நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Monday

சொல்லாதே யாரும் கேட்டால் ..........



விழுந்திடிச்சு! விழுந்திடிச்சு!
செல்லம் ஏ! செல்லம்மா தண்டத்துக்கு வெட்டாதையுங்கோ! விழாது விழாது எண்டு கரிச்சுக் கொட்டினாய் இஞ்சை பார் ஐயாவுக்குப் பம்பரே விழுந்திட்டுது.
உங்கட புளுகு தெரியாதாக்கும் 10 ருபாக்கு வெட்டி 5 ருபா விழுந்தாலே ஊரைக் கூட்டுறனிங்கள்; இண்டைக்குப் 10க்கு வெட்டி 20 விழுந்திட்டுதாக்கும்.
சும்மா அலம்பாதை. இந்தக் கணத்திலை நீ ஒரு மில்லியனரின்ரை மனுசி ஆக்கும்..... என்று சொல்லவும் செல்லம்மாவும் அரை நம்பிக்கையோட
மெய்யாத்தான் சொல்லுறியளே அப்பா கண்ணாடியைப் போட்டு நம்பருகளை வடிவாப் பார்த்தளியளே ...................
இப்ப நீ எனக்கு 1 2 3 சொல்லித்தாறதைவிட்டிட்டு என்ரை முதலாளியாற்ரை போன் நம்பரை ஒருக்காத் தாருமப்பா முதல் வேலையா உந்தச் சனிப்பிடிச்ச வேலைக்கு ஒரு முழுக்குப் போட்டிட்டுத்தான் அடுத்த அலுவலைப் பார்க்கவேணும். மில்லியனையர் போய் உந்தக் கஞ்சப் பயலிட்டை வேலை செய்துகொண்டிருக்க வேணுமோ?
இப்பிடித்தான் நீங்கள் எப்பவும் அவசரப்பட்டு எல்லாத்தையும் போட்டு உடைச்சுப்போட்டு நிக்கிறனியள். விசயத்தை ஊருக்கெல்லாம் பறைதட்ட முந்தி இண்டைக்கெண்டாலும் நான் சொல்லுறதை ஒருக்காக் கேளுங்கோவன்.
இப்பவே நாங்கள் நல்லா உழைக்கிறம் நல்ல காசு வைச்சிருக்கிறம் எண்டு எங்கட சனங்கள் கதைச்சபடி.
அதுக்கென்னடியப்பா கடன்காரன் எண்டு திட்டாமல் வசதியா இருக்கிறமெண்டு கதைக்கிறது நல்லதுதானே.
ம்! நான் படுற பாடு எனக்கல்லோ தெரியும். ஐயா அவசரதேவை 2000 மாறேலுமே. அண்ணை ஒரு சின்ன உதவி தம்பி இடையில வந்து நிக்கிறான் ஏஜன்ருக்குக் கொடுக்க வேணும் 5000 தர ஏலுமே எண்டு அவனவன் கேக்க ஓமெண்டுபோட்டுப் பிறகு நீங்கள் ஒழிச்சுத் திரிய போன் எடுக்கிறவனுக்கெல்லாம் பதில் சொல்லுறது நான்தானே. போனகிழமை கூட உவர் ஜோ ஊரிலை தகப்பன் சுகமில்லாமல் ஆசுப்பத்திரியிலை கிடக்கிறார் 2000 கைமாத்தாத் தர ஏலுமே எண்டதுக்கு மறுக்கவும் ஏலாமல் கொடுக்கவும் ஏலாமல் பதுங்கித் திரிஞ்சதை அதுக்குள்ள மறந்து போனியளே? இப்ப லொத்தர் விழுந்த கதையை ஒண்டும் ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாம். பேசாமல் வழக்கம்போல வேலைக்குப் போறது எங்கட பாடுகளைப் பார்க்கிறது எண்டு இருந்துகொண்டு எப்ப விழுந்தது எவ்வளவு விழுந்ததெண்டெல்லாம் சனங்களுக்குச் சொல்லவேணுமெண்டதை ஆறுதலாய் யோசிச்சுச் செய்வம் என்றாள்.
செல்லம்மா சொன்னதும் சரியாப்பட்டதிலை. விசயத்தை ஒருத்தருக்கும் சொல்லாமல் கப்சிப் என்று முடிச்சு 2மில்லியன் எங்கட கைக்கு வந்து 2 கிழமையுமாச்சு வேலைக்குப் போறதும் வாறதுமா காலம்போகு எனக்கெண்டால் கையிலை காசை வச்சுக்கொண்டு பிச்சைக்காரன்மாதிரி திரியிறதை நினைக்க நினைக்க கோவம் கோவமாத்தான் வந்திது கடைசியிலை பொறுக்க ஏலாமலுக்கு ஒரு நாள்
இஞ்சருமப்பா செல்லம் இப்ப சொல்லுவம் அப்ப சொல்லுவம் எண்டு சொல்லிச்சொல்லியே 1 மாசம் போட்டுது இப்பிடியே போனால் உவன் முதலாளிக்கு மாடா உழைச்சு நான் மண்டையைப் போட்ட பிறகுதான் விசயத்தை அவுத்துவிடுவீர்போலக் கிடக்கு இனியும் என்னாலை ஆசையை அடக்கிக்கொண்டு இருக்க ஏலாது எத்தனை நாளைக்குத்தான் 1000 ஈரோவுக்கு வாங்கின உந்த டச்சுக்காலத்து opel ஒட்டிக்கொண்டு திரியிறது. ஐஞ்சு காசுக்கு வழியில்லாதவன் எல்லாம் அங்க இங்க கடன்பட்டெண்டாலும் audi, BMW எண்டு ஆத்தலா ஓட்டிக்கொண்டு திரியிறான். இந்தக்கிழமை நான் ஒரு நல்ல கார் எண்டாலும் இறக்காமல் விடமாட்டன்.
நான் மட்டும் என்ன ஆ! ஊ! விலாசம் காட்டிக்கொண்டே திரியுறன். எவ்வளவு நாளா ஆசைப்பட்ட தீபம், ttn card கூட வாங்காமல்தானேயப்பா இருக்கிறன். என்ரை செல்லக் குஞ்செல்லோ பொறுத்ததுதான் பொறுத்தியள் இன்னும் கொஞ்ச நாள் பொறுங்கோ நல்லதொரு சந்தர்ப்பம் வரட்டும் அப்ப ஆசைப்பட்டபடி எல்லாம் செய்யலாம்.
இப்பிடிக் கதைச்சுக் கதைச்சுத்தானே அந்த நாளிலை என்னை மடக்கினனீர் என்னமோ சொல்லும் எனக்கெண்டால் ஒண்டும் நல்லதுக்காப் படவில்லை என்று திட்டிப்போட்டும் பயத்திலை அண்டைக்கும் கம்மெண்டு படுத்திட்டன்.
காலங்காத்தாலை எழுப்பி வழமைபோல சாப்பாட்டு பொட்டலத்தையும் தந்து அனுப்பிவிட்டாள் பாவி நானும் வெட்டக்கொண்டு போற ஆடு மாதிரி மலங்க மலங்க முழிச்சுக்கொண்டு வேலைக்குப் போனன்.

கொஞ்ச நேரத்தாலை
அம்மா அம்மா அங்கை பாருங்கோ அப்பா வாறவடிவை.
என்னடி சொல்லுறாய் இப்ப கொஞ்சத்துக்கு முந்தித்தானே வேலைக்குப் போனவர். அதுக்குள்ளை வாறாரோ? வடிவாப்பாரடி வாறது ஆரெண்டு.
எனக்கு அப்பாவைத் தெரியாதே?
ஒரு தேவைக்குக் கூட லீவு எடுக்காத மனுசன் வேலை செய்ய ஏலாமல் கெதியிலை திரும்பி வருகுது எண்டால் என்ரை கடவுளே என்ன வருத்தமோ? போடி போய் அப்பாவைக் கவனமாப் பிடிச்சுக் கூட்டிக்கொண்டு வா.
சும்மா போங்கோ அம்மா. அப்பா கடைக்குப் போட்டுக் கை நிறையப் பையளோட வாறார் நீங்கள் என்னவோ சொல்லிக்கொண்டு நிக்கிறியள். அப்பா! எனக்கு என்ன வேண்டியந்தனிங்கள்.
பொறு பொறு வீட்டுக்கை வரமுந்தியே உந்தப் பறப்புப் பறக்காதை உள்ளை வரவிடு. ஒண்டில்லை நிறைய வாங்கியந்திருக்கிறன்.
என்ரை பப்பி எண்டால் பப்பிதான். எண்டுகொண்டு சின்னவள் என்ரை தோளிலை பாஞ்சு கட்டிப் பிடிச்சதையும் கவனிக்காமல் மெதுவா செல்லாம்மாவை நோட்டம்விடலாம் எண்டு சைட்டாலை பாத்தால் அனலடிக்கிற கண்ணோட வெடிக்கத்தயாராக நிக்கிறாள் எனக்கெண்டால் பயத்திலை கையும் ஓடேல்லை காலும் ஓடேல்லை வழமைபோல உளறத்தொடங்கினன்.
செல்லம் உப்பிடி முறைக்காதையுமப்பா நான் காலமை வேலைக்கெண்டுதான் போனனான். வழியிலை காருக்கை கொஞ்சம் தலையிடிக்குமாப்போல கிடந்தது அதுதான் செப்பனக்கு கிறங்கெண்டு அடிச்சுச் சொல்லிப்போட்டு (முதலாளிக்கு சுகயீனம் என்று தொலைபேசிவிட்டு) திரும்பி வரேக்கதான் அண்டைக்கு நீர் ஆதவா ஆசியா சென்டரிலை பச்சைக்கலர் சீலையொண்டைப் பாத்து ஆசைப்பட்டது ஞாபகத்துக்கு வந்தது போறதுதான் போறன் அதையும் வாங்கிக்கொண்டு வீட்டைபோவம் எண்டு அங்கைபோனால் ttn காரங்கள் அதிர்ஸ்டலாபச் சீட்டொண்டு நடத்திக்கொண்டு இருந்தாங்கள். போனால் போகுதெண்டு சீட்டொண்டு வாங்கினால் பாருமப்பா ஒரு வருச ttn சந்தா அட்டையும் 5000 ஈரோ காசுமெல்லையப்பா விழுந்திட்டுது. அதுதான் இதுகளும் பெடியளுக்கு ஆளுக்கொரு சைக்கிளும் ........................ 

வசனத்தை முடிக்க முந்தியே செல்லம்மா கோபமும் நக்கலுமா
காட்டுற பந்தாவுகளைப் பார்த்தால் லொத்தரிலை மில்லியன் விழுந்திட்டுதெண்டைல்லோ நினைச்சன் என்று வெடிக்கத் தொடங்கினாள். 

இதுக்கிடையிலை நல்லகாலத்துக்குச் சைக்கிள் எண்ட சொல்லைக் கேட்ட சின்னவள் அண்ணா அப்பா எங்களுக்குப் புதுச் சைக்கிள் வாங்கியந்திருக்கிறார் எண்டு கத்திக்கொண்டு வாசலுக்கு ஓடினாள். நானெண்டால் செல்லம்மாவை எப்பிடி வழிக்குக் கொண்டு வாறதெண்டு புரியாமல்
சீ சீ எங்களுக்கு எப்ப எண்டாலும் அப்பிடி நடந்திருக்கே. காரிலை போகேக்கைதானப்பா அந்த யோசனை வந்தது ஒரேயடியா மில்லியன் விழுந்தது எண்டு சொல்லாமல் அப்பப்ப அதிலை 5000 விழுந்தது இதிலை 10000 விழுந்தது அதிலைதான் அதை வாங்கினம் இதை வாங்கினம் எண்டு சொல்லுவம் எண்டு பார்த்தன் அதுதான் இண்டைக்கு.....................
பொய்யைச் சொல்லுறதெண்டாலும் பொருந்தச் சொல்ல வேணும் ttn காரங்கள் முதல் பரிசா ஒரு பாட்டு CD கொடுத்தவங்களெண்டாலே ஒருத்தனும் நம்பமாட்டாங்கள். நீங்கள் என்னடா என்றால்.................
சரி சரி இதுக்குப்போய் உந்த எகிறு எகிறாமல் இந்த Saree வடிவா இருக்கோ எண்டுபாருமன் என்று சொல்லவும்
கெட்ட கேட்டுக்கு சாறி வேற எண்டுகொண்டு திரும்பினவள் கையிலை கிடந்த சாறியைக் கண்டிட்டு
என்னண்டப்பா எனக்கு இது பிடிக்குமெண்டு கண்டுபிடிச்சனிங்கள்? எவ்வளவோ நாளா இந்தக் கலரிலை சீலையொண்டு வாங்கவேணுமெண்டு திரிஞ்சனான். நல்ல வடிவா இருக்கப்பா சனிக்கிழமை சிங்கத்தார் வீட்டு அந்திரட்டிக்கு இதைக் கட்டிக்கொண்டு வரட்டே?
வரவர என்னத்துக்கு எதைக் கட்டுறதெண்டு விவஸ்தையே இல்லாமல்போச்சு. அந்திரட்டிக்குப்போய் இந்தப் பட்டுச் சீலையை எவனாவது கட்டுவானே.
இப்ப கிட்டத்திலை வேற ஒரு விசேடமும் வரேல்லை. இப்பிடிப்பார்த்தால் எப்பதான் எனக்குப் பிடிச்ச இந்த மயில் நீலப்பட்டைக் கட்டுறது.
அட ஒரு சேலையிலை இவ்வளவு விசயம் இருக்கெண்டு இவ்வளவு நாளாத் தெரியாமல் போட்டுது வலு கெதியாச் சூடு தணியுது எதுக்கு வம்பெண்டு நினைச்சுக் கொண்டு
நீர் எந்த நிகழ்ச்சிக்கு எந்தச் சேலையைக் கட்டினாலும் அதிலை ஒரு தனி வடிவுதானப்பா அந்திரட்டிக்கு உதையே கட்டும் என்று கதையைச் சட்டென்று முடிச்சுக்கொண்டு பெடியளிட்டை வாசலுக்கு நழுவினன்.
அன்று இரவு
செல்லம் என்ன இப்பத்தான் படுத்தனீர் அதுக்குள்ள நித்திரையே என்று காதுக்கை கிசுகிசுத்தன்.
வயசு போனாலும் உந்த ஆசையளுக்கெல்லாம் குறைச்சலே இல்லை. இப்பத்தான் பெடியளும் படுக்கப்போனதுகள் அதுக்குள்ள அவசரப்படாமல் பேசாமல் படுங்கோ என்று சிடுசிடுத்தாள் என்ரை செல்லம்மா.
கதையைப் படிக்கிறதைவிட்டிட்டு படுக்கையறையிலை நாங்கள் கிசுகிசுக்கிறதை ஒட்டுக் கேக்காமல் நீங்களும் அவரவர் வீட்டுக்குப்போய் பேசாமல் படுங்கா மிச்சத்தைப் பிறகு சொல்லுறன்.

ஆக்கம்: பொன்.அம்பலத்தார்
யாழ் இணையத்திற்காக எழுதியது.

கடவுளே...!

கடவுளே...! சிரிக்க வைப்பதில் கில்லாடி.அற்புதம்.

நடைமுறை

நடைமுறை வாழ்வில் நடப்பவற்றை அப்படியே எழுதிவைப்பதில் அம்பலத்தாரிற்கு நிகர் யாருமில்லை. அருமை.
நானும் கதையை வாசித்துவிட்டு அப்படியே போய்விட்டேன். கிசுகிசுப்பை கேட்கவில்லை.

2 comments:

Anonymous said...

மனுசிக்கு பயந்த அம்பலதாரும், செல்லக்கோப பேச்சாலேயே புருஷனை பெட்டிப்பாம்பாக கைக்குள் வைத்திருக்கும் பக்குவமும் அப்படியே யாழ்ப்பாணத்தில், பக்கத்துவீட்டில் நடக்கும் சம்பாஷணையை எங்கட வீட்டு முத்தத்திலிருந்து கேட்ட மாதிரி ( வேலி ஓட்டையால் பாத்த மாதிரியும்) இருக்கு.

அம்பலத்தார் said...

வணக்கம் பெயரிலி, உங்கள் வருகைகும் கருத்துப்பகிர்விற்கு நன்றி. எனது ஆக்கம் உங்களுக்கு, உங்களது பழைய ஞாபகங்களை இரைமீட்டு மகிழ்வுகொடுத்ததில் எனக்கும் மகிழ்ச்சி.