

அம்பலத்தார் said...

கருத்திற்கு நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா....

maruthamooran said...

வணக்கம்....!

தங்களின் அனுபவம் சூப்பர். அதுவும், இந்த ஞானஸ்தான விசயத்துக்குள் மாட்டுப்பட்டு இப்பவும் அதுக்குள்ள உழலும் ஆட்களும் இருக்கத்தான் செய்யினம்.

தமிழனின் நாடோடி வாழ்வு பல விசயங்களை அவனுக்கு சொல்லிக் கொண்டேயிருக்கிறது.

நல்ல ரசனையான பதிவு.

அம்பலத்தார் said...

Thanks for the visit & comment Mr.C.B. Senthilkumar

நிலாமதி said...

சில விடயங் களை உங்கள் மண் வாசனையுடன் சேர்ந்த நகைச்சுவையாக எழுதுகிறீர்கள்
வாசித்தால் மிகவும் சுவையாக இருக்கும்

அம்பலத்தார் said...

பதிவின் உள்ளடக்கத்தைமட்டுமன்றி எழுத்து, மொழி நடைகளையும் ரசித்துப் படிப்பவர் நீங்கள் என்பது புரிகிறது நிரூபன்

அம்பலத்தார் said...

மதங்கள் தாம் வாழ நம் புலம்பெயர் தமிழ் சமூகத்தினரை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கின்றன என்பதனைச் சொல்வதானால் அதற்கே பல பதிவுகள் போடலாம் மருதமூரான். முடிந்தவரை நம் புலம்பெயர் வாழ்வையும் எங்கள் இனிய இலங்கைத் தமிழையும் அனைத்துத் தமிழ்சமூகத்தினரிடையேயும் கொண்டுசெல்லவெண்டும் என்பதே எனது அவா.

அம்பலத்தார் said...

நிலாம்மா, நீங்கள் பதிவுலக நண்பர்கள் அனைவரையும் தட்டிக்கொடுத்து ஊக்குவிப்பவர் என அறிந்திருந்தேன். நகைச்சுவை உணர்வும் மிக்கவர் என்பதை இப்போ புரியமுடிகிறது. நன்றி

Anonymous said...

எமக்கும் வியப்பு தான் அம்பலத்தாரே...

அம்பலத்தார் said...

உங்கள் படைப்பு விகடனில் பிரசுரமாகியிருக்கே வாழ்த்துக்கள் ரெவெரி

பராசக்தி said...
This comment has been removed by the author.
பராசக்தி said...
This comment has been removed by the author.
பராசக்தி said...

தந்தை பெரியார் குளிப்பது குறைவு என கேள்விப்பட்டுள்ளேன். தலைக்கு வெளியிலை ஒண்டுமில்லாமல் உள்ளுக்குள்ளை விடயமுள்ள அனைவரின் (Sydneyயிலும் சிலபேர்)பழக்கவழக்கமும் ஒரே மாதிரியிருக்கு! குளிக்க விருப்பமில்லாததற்கு குளிரை ஏன் சாட்சிக்கு கூப்பிட வேண்டும்?
மதம் என்பது தனிப்பட்ட ஒவ்வொரு மனதிற்கும் கடவுளுக்கும் இடையிலான உறவுக்கு பெயரிட்டதாக எடுக்கலாமா? அப்படியாயின் மதம் மாறுவதில் தப்பில்லை. மதத்தை மற்றவரின் மேல் திணிக்காமல் இருந்தால் சரியே!
இன்னும் விவரமாக கூறினால் இந்து சமயம் யார் மேலும் திணிக்கப்படுவதில்லை. Hare Rama Hare Krishna அமைப்பு தாமாக முன்வந்து அணி சேர்ந்தவை.

கவி அழகன் said...

Naddu nadappu

ஆத்மா said...

நல்ல பதிவு...உண்மையில நடக்கும் விசயங்கள் தான்...

காட்டான் said...

உந்த அனுபவம் எனக்கும் இருக்கு அம்பலத்தார்......,

ஏன் இப்பகூட அடிக்கடி தமிழ் பெயர்கள் போட்டிருக்கும் வீட்டு கதவுகளை தட்டி உங்களுக்கு ஒரு சேதி கொண்டு வந்திருக்கேன்னு சின்ன பிள்ளைகளோட வாசல் கதவில நிக்கினம்.

ம.தி.சுதா said...

ஐயா இப்பத் தான் படிக்கிறேன்...

எனக்க ஒரு முறை நீங்கள் இட்ட கருத்துரையில் இருந்து புரிந்து கொண்டேன் நிங்கள் எங்கோ நல்ல அடி வாங்கியிருக்கிறிங்கள் என்று..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவரின் முதல் குறும்பட வெளியீடும் தமிழ் இணைய உலகில் வித்தியாசமான வெளியீடும்