நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Sunday

மறக்கப்படும் ஆழிப்பேரலை அவலங்கள்

இன்று 26.12.2011 ஆழிப்பேரலை அழிவின் ஏழாம் ஆண்டு நிறைவு நாள்.
தமிழீழத்தில் என்றுமே நிகழ்ந்திராத சில மணி நேரத்தில் வரலாறுகாணாத உயிர், உடமை பேரழிவுளை ஏற்படுத்தி மிகப்பெரும்   அழிவு
ளைத் தந்த சுனாமி பேரலை ஏற்பட்டு இன்று ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன.கடலை நம்பி, கடலே வாழ்வாக வாழ்ந்த மக்களை கடலே கொன்றொழித்த சுனாமிப் பேரலை  இந்தோனேசியாவின் சுமாத்திராதீவின் கடற்பரப்பில் பெரும் குமுறலாக எழுந்து இந்தோனேசியா,தென்னிந்தியா, தமிழீழம், சிறிலங்கா,  போன்ற நாடுகளை தாக்கி தனது கோரப்பசியை தீர்த்துக்கொண்டு சில மணிநேரத்திலேயே வந்த சுவடு தெரியாமல் அடங்கிப்போனது.


தமிழீழத்தில் முல்லைத்தீவு, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணத்தின் வடமராட்சி ஆகிய கரையோரப்பிரதேசங்கள் சுனாமிப்பேரலையால் தாக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கடலால் அள்ளுண்டு போயினர். இதில் முல்லைத்தீவில் அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டனர்.
அம்பாறையும், மட்டக்களப்பும், தென்னிலங்கையின் காலி, ஹிக்கடுவ போன்ற கடலோரப் பிரதேசங்களும் பாதிக்கப்பட்டன.

நாம் மனிதர்கள்தான் இனம், மொழி, சாதியென பிரிந்து நின்று மோதிக்கொள்கிறோம், இயற்கை தமிழர், சிங்களவர், இஸ்லாமியர் என்ற பேதமின்றி ஆழிப்பேரலைமூலம்  அனைத்து இன மக்களையும் காவுகொண்டது.


சுனாமியால் பலிகொள்ளப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் செயற்பாடுகளும்  புலம்பெயர்வாழ் தமிழ் மக்களாலும் ஆரம்பத்தில் மிக வேகமாக  செய்யப்பட்டது. காலம் போகப்போக குறைந்து இப்பொழுது நினவுகூரும் நிகழ்வுகள்கூட அரிதாகி அந்தப் பாதிக்கப்பட்ட மக்கள் எம்மால் மறக்கப்பட்டுவிட்டனர்.


நான் சென்றவருடம் தாயகம் சென்றபோது பார்த்ததில் வடமராட்சிமுதல் காலிவரை பல கடற்கரையோர பிரதேசங்களிலும் மீள்கட்டுமானங்கள் இடம்பெறாத பல இடங்களைக் காணக்கூடியதாக இருந்தது. பல வீடுகள் உரிமை கோருவதற்கு யாரும் அற்ற நிலையில் புனர்நிர்மாணம் செய்யப்படாமல் இடிபாடுகளுடன் அனாதரவாக காட்சிதந்தன. ஹிக்கடுவ செல்லும் பாதையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களிற்கான நினவு இடத்தில் கல்வெட்டும் புத்தரும் கம்பீரமாக காட்சி தருகிறார்கள். ஆனால் அந்த நினைவுத் தூபியிலிருந்து ஒருசில கிலோமீட்டர் தூரத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசம் சோகமாக காட்சிதருகிறது. 

 
வடமராட்சியின் கடற்கரையோரங்களிலும் பாதிக்கப்பட்ட கட்டடங்களும் படகுகளும் ஆழிப்பேரலை அவலங்களின் சாட்சியாக இன்னமும் காட்சிதருகின்றன. 

ஆழிப்பேரலையின் அவலங்களை இவ்வளவு சீக்கிரத்தில் மறந்த எமக்கு முள்ளிவாய்க்காலின் பேரவலங்களை மறக்க ?...........   


புலம்பெயர் நாங்கள் இதையும் விரைவில் மறந்துவிடுவோம். ஏனெனில் தாயக மக்களின் உண்மையான நல்வாழ்வுபற்றியும், அவற்றை அடைவதற்கான தொலைநோக்கு பார்வைகொண்ட தீர்வுகள்பற்றியும் எம்மில் எத்தனைபேர் இதயசுத்தியுடன் சிந்திக்கிறோம். தாயக உறவுகளின் வாழ்வாதாரப்பிரச்சனைகள், அவர்களது அரசியல், அவர்களது நிரந்தர அமைதியான கௌரவமான வாழ்வுபோன்ற விடயங்கள் சுயலாபங்களுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும், அந்தஸ்திற்காகவுமே நம்மில் பலராலும் பேசப்படுகின்றது. எவ்வளவு தூரம் இதயசுத்தியுடன் செயற்படுகிறோம். சிந்திப்போமா?

9 comments:

Kumaran said...

// நாம் மனிதர்கள்தான் இனம், மொழி, சாதியென பிரிந்து நின்று மோதிக்கொள்கிறோம், இயற்கை தமிழர், சிங்களவர், இஸ்லாமியர் என்ற பேதமின்றி ஆழிப்பேரலைமூலம் அனைத்து இன மக்களையும் காவுகொண்டது.///

மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு இயற்கை தண்டனைகள் தருகிறது...
உண்மையாகவே இயற்கையைவிட மதம், இனம், ஜாதி என்று பலவற்றை காரணங்களாக கொண்டு போர்களின் மூலம் நாமே பல கோடி உயிர்களை எடுக்கிறோம்.மனிதனுக்கே தெரியவில்லை மனிதனின் அருமையை.

மறக்க முடியாத நினைவுகள்...2004 - ஆம் ஆண்டு சுனாமியின் பொழுது எனக்கு வயது 12..புத்தாண்டை வரவேற்கும் தருணத்தில் ஒர் அழிவை சந்தித்த நாள்..பள்ளி, விடு என்று எங்கு சென்றாலும் இந்த பேச்சே காதில் வந்தது.இப்பொழுதெல்லாம் கிறிஸ்துமஸ் தினம் வந்தாலே சுனாமியின் கோரம்தான் மனதில் வந்து நிற்கிறது.

நல்ல பதிவு.வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

எஸ் சக்திவேல் said...

பாரபட்சமற்ற பதிவு.

நிரூபன் said...

வணக்கம் ஐயா,
ஈழ மக்கள் வாழ்விலும், தென்னாசிய மக்கள் வாழ்விலும் மறக்க முடியாத மற்றுமோர் நிகழ்வினை மீட்டியிருக்கிறீங்க.

தப்பேதும் செய்யாத மக்களுக்கு கடல் அன்னை கொடுத்த சாபம். மறக்க முடியுமா இந்த நாட்களையும், நினைவுகளையும்?

அதிலும் சுனாமிக்கு வந்த பொருட்களை வடக்கு கிழக்கு மக்களிற்கு அனுப்பாது சுருட்டியோரை இப்போது நினைத்தாலும் கோபம் வருகிறது.

துஷ்யந்தன் said...

மறக்க முடியாத நிகழ்வு பாஸ் அது...
உங்கள் பதிவு மீண்டும் அவற்றை எல்லாம் கண் முன் கொண்டுவந்து விட்டது :(

என்னைத்தேடி..ஹர்ஷன் said...

சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னமும் முழுமையான உதவிகள் சேரவில்லை....
கொடுமையிலும் கொடுமை...

இன்று என் பதிவு;;; கிரிக்கெட் மொக்கைஸ்..::.. 2

மதுமதி said...

சுனாமியால் ஏற்பட்ட அவலநிலையை கட்டாயம் மக்கள் மறந்துதான் போனார்கள்..அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மறந்து போகவில்லை..அரசை எதிர்பார்த்தே அவர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்..பாதிக்க பட்ட மக்களை அரசு மறந்துவிட்டது என்பது உண்மைதான்..

அன்போடு அழைக்கிறேன்..

நாட்கள் போதவில்லை

ஹேமா said...

என்னைப் பொறுத்தமட்டில் மறக்கமுடியாத நாள் இந்த நாள்.நினைத்தாலே நெஞ்சம் பதறும் நினைவுகள் அடக்கிய சுனாமி !

Ramani said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

ஹேமா said...

பிறக்கிற ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் அம்பலத்தார் உங்களுக்கும் உங்கட செல்லம்மாவுக்கும் !