நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Friday

சினிக்கவிஞரின் இலக்கியத்திருட்டுக்கள்.


சினிமா என்பது ஒருகலா வாணிகம் என்றே சொல்ல வேண்டும்.சிறுவனை நம்பி வண்ணவண்ண மிட்டாய் வியாபாரம் செய்யும் வியாபாரிபோல், பட்டிதொட்டியெல்லாம் வாழும் பாமர ரசிகனின் ரசனையே தமிழ்ச்சினிமாவின் முக்கிய மூலதனமாகும்.
அந்த ரசிகனின் ரசனைக்கேற்ப சினிமாப் பாடல்களை சிங்காரித்துக் கொடுக்கவே பாடலாசிரியரும்,இசையமைப்பாளரும் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கிறார்கள். இலக்கியத் துளிகளுக்கு எளிமைவண்ணம் பூசி பாமரனின் இதயத்தில் இடம்பிடிப்பதில் கவியரசு கண்ணதாசனும் வைரமுத்துவும் கைதேர்ந்தவர்களல்லவா?
ஐயகோ! வார்த்தைகளில் இதயத்தை வருடும் கலையை இவர்கள் எங்குதான் கற்றனரோ? அழகு தமிழ் அருவியாய்க் காது வழிப்பாய்ந்து நம் இதயத்தை நனைக்கும் மாயம்தான் என்ன?
"வாளொற்றிப் புற்கென்ற கண்ணும்
அவர் சென்ற நாளொற்றி தேய்ந்தவிரல்"என்ற
வள்ளுவரின் வரிகள் புரிந்ததோ இல்லையோ
"மாலை சூடும் தேதி எண்ணிப் பத்து விரலும் தேயும்"எனும் (பாலைவனச் சோலை) கவிஞரின் தேனாய் ஒழுகும் வரிகள் நம் நெஞ்சை என்னமாய்க் கொள்ளை கொண்டது. 

மனங்கவர்ந்த காதலன் தன் கைப்பிடித்து மணமாலை சூடும் தேதியை எண்ணி எண்ணியே அவள் கைவிரல் தேய்கிறது. இந்த மென்மையை இதனிலும் இனிதாய்க் கூற வேறேதாவது வார்த்தைகள் இருக்கிறதா? நம் குலப்பெண்,  நிலமதிர நடக்கமாட்டாள்தான். அவள் மென்மலர்பாதங்கள் தீண்டுமின்பம் மண்மகள் காணாததுதான். அவள்தம் பாதங்களின் மென்மையும், அவள் நடைபயிலும் மெதுமையும் நாமறிந்ததுதான்.
"வண்ணச்சீறடி மண்மகள் அறிந்திலள்"எனக் கண்ணகியின் மென்பாதங்களுக்கு மெருகூட்டும் இளங்கோவின் கவியடிபற்றி
"உன்பாதம் மண் மங்கை காணதது"(என் ஆசை உன்னோடுதான்) என கவிவடித்து நின்றார் வைரமுத்து.
"செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீத
சந்தனமென்று ஆரோ தடவினர்" என்ற நந்திக்கலம்பக வரிகளைப் புரிந்துகொள்ள நாமொன்றும் தமிழாசிரியருமில்லை. இந்தக் கவிநயத்தைத் தேடிப்பிடிக்கும் பக்குவமும் எமக்கில்லை. ஆனாலும்

"மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் என்னைப் பூசுகிறேன்" 
(பாலைவனச் சோலை) என்ற வைரவரிகளில் இதன் பொருளுணர்ந்து நாமெல்லாம் சொக்கி நின்றதில்லையா என்ன? காதலில் சிக்குண்ட அந்த இளஞ்சிட்டுகளுக்கு எப்படியெல்லாம் வேதனை வருகிறது.....? மன்மதபாணம், மலர்க்கணைகள் பட்டதற்கே பதை பதைத்துத் தன்னையே குழைத்துப் பூசும் கற்பனை தமிழைச் சிறைப்பிடித்த இந்தப்பிறவிக் கவிஞனிற்குத்தானே வருகிறது.
கவியரசு கண்ணதாசனும் சளைத்தவரா என்ன?
நம் வாழ்வின் யதார்த்தங்களை, நம் உறவுகளின் எல்லைகளைப் பட்டினத்தார் பழந்தமிழில் நயம்படத்தான் தந்தார். என்னவென்று நான் சொல்ல ? அந்தப்பழந்தமிழைப் புரிந்கொள்ளும் மொழியறிவை நாமெல்லாம் தொலைத்து விட்டோமா? வேற்று மொழிகளைக் கற்கவேண்டிய சூழலில் எம் தாய்த்தமிழை கொஞ்சம் கொஞ்சமாக அழிய விடுகிறோமா? இத் தவிப்பை நாம் உணராமலே காலங்கள் உருண்டோட........ எதிர்காலத்துக்காய் எம் நிகழ்காலத்தை இழந்து வருகிறோமா? இல்லை .....நிச்சயமாக இல்லை . இந்த இயந்திரமயமான வாழ்வில் எப்படியோ நம் காதில் வந்து கவிநயம் மிக்க பாடல்கள் விழத்தான் செய்கிறது.அவை எம்மையெல்லாம் தட்டி எழுப்பிவிட்டு மட்டுமா செல்கின்றன? மனதை வருடும் இசையும் சேர்ந்து எம்மைச் சிலிர்த்தெழ அல்லவா வைக்கின்றன!
"அத்தமும் வாழ்வும் அகத்துமட்டேவிழி
அன்பொழுக மொத்திய மாதரும் வீதிமட்டே
விம்மி விம்மி இருகைத்தலம் மேல்
வைத்தமும் மாந்தரும் சுடுகாடுமட்டே" என்று நீட்டி
முழங்கும் பட்டினத்தாரின் வரிகளிலுள்ள உண்மையை உணராத எம்மை

"வீடுவரை உறவு வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ?"(பாதகாணிக்கை)
என்று நெத்தியடியாய் இலகு தமிழில் என்னமாய்ச் சொல்லிவிட்டார்? இந்த நிலையற்ற வாழ்வில் நிலையானது எதுவென்று இந்த வரிகளைக் கேட்ட குப்பனையும், சுப்பனையுமல்லவா சிந்திக்க வைத்தார்.

”உலர்ந்தும் உலராத் தலையுடனே உமையவட்கு
மலர்ந்தும் மலராத மலர் கொய்வாள்"என்று, விடிந்தும் விடியாத அதிகாலைப்பொழுதில் நீராடி, வாரிமுடிக்காது புடவையை நனைக்கும் ஈரமுடியுடன் நிற்கும் பெண்ணை வர்ணிக்கும் அந்தப் புரிந்தும் புரியாத பழந்தமிழ்ச் செய்யுளுக்கு
"மலர்ந்தும் மலராத பாதி மலர்போல
வளரும் விழி வண்ணமே வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே"(பாச மலர்) என்ற பாடல் வரிகளே
பொழிப்புரையானது.
எமது நாடி நரம்பையெல்லாம் அப் பாடல் வருடவில்லையா? எம்மை அவை வருடும்போதெல்லாம் பின்முதுகை வருடிநிற்கும் ஈரமுடியுடன் பூக்கொய்யும் எதிர்வீட்டு மாமியை, சதா வம்பிற்கிழுக்கும் அயல்வீட்டு நண்பியை, எம் மனக்கண்ணில் நிறைத்து நிற்கிறதே!
தோல்காப்பியரும், இளங்கோவும், பட்டினத்தாரும் சொன்னதைதான் தற்காலக் கவிஞர்கள் சினிமாவிற்காய்த் தந்தனர். முன்னவர் சொல்லில் நயமிருந்தும் அவை எம்பொன்ற சாமான்ய மக்களின் உணர்வுகளை உலுக்கியதுமில்லை. உள்ளத்தில் குடிகொண்டதுமில்லை. அழகு தமிழ் கவியால் செய்யமுடியாததை இலகு தமிழ்ச் சினிமாக் கவி செய்ததில் வியப்பிற்குத்தான் இடமேது? அடுக்கு மொழிமேலுள்ள அன்னியமும் பழகுதமிழ்மேல் எமக்குள்ள பரிச்சயமும்தான் இதன் காரணமோ?

‘‘‘காண்பவை எல்லாம் அவையே போறல்” என்ற
தொல்காப்பிய வரிகள்தான்
‘‘நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்” என்று உருமாறி இருக்க வேண்டும். 

தோல்காப்பிய வரிகளை தமிழ் பாடத்திற்காய் அதிகாலை எழுந்து எத்தனை தரம் உருப்போட்டவர்கள் இருப்பார்கள்?சரியாகச் சொல்லாமல் கைமொழியில் அடி நன்றாய் வாங்கி முழங்கால் தேய முட்டி போட்டு நின்றும் மரமண்டையில் ஏறியதா?
ஆனால் ஓரிரு தரம் காதில் விழுந்திருந்தால் கூட காதல் வயப்பட்ட , அன்பால்ச் சிறைப்பட்ட ஓர் ஆன்மாவின் வார்த்தைகளில் நாமெல்லாம் தோய்ந்து போகிறோம்.

‘‘யாயும் ஞாயும் யாராகியரோ‘‘ எனும் குறந்தொகை வரியொன்று
”நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ‘‘ என எளிய தமிழுக்கு இலக்கணமாய், நயமாய்,வாகாய் அமைந்து நிற்கிறது.

இளமைக்காலச் சமயவகுப்பு முதல் இன்றுவரை திருநாவுக்கரசரின்

‘‘முன்னம் அவளுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் ஆரூர் கேட்டாள்” 
என்ற வரிகளை எத்தனையோ தடவைகள் படித்தும் ஒரு தடவையேனும் அந்த வரிகளின் கவிநயத்தில் லயித்துப்போக எத்தனை பேரால் முடிந்திருக்கிறத?.... ஆயினும் அதே பழந்தமிழுக்கு எளிமை விளக்கமாய் அமைந்த
அன்றொருநாள் அவனுடைய பெயரைக் கேட்டேன்
அடுத்த நாளில் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன்” (பாசம்) என்ற பாடல் வரிகள் மனதுக்குள் வண்ண வண்ண பட்டாம் பூச்சிகளைச் சிறகடிக்க வைக்கிறதே....
இந்தக் கனவுத்தொழிற்சாலையில் கற்பனைகளையும்,கனவுகளையும் தமிழ்த்தனத்தோடு , இலக்கிய நயத்தோடு அள்ளி அள்ளித் தந்தனர். ‘கற்றலன் ஆயினும் கேட்க‘ என்று வள்ளுவன் கூறியது போல கவிஞர் வைரமுத்துவும், கவியரசும் கவிநயம் சிந்திய வார்த்தைகளால் மயக்கி சாதாரண மக்களையும் கேட்க வைத்தனர். தேன் தமிழின் இலக்கியச்சாறில் முத்துக்குளிக்க வைத்ததனர்.
பிறவிக் கவிஞர் வைரமுத்துவே ! உம் கவிமழையில் எமை நித்தம் நித்தம் நனையவைத்ததற்காய் உமக்கு எம் வந்தனங்கள்.
கவியரசே! உமது எளிமை வரிகளால் என்னையும் பழந்தமிழ் இலக்கியங்களை நோக்கி ஓடவைத்துத் தேடி அசைபோடச் செய்தாய். இந்த மாயத்திற்காய் நீர் என்றும் வாழுந் திசை நோக்கி என் இருகரம் குவியுதய்யா. தமிழிருக்கும்வரை உம்கவி இலக்கியமாய் இருக்குமய்யா.... இது உறுதி ! "தஞ்சாவூரு மண்ணெடுத்து" எனும் பொற்காலம் படத்திற்காக வைரமுத்து  எழுதிய பாடல்  புஸ்ப்பவனம் குப்புசாமியினால் தேடிப்பிடித்துத் தூசுதட்டி மெருகேற்றிப் பாடப்பட்ட ஒரு பழைய நாட்டுப்புறப்பாடலைத் தழுவியதாகும். வைரமுத்து ஒரு பேட்டியில் இப்பாடலைப் பற்றிக் குறிப்பிடும்போது கூட தான் முக்கியமான சில ஊர்களைக் குறிப்பிடாமல் விட்டு விட்டதாக நண்பர்கள் குறை கூறினார்கள் என்றெல்லாம் தம்பட்டமடித்துக் கொண்டபோதும் பாடலின் மூலத்தைப்பற்றி மூச்சேவிடவில்லை. குப்புசாமி குமுதத்திற்கு வழங்கிய பேட்டியொன்றில் இதுபற்றி மறைமுகமாச் சாடியிருந்தார். அவர் சொல்லும்போது "தான் எங்கெங்கோ தேடிப்பிடித்து வெளியிடும் நாட்டுப்புறப் பாடல்களைத் தழுவிப் பல சினிமாப் பாடலாசிரியர்களும் பல பாடல்கள் எழுதியுள்ளார்கள். அதற்காகத் எனக்கு நன்றி சொல்லாவிட்டால் கூடப் பறவாயில்லை நாட்டுப்புறப்பாடலைத் தழுவி எழுதினேன் என ஒப்புக்கொண்டு  நாட்டுப்புற பாடல்களுக்காவது  உரிய கௌரவம் கொடுக்கலாமே." எனக்கூறியுள்ளார்.

இதே பாணியில் கண்ணதாசன்கூட "காட்டு ராஜா" படத்திற்காக  "எந்தவூரு என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா?" ஊர்களை வைத்து எழுதியிருந்தார்.

  
இந்த விடயத்தில் கண்ணதாசனை மெச்ச வேண்டும். பல இடங்களில் அவர் தனது பாடல்களிற்கான மூலம் எது எனத்தானே வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

"சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக்காட்டினிலே நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாய்" என்ற பாடலைப்பற்றிப் பலரும் சிலாகித்து மெச்சியபோது , கவிஞர்  தான் இப்பாடலிற்கான முதலடியைச்  செட்டிநாட்டு மக்கள் பாடும் ஒப்பாரிப்பாடலொன்றிலிருந்து எடுத்ததாகக் கூறியிருந்தார். இந்த மனநிலை இன்றைய கவிஞர்களுக்கு இல்லாதது வருந்தத்தக்கதே.

4000 பாடல்களுக்கு மேல் எழுதி மக்கள் மனங்களில் இடம்பிடித்த மருதகாசி

" தென்னை மரத்துப் பாளைக்குள்ளே
 இரண்டு சிட்டு இருந்து முழிக்குது பார்
 தென்றலடிக்குது என்னை மயக்குது
 தேன் மொழியே முத்து வீராயி"

என்ற ஒரு நாட்டுப்புறப்பாடலைத் தழுவி

"செந்தமிழ் நாட்டுச் சோலையிலே
 சிந்து பாடித்திரியும் பூங்குயிலே
 தென்றலடிக்குது என்னை மயக்குது
 தேன் மொழியே இந்த வேளையிலே"
என்ற பாடலை எழுதினார்.

 ஈழத்து மெல்லிசை வளர்ச்சிக்காகத் தன்னையே அர்ப்பணித்திருந்த பரா என்ற  பெயராலேயே எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட மறைந்த எஸ். பரராஜசிங்கம் இந்நாட்டுப்புறப்பாடலைத் தன்கே உரிய பாணியில் மெருகேற்றி

" தென்னை மரத்துப்  பாளைக்குள்ளே
இரண்டு தேரைகள் இருந்து முழிக்குது
தேன் மொழியே முத்து வீராயி" என்று பாடியிருந்தார்.

இன்னுமொரு சந்தர்ப்பத்தில் கவிஞர் கண்ணதாசன் எப்படிச் சங்ககால இலக்கியங்களையும் தேவாரங்களையும் தனது பாடல்களில் கையாண்டார் என்ற தகவல்களைத் தருகிறேன்.      

 நட்புடன் கௌரி மகேஸ் 33 comments:

தனிமரம் said...

இப்போதைய அவசர உலகில் திருட்டை எங்கே கண்டு பிடிக்கப்போறார்கள் என்ற அறீவீலித்தனத்தில் சிலர் இப்படியான இலக்கியத்திருட்டை செய்வதையும் நாம் கடந்துதான் போகனும் அம்பலத்தார். பரா அண்ணாவின் காலத்தில் தான் அதிகமான ஈழ்த்து மெல்லிசை வெளியாகினது என்பதையும் நினைவில் கொள்ளனும்!

தனிமரம் said...

பரா அண்ணாவின் கங்கையாலே பாடல் மிகவும் கேட்பதற்கு இனிமையான பாடல் k.ஜேகிருஸ்ணா அவர்கள் பல தடவை ஒலிக்க விட்டதை கேட்டும் இருக்கின்றேன்! தாய் வானொலி(இ.ஒ.கூ.வர்தகசேவை) 

அம்பலத்தார் said...

தனிமரம் said...
// பரா அண்ணாவின் காலத்தில் தான் அதிகமான ஈழ்த்து மெல்லிசை வெளியாகினது என்பதையும் நினைவில் கொள்ளனும்!//
தகவலுக்கு நன்றி. பரா அவர்களின்காலம் ஈழத்து மெல்லிசையின் பொற்காலம். அதுபற்றி தனியொரு பதிவிடவேண்டும்.

சந்திரகௌரி said...

சட்டியில உள்ளது தானே அகப்பையில் வரும். அவரவர் விரும்பி ரசித்தவை அவர்கள் மூலையில் இருந்து திரும்பவும் ஏதோ வகையில் வெளிப்படல் இயல்புதானே. இந்தவகையில்தான் கண்ணதாசன் பாடலிலும் வ்ய்ரமுத்து பாடல்களிலும் பழம் தமிழ் இலக்கியங்களின் தாக்கங்கள் வெளிப்பட்டிருக்கலாம். நாட்டுப்புறத் தன்மையில் பழ பாடல்கள் திரைப்படங்களில் வெளியாகியுள்ளன. பல விடயங்களை அலசியுள்ளீர்கள். இவ்வாறான ஆக்கங்கள் நிச்சயமாக வெளிவரவேண்டியது அவசியத்திலும் அவசியம் வாழ்த்துகள்

Anonymous said...

World No.1 Money Making Site. 100% Without Investment Job.

Visit Here: http://adf.ly/4FKbj

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நீங்கள் குறிப்பிட்டதுபோல் கண்ணதாசன் பலதடவைகளில் தன் பாடல்கள் பல உருவாக உதவிய பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். இன்றைய பாடலாசிரியர்களில் அப் பெருந்தன்மை இல்லை.
ஆனால் எந்தக் கலைஞனும் முன்பிருந்ததன் தாக்கமின்றி புதிதாக உருவாக்க இயலுமோ தெரியவில்லை. வெளிப்படையாகச் சொல்லலாம்.
எனினும் பாமரரும் படித்து அனுபவிக்கமுடியா பழந்தமிழ் இலக்கியத்தை, இலகுப்படுத்தித் தருவதற்காக
அவர்களுக்கு நன்றி!

மதுமதி said...

அனைத்தையும் அம்பலப்படுத்திய அம்பலத்தாரே..இவற்றைத் தொகுக்க நீங்கள் நன்றாகவே உழைத்திருக்கிறீர்கள்..உங்களின் சொற்களில் சுவை ஒளிந்துள்ளது..அழகாக சொன்னீர்கள்..சொன்ன விதம் ரசிக்க வைத்தது..

Ramani said...

அமபலத்தாரே அருமையான
இலக்கியப் பதிவைக் கொடுத்து
அசத்திவிட்டீர்கள்
அடுத்த பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்க
வைத்துவிட்டீர்கள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

த.ம 2

ராஜி said...

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டையும் ஒழிக்க முடியாதுன்னு சும்மாவா சொன்னாங்க

ஹேமா said...

அம்பலத்தாரே...எந்த விஷயமுமே இல்லாததென்று ஏதுமில்லை.இருப்பதைத்தான் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கிறோம்.பல கவிஞர்கள் எங்கிருந்தென்று என்பதைச் சொல்லியுமிருக்கிறார்கள்.ஆனால் உங்கள் தேடல் அருமை !

எஸ்.பி.ஜெ.கேதரன் said...

அமபலத்தாரே அருமையான
இலக்கியப் பதிவைக் கொடுத்து
அசத்திவிட்டீர்கள்
அடுத்த பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்க
வைத்துவிட்டீர்கள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்//

அதுதான் மன்னா.அதேதான்.

அசோக் குமார் said...

அற்புதம் பெரிய ஆராய்ச்சியேசெய்திருக்கிறீர் போல தெரிகிறது.!!!

துஷ்யந்தன் said...

ஹேமா said...
அம்பலத்தாரே...எந்த விஷயமுமே இல்லாததென்று ஏதுமில்லை.இருப்பதைத்தான் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கிறோம்.பல கவிஞர்கள் எங்கிருந்தென்று என்பதைச் சொல்லியுமிருக்கிறார்கள்.ஆனால் உங்கள் தேடல் அருமை !<<<<<<<<<<<<<<<<<<<

அக்காச்சியின் கருத்தில் நிஜம் எவ்ளோ பொதிந்து இருக்கு...

துஷ்யந்தன் said...

பாஸ் இப்போ இலக்கிய திருட்டு ரெம்ப அதிகமாச்சு.... ஆனாலும் இவர்கள் திருட்டு இந்த நவீன உலகில் உடனே புடிபடுகிறது..... மூக்குடை பட்டாலும் திருடுவதை மட்டும் விடுகிறார்கள் இல்லை..... ஹா ஹா

பராசக்தி said...

கௌரி மகேஷ் அவர்களே, இலக்கியத்தில் இவ்வளவு ஈடுபடா? நல்ல பல எடுத்துக்காட்டுக்கள் , தமிழின் மேல் உள்ள உங்கள் காதல் கட்டுரைகளாக உருவாவதில் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டமே! இதன் தொடர்ச்சி வரும் நாளை எண்ணி எங்க வைத்து விட்டீர்கள்.

மகேந்திரன் said...

இலக்கியத் தென்றலை இங்கே
தவழ விட்டமை மனதில்
பன்னீர் தெளித்தது போல இருந்தது நண்பரே.
கவிஞர்கள் உள்வாங்கி படித்தமைகளை
தங்களின் நயம்பட சொன்னமையை
விளக்கியதும் அழகு.
கவியரசர் பற்றிய பதிவுக்கு காத்திருக்கிறேன்.

அம்பலத்தார் said...

தனிமரம் said...
/பரா அண்ணாவின் கங்கையாலே பாடல் மிகவும் கேட்பதற்கு இனிமையான பாடல் k.ஜேகிருஸ்ணா அவர்கள் பல தடவை ஒலிக்க விட்டதை கேட்டும் இருக்கின்றேன்!//
நீங்கள் ஈழத்து மெல்லிசைப்பாடல்களின் தீவிர ரசிகன்போல் தெரிகிறது. போராட்டகாலம் ஈழத்தமிழ் இலக்கியத்தை ஒரு குறிப்பிட்ட வட்டத்துள் தன்னைச் சுருக்கிக்கொண்டுவிட்டது மீண்டும் எம்தமிழ் இலக்கியம் பலதிசைகளிலும் விரியவேண்டும் என்பதே எனது ஆவல்.

அம்பலத்தார் said...

சந்திரகௌரி said...
//சட்டியில உள்ளது தானே அகப்பையில் வரும். அவரவர் விரும்பி ரசித்தவை அவர்கள் மூலையில் இருந்து திரும்பவும் ஏதோ வகையில் வெளிப்படல் இயல்புதானே... //

வணக்கம், சகோதரி உங்கள் விரிவான பின்னுட்டப்பதிவிற்கு நன்றிகள்.

அம்பலத்தார் said...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
//நீங்கள் குறிப்பிட்டதுபோல் கண்ணதாசன் பலதடவைகளில் தன் பாடல்கள் பல உருவாக உதவிய பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். இன்றைய பாடலாசிரியர்களில் அப் பெருந்தன்மை இல்லை.....//
வணக்கம் சகோ, உங்க பின்னூட்டத்தின் ஒவ்வொருவரியும் மிகவும் சரியான கருத்துடன் உள்ளது.

அம்பலத்தார் said...

மதுமதி said...
//....உங்களின் சொற்களில் சுவை ஒளிந்துள்ளது..அழகாக சொன்னீர்கள்..சொன்ன விதம் ரசிக்க வைத்தது..//
உங்கள் பாராட்டுக்கள் அனைத்தும் கௌரி மகேசிற்குரியவை.

Samuel said...

நான் 1979 ல 8 ம் வகுப்பு பயிலும் போது எனதி தமிழ் அய்யா திருமிகு சண்முகவேல் சாமீ அவர்கள் யாரோ ஒரு கவிஞர் மேற்கோளிட்டு சொன்னதாக கூறிய
ஓரெட்டில் பயிலாத நடையும்..
ஈரெட்டில் கல்லாத கல்வியும்...
........
எட்டேடில் ஏறாத கட்டையும் கடயல்ல என்றே பாடலை
கவிஞர் வயிர முத்து சுட்டு பாஷா வில் பேர் எடுத்துக்கிட்டார் பாமரர்களிடம்.

அம்பலத்தார் said...

Ramani said...
//அமபலத்தாரே அருமையான
இலக்கியப் பதிவைக் கொடுத்து
அசத்திவிட்டீர்கள் அடுத்த பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்க
வைத்துவிட்டீர்கள் மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்//
பாராட்டுக்களிற்கு நன்றி நண்பரே,
பாராட்டுக்கள் கௌரி மகேசிற்குரியவை.

அம்பலத்தார் said...

Ramani said...
// த.ம 2//
நன்றி நண்பரே

அம்பலத்தார் said...

ராஜி said...
//திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டையும் ஒழிக்க முடியாதுன்னு சும்மாவா சொன்னாங்க//

உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே! எம் பழந்தமிழ் இலக்கியங்கள் எப்படி இன்றைய இலக்கியங்களுடன் இசைவடைகின்றன என்பதைக் கூறவே இப்பதிவை இட்டேன்.

அம்பலத்தார் said...

ஹேமா said...
//அம்பலத்தாரே...எந்த விஷயமுமே இல்லாததென்று ஏதுமில்லை.இருப்பதைத்தான் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கிறோம்.பல கவிஞர்கள் எங்கிருந்தென்று என்பதைச் சொல்லியுமிருக்கிறார்கள்.//
உங்கள் கருத்துப்பகிர்விற்கு நன்றி ஹேமா! எம் பழந்தமிழ் இலக்கியங்கள் எப்படி இன்றைய இலக்கியங்களுடன் இசைவடைகின்றன என்பதை இனிமையாகக் கூறுவதன்மூலம் இளைய சந்ததியினரிற்கும் எம் தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு வரவேண்டும் என்பதற்காகவே இப்பதிவு எழுதப்பட்டது.

அம்பலத்தார் said...

வணக்கம் எஸ்.பி.ஜெ.கேதரன், உங்கள் முதல் வருகைக்கும் உற்சாகம்தரும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள். வாசகர்கள் கொடுக்கும் உற்சாகங்கள்தான் எப்பொழுதும் படைப்பாளிகளை உற்சாகமாக எழுதத்தூண்டும்.

அம்பலத்தார் said...

அசோக் குமார் said...
//அற்புதம் பெரிய ஆராய்ச்சியேசெய்திருக்கிறீர் போல தெரிகிறது.!!!//
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே!

அம்பலத்தார் said...

துஷ்யந்தன் said...
//பாஸ் இப்போ இலக்கிய திருட்டு ரெம்ப அதிகமாச்சு.... ஆனாலும் இவர்கள் திருட்டு இந்த நவீன உலகில் உடனே புடிபடுகிறது..... மூக்குடை பட்டாலும் திருடுவதை மட்டும் விடுகிறார்கள் இல்லை..... ஹா ஹா//
எங்கே மாட்டுபடப்போகிறமென்ற நப்பாசையில் தான் செய்கிறார்கள்.

அம்பலத்தார் said...

Blogger பராசக்தி said...
//.....தமிழின் மேல் உள்ள உங்கள் காதல் கட்டுரைகளாக உருவாவதில் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டமே! இதன் தொடர்ச்சி வரும் நாளை எண்ணி எங்க வைத்து விட்டீர்கள்.//
உங்கள் பாராட்டுக்கள் யாவும் கௌரி மகேஸ் அவர்களிற்கே உரியது.

அம்பலத்தார் said...

மகேந்திரன் said...
//....தங்களின் நயம்பட சொன்னமையை
விளக்கியதும் அழகு.
கவியரசர் பற்றிய பதிவுக்கு காத்திருக்கிறேன்.//
பாராட்டுக்களிற்கு நன்றி நண்பரே. உங்கள் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும்.

அம்பலத்தார் said...

Samuel said...
//நான் 1979 ல 8 ம் வகுப்பு பயிலும் போது எனதி தமிழ் அய்யா திருமிகு சண்முகவேல் சாமீ அவர்கள் யாரோ ஒரு கவிஞர் மேற்கோளிட்டு சொன்னதாக கூறிய
ஓரெட்டில் பயிலாத நடையும்..//
உங்கள் வருகைக்கும் அனுபவப் பகிர்வுக்கும் நன்றி நண்பரே.

♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...

உங்களது கடின தேடல் பதிவில் தெரிகின்றது அருமையான
இலக்கிய தொகுப்பு வாழ்த்துக்கள்