நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Tuesday

போராளிகள் தீக்குளிக்கவேண்டிய நேரமிது.


அன்றொருநாள் சீதை தான் நேர்மையானவள் தூய்மையானவள் என்பதை நிருப்பிக்க தீக்குளித்தாள். போராளிகளே உங்களை நான் தீக்குளிக்கச்சொல்லவில்லை. ஆனால் உங்கள் தூய்மையை அர்ப்பணிப்பை நிரூபிக்கவேண்டிய தருணம் இது. அண்மைய சில ஆண்டுகளாக  நல்லவர் என்று எண்ணியவர் எட்டப்பராவதும் அரசின் கைக்கூலிகளாவதும் சர்வசாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது. நல்லவர் யார் கெட்டவர் யார் என்று அறியமுடியாமல் தவித்துப்போய் இருக்கிறோம்.

கடந்த சில நாட்களின்முன் பாரிசில் இடம்பெற்ற முன்னணி தமிழீழ செயற்பாட்டாளர் பரிதியின் படுகொலை மீண்டும் ஒரு சலனத்தை உண்டுபண்ணியிருக்கிறது. ஆரம்பத்தில் இலங்கை அரசின் நாடுகடந்த பயங்கரவாதம் இது என்று, நாடுகடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாரின் "வழமைபோல பிரிந்த போராளிக்குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் என முடித்துக்கொள்ளாமல் பிரன்ஸ் அரசு உண்மையை வெளிக்கொண்டுவரவேண்டும்" என்ற அறிக்கை வந்தது. தமிழீழ ஆதரவு தமிழக அரசியல்வாதிகளது கண்டனங்களும் வெளிவந்தது.
அடுத்துவரும் செய்திகள் வேறுவிதமாக இருக்கிறது. புலம்பெயர்நாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பின் மிகப்பெருமளவு சொத்துக்களையும் ஊடகங்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நெடியவன் அணிக்கும், விநாயகத்தின் தலைமையில் இயங்கும்  பொட்டம்மானின் கீழ் இயங்கிய போராளிகள் பலரையும் கொண்ட குழுவினருக்குமிடையே புலம்பெயர்நாடுகளிலுள்ள விடுதலைப்புலிகளின் சொத்துக்களை பாகம் பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட பிணக்கின் உச்சமே பரிதியின் கொலை என்ற செய்தி கசிகிறது.

இலங்கை அரசு செய்ததோ அல்லது அடிவருடிகள் செய்தார்களோ இந்திய அரசின் புலனாய்வுப்பிரிவின் செயலோ அல்லது போராளிகளே தம்முள் அடித்துக்கொள்வதன் வெளிப்பாடோ அல்லது வேறு எவர் செய்தாலும் பரிதியின் கொலை வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஜனநாயக விரோத செயல்.

போராளிக்குழுக்களே நீங்கள் உண்மையானவர்களாக நேர்மையானவர்களாக இருந்தால் பிரான்சு அரசு உண்மையை கண்டுபிடிக்கவேண்டும் என அறிக்கைவிட்டதுடன் திருப்திப்பட்டு இருக்காமல் நடந்த உண்மையை புலனாய்வுசெய்து வெளிக்கொண்டுவரவேண்டும். அது ஒன்றும் உங்களால் முடியாத காரியமில்லை. கட்டுநாயக்கா விமானநிலையம் மீதான வெற்றிகரமான தாக்குதலுக்கு தேவையான புலனாய்வுகளையும், அமெரிக்கா முதல் அனைத்து நாடுகளின் கண்ணிலும் மண்ணைத்தூவிவிட்டு ஆட்லெறிகள்முதல் விமானங்கள்வரை போராட்டக்களத்திற்கு கொண்டுசெல்வதற்குரிய வல்லமையும் பலநாடுகளிலிருந்தும் ஆயுதங்களை கொள்வனவுசெய்யவும், தமிழீழ விமானப்படை விமானிகளை உலகநாடுகளில் பயிற்றுவிக்கவும் முடிந்த உங்களால் பரிதியின் கொலைக்கான காரணங்களை ஆதாரங்களுடன் வெளிக்கொண்டுவருவது ஒன்றும் முடியாத செயல் அல்ல. உங்கள் திறமையில் எமக்கு இன்னமும் மாறாத நம்பிக்கை இருக்கிறது

உண்மையான கொலையாளிகளை அடையாளம் காட்டுங்கள்.

 எமது தாயக விடுதலைக்காக தம்முயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களையும் போராளிகளையும், தாயக உறவுகளும், புலம்பெயர் எம்மவர் சமூகமும் மனப்பூர்வமாக நம்பினோம். புலம்பெயர் நாங்கள் போராளிகள் நீங்கள் கேட்டபோதெல்லாம் ஏன் எதற்கென்றெல்லாம் எதிர்க் கேள்வி கேட்காது வாரி வழங்கினோம்.

அண்மைய நிகழ்வுகளைப் பார்த்துக்கொண்டு எம்மால் பொறுத்துகொண்டு இருக்கமுடியவில்லை.

அப்படியில்லாமல் நீங்களே அமைப்பின் அளப்பரிய சொத்துக்களை பங்குபோட்டுக்கொள்வதற்காக கொள்ளைக்கூட்டத்தினர்போல மோதிக்கொள்ளும் செயற்பாட்டின் வெளிப்பாடே இந்தச் செயலாக இருந்தால்! அந்த சொத்துக்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு நீங்கள் எல்லோருமாக எங்காவது தலைமறைவாகத் தொலைந்து போய்விடுங்கள்.  தயவுசெய்து எமது உணர்வுகளையும் உண்மையான போராளிகளின் அர்ப்பணிப்பையும் கொச்சைப்படுத்தாதீர்கள்.

புலம்பெயர் மக்கள் நாங்கள் எம்மால் முடிந்த உதவிகளை நேரடியாகச் செய்து பாதிக்கப்பட்ட எம் தாயக உறவுகளின் துயர் துடைப்போம்.

போராளிகளே உங்கள்மீது எமக்கு ஏற்பட்டிருக்கும் சிறு அவநம்பிக்கையை, சலனத்தைப் போக்க, நீங்கள் தூயவர்கள், உத்தமர்கள் என்று நிரூபிக்க சீதைகளாய் நீங்கள் தீக்குளிக்கவேண்டிய நேரமிது. மனம் வெதும்பிக்கேட்கின்றோம் எமக்காக இதைச் செய்வீர்களா?

எனது இந்த வேண்டுகோளைப்படிக்கும் வாசகர்களே! சிந்தனை மழுங்கடிக்கப்பட்டு உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவுகளை எடுத்துக்கொண்டு மீண்டும் ஒரு துரோகி எம்மிடை தோன்றிவிட்டான் என்று என்னை திட்டுவதை விட்டு. சற்றே நிதானமாக உட்கார்ந்து உங்கள் பகுத்தறிவால் எமக்கும் எமது உரிமைப் போராட்டத்திற்கும் உண்மையான எதிரிகள் யாரென்று தேடுங்கள்.

அறிவியல் ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் தெளிவில்லாத வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையிலான எந்தப்போராட்டமும் நிலைத்து நின்று இறுதி இலக்கை அடையாது.


நேசமுடன் அம்பலத்தார்

படம் நன்றியுடன் கூகிள் தேடுபொறியில் பெற்றது

2 comments:

Anonymous said...

நலமா அம்பலத்தாரே?

தீபாவளி நல்லாயிருந்ததா?

//அறிவியல் ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் தெளிவில்லாத வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையிலான எந்தப்போராட்டமும் நிலைத்து நின்று இறுதி இலக்கை அடையாது//


முற்றிலும் உண்மை அம்பலத்தாரே...

kowsy said...

முற்றிலும் உண்மை