நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Friday

எழுத்தாயுதம் ஏந்தியவன்தராக்கி வித்தாகி விதையான செய்தியை இன்னமும் நம்ப மறுக்கிறது மனசு. ஆணித்தரமான அந்த எழுத்துக்கள், ஆய்வுகள் மனதில் படமாய் ஓட அந்த மாமனிதனின் என் மனப்பதிவுகளை அசைபோட்டதில்.................


அன்றொருநாள் அநியாயமாய் வெலிக்கடைச் சிறையில் படுகொலையான குட்டிமணி தங்கத்துரை, டாக்டர் ராஜசுந்தரம் போன்றோருடன் கூட அடைபட்டிருந்து உயிர் தப்பிய தமிழ் அரசியல் கைதிகள் பலரையும் அரசாங்கம் மட்டுநகர் சிறைச்சாலைக்கு இடமாற்றியிருந்தது.
LTTE, PLOT, TELO, EROS ....... என போராளி அமைப்புக்களின் பட்டியல் நீண்டுகொண்டேபோகும் எண்பதுகளின் ஆரம்பத்தில் PLOT சிறை உடைப்பொன்றைச் செய்தது. மட்டுநகர்சிறையிலிருந்த, விடுதலை வேட்கையினால் கைதாகிய பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி. நித்தியானந்தன், ஐரோப்பிய அமெரிக்க அரபு நாடுகளின் பெருநகரங்கள் பலவற்றினதும் நிர்மாணத்திற்கும் பொறுப்பாக இருந்து செயல்பட்டபோதும் விடுதலை வேட்கையினால் அவற்றையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு தாயகம் திரும்பி டாக்டர் ராஜசுந்தரத்துடன் இணைந்து வன்னியில் காந்திய அமைப்பை நிறுவி வன்னிவாழ் தமிழ் உறவுகளின் உயர்விற்குப் பாடுபட்டதால் கைதாகி அடைபட்டிருந்த திரு.டேவிட் ஐயா போன்ற முத்துக்களுடன் PLOT. அமைப்பு தனது நோக்கிலிருந்து தடம்மாறி அமைப்பைப் புதைகுழிக்குத் தள்ளக் காரணமாக இருந்த ராஜன், தந்தை செல்வநாயகத்தின் வாகன ஓட்டுனராய் இருந்ததை மட்டுமே ஒரே தகைமையாய் கொண்டு போராளியென முத்திரைகுத்திக்கொண்டு அரசியல், சித்தாந்த, மற்றும் இராணுவ அறிவெதுவும் இல்லாத சொத்தைகளான வாமதேவன் போன்றவர்களுடன் முடிச்சுமாறி மொள்ளமாறிகள் பலரையும் வெளிக்கொணர்ந்தது.

அந்தநேரத்தில் விடுவிக்கப்பட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட கைதிகளையும் பத்திரமாக தமிழகத்திற்கு அனுப்பிவைக்கும் பாரிய பொறுப்பிலிருந்தவரில் முக்கிய இடம்வகித்த இளம்போராளி ஒருவனாகவே சிவராம் முதன்முதலாக என் மனப்பதிவில் இடம்பிடித்திருந்தார்.

ஏறத்தாள முப்பதுவருடங்களுக்கு முந்தைய பின்னிருட்டு மாலையொன்றில், பின் ஒருகாலத்தில் மாமனிதனாய் நம் மனங்களில் இவன் இடம் பிடிப்பான் என்று அறியாது கடற்கரை முகாம் ஒன்றில் வெட்டிப்போட்ட தென்னைமரக்குற்றியில் உட்கார்ந்து அரசியல், மற்றும் நாட்டுநடப்புக்கள், மட்டுச்சிறையுடைப்பு, நம் முதல் காதலென பலவிடயங்களையும் அந்த இளைஞனுடன் பேசியதாக ஞாபகம்.

விடுதலை வேட்கையினால் அன்று PLOT அமைப்பில் இணைந்திருந்த இந்த இளைஞன் தான் சார்ந்த அமைப்பு உள்முரண்பாடுகளினால் சந்ததியார் போன்ற நல்ல சிந்தனையாளரான தம் சகபோராளிகளையே கொலை செய்தல் தாம் சிறையுடைப்புச்செய்து விடுவித்த அற்புத அறிவாளியான அந்த டேவிட் ஐயா போன்றவர்களையே தம் சித்திரவதைக் கூடங்களில் அடைத்து துன்புறுத்தல், சுந்தரம் படையணி எனும் பெயரில் அமைப்புக் கட்டுப்பாடுகளை மீறி தவறான முறையில் செயல்பட்ட சங்கிலியன் போன்றவர்களின் அடாவடித்தனங்களை பொறுக்கமுடியாமை, JVP உடன் ஒட்டி உறவாடல், மாலைதீவு ஆட்சிகவிழ்ப்புச் சதியில் முக்கிய பங்கெடுத்து தன் சகபோராளிகள் பலரை மாலைதீவின் சிறைகளில் அநியாயத்திற்கு அடைபட வைத்தமை என ஒவ்வொருதடவை PLOT தடம்மாறியபோதும் அவன்பட்ட மனவேதனை அருகிலிருந்து பார்த்தவருக்குத்தான் புரியும். ஒவ்வாருதடவையும் உள்ளிருந்தே தன் எதிர்ப்பைத் தெரிவித்தபோதும் பயனில்லாதுபோகவே அமைப்பில் இருந்து ஒதுங்கினான். இன்றனெற் போன்ற வேகமான செய்தி தொடர்பு சாதனங்கள் நம் மண்ணில் கால் பதிக்காத அன்றைய காலத்தில் தான் சொல்லவிரும்பும் கருத்துக்கள் மக்களைச் சென்றடைய ஒரே வழி பத்திரிகைதான் என்று உணர்ந்து துப்பாக்கியைவிட்டு பேனாவைத் தன் ஆயுதமாகத் தூக்கினான். அந்த இளைஞன் தன் ஆணித்தரமான எழுத்துக்களினால் சர்வதேச ஊடகங்களினாலும் சிறந்த ஆய்வாளனாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, எங்கள் போராட்டத்தின் நியாயத்தன்மை உலகுக்கு உரத்துக் கூறினான்.

மாற்று அமைப்பிலிருந்து வந்தபோதும், தாம் கொண்டிருந்த கொள்கையின்பால் அவர்களுக்கிருந்த பற்றையும் அவர்தம் ஆளுமையையும் கண்டு நம் தலைவர் அரவணைத்துக்கொண்ட இருபெரும் தூண்களாக EROS அமைப்பின் மூத்த உறுப்பினராயிருந்து பின் ஒரு சந்தர்ப்பத்தில் அந்த அமைப்பைக் கலைத்து விடுதலைப் புலிகள் அமைப்புடன் இரண்டறக் கலந்து விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இருந்த திரு. வே. பாலகுமாரன். மற்றும் மாமனிதராகி இன்று நம்மனங்களிலெல்லாம் நிரந்தர இடம்பிடித்துவிட்ட திரு.சிவராம் ஆகியோர் நம் வரலாற்றில் தடம்பதிப்பர்கள்.

அந்தத் தூண்களில் ஒன்றான தராக்கி முதலில் தூக்கிய துப்பாக்கியைவிட பின்பு ஏந்திய பேனா வலிமையானதாகவும் வீரியம்மிக்கதாகவும் இருந்தது கண்ட எதிரி, அந்த மாமனிதனையும் வஞ்சகமாய் கொலை செய்து நிரந்தர அமைதிகாணச் செய்துவிட்டபோதும், அவன் கடந்துவந்த பாதையில் கால்பதித்து அவன் ஏந்திய பேனா தரையில் விழுந்துவிடாது காத்திட பல இளைஞரும் வருவது உறுதி. அமைதிகொள் சிந்தனைச் செம்மலே உன்பணி தொடரும்.


நேசமுடன் அம்பலத்தார்

13 comments:

நிரூபன் said...

வணக்கம் ஐயா,
நீங்கள் திரட்டிகளில் இணைக்க முன்பதாகவே கட்டுரையினைப் படித்து முடித்து விட்டேன் ஐயா,

சிவராம் அண்ணரின் ஆரம்ப கால நினைவுகளையும், அவர் மக்களுக்காகவும், மண்ணுக்காகவும், ஊடகத்திற்காகவும் ஆற்றிய சிறப்புக்களையும் நினைவு கூர்ந்திருக்கிறீங்க.

பலர் வழி தவறுகையில் தனித்திருந்த அவரது பண்பு தான் 2003ம் ஆண்டு கருணா அவர்கள் பிரியும் போது, கருணா மீது நியாயம் கேட்குமளவிற்கு எழுதுகின்ற வகையில் தூண்டுகோலாக அமைந்தது.

இதே சிவராம் அண்ணரின் கொலைப் பின்னணியில் அவரை வளர்த்து விட்ட சிலர் அல்லது அவருடன் கூட இருந்த கட்சியினைச் சேர்ந்தோர் இருந்திருப்பது மிகவும் வேதனையைத் தந்திருக்கிறது.

♔ம.தி.சுதா♔ said...

ஐயா பல தகவல்களை மீள நினைவுபடுத்தியதற்கு நன்றி... இந்த தமிழ் அமைப்புகளின் தலைவர்களுக்குள் இருந்த அதீத திறமையை ஒருங்கெ பயன்படுத்தியிருந்தால் மாலைதீவென்ன அமெரிக்காவுக்கே திட்டம் வகுத்திருக்கலாம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாழ்பட்டுப் போன யாழ் மருத்துவத்துறை (சில நெருடும் உண்மைகள்)

மயிலன் said...

//கடற்கரை முகாம் ஒன்றில் வெட்டிப்போட்ட தென்னைமரக்குற்றியில் உட்கார்ந்து அரசியல், மற்றும் நாட்டுநடப்புக்கள், மட்டுச்சிறையுடைப்பு, நம் முதல் காதலென பலவிடயங்களையும் அந்த இளைஞனுடன் பேசியதாக ஞாபகம்.//

இரங்கல் பதிவு எனினும் இந்த வரியில் இருந்த நடை ஒரு தாக்கத்தை உண்டாக்க தாவவில்லை...

இதுவரை என் அறியாமையால் நான் கேள்விப்பட்டிடாத ஒரு எழுத்தாளரைப் பற்றி அறிந்தேன்..நன்றி..

ஹேமா said...

நானும் இவரைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன்.நினைவு மீட்டலுக்கு நன்றி !

மருதமூரான். said...

மறைந்த சிவராம்....! பல வளர்முக ஊடகவியலாளர்களுக்கான முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். நான் ஊடகச்சூழலுக்குள் பயணிக்க ஆரம்பித்த இரண்டு வருடங்களுக்குள் கொல்லப்பட்டு விட்டார்.

ஆனாலும், ஆய்வுக்கட்டுரைகளின் போக்கு- வீரியம் தொடர்பில் அவர் என்றைக்கு ஆசானாக இருந்தார். இறுதிக்காலங்களில் அவரின் கணிப்புக்கள் சில பிழைத்திருந்த போதிலும்கூட!

எனக்குத் தெரிந்து 90களுக்குப் பின்னர் இலங்கையின் ஆங்கில ஊடகங்களினால் அதிகம் கொண்டாடப்பட்டவர் சிவராம். அதுவும், தமிழ் ஊடகங்களைத் தாண்டிய அளவுக்கு.

சிவராம்....! சிறந்த ஊடக ஆளுமை.

நல்ல பகிர்வு- தங்களின் ஆரம்பகால அரசியலையும் ஓரளவுக்க அறிந்து கொள்ள உதவியது அம்பலத்தார் அவர்களே!!

பி.அமல்ராஜ் said...

வணக்கம் அம்பலத்தார்,

இலங்கையிலே ஊடகத்துறை என எழுத்தாணி தூக்கியவர்களில் அநேகரிற்கு சிவராம் ஒரு சிறந்த முன்னுதாரணம் என்பதை அனைவரும் அறிவர். உண்மையிலேயே ஊடகத்துறைக்கு மிகவும் பொருத்தமான ஆளுமை இவருடையது. கசக்கி வீசப்பட்ட பல தமிழ் புத்தி ஜீவிகளில் சிவராம் என்னில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

நினைவு கட்டுரை அருமை. நன்றிகளும் ஐயா.

அம்பலத்தார் said...

நிரூபன் said...
//வணக்கம் ஐயா,
நீங்கள் திரட்டிகளில் இணைக்க முன்பதாகவே கட்டுரையினைப் படித்து முடித்து விட்டேன் ஐயா,
//
வணக்கம் நிரூ உங்கள் வேகம் பலதடவைகள் பிரமிப்பைத்தந்திருக்கிறது.

அம்பலத்தார் said...

♔ம.தி.சுதா♔ said...
//ஐயா பல தகவல்களை மீள நினைவுபடுத்தியதற்கு நன்றி... இந்த தமிழ் அமைப்புகளின் தலைவர்களுக்குள் இருந்த அதீத திறமையை ஒருங்கெ பயன்படுத்தியிருந்தால் மாலைதீவென்ன அமெரிக்காவுக்கே திட்டம் வகுத்திருக்கலாம்...//
எனக்கும் உங்களது இந்த ஆதங்கமும் கவலையும் இருக்கிறது.

அம்பலத்தார் said...

மயிலன் said...

//இரங்கல் பதிவு எனினும் இந்த வரியில் இருந்த நடை ஒரு தாக்கத்தை உண்டாக்க தாவவில்லை...

இதுவரை என் அறியாமையால் நான் கேள்விப்பட்டிடாத ஒரு எழுத்தாளரைப் பற்றி அறிந்தேன்..நன்றி..//
மயிலன் உங்கள் உற்சாகமூட்டும் வார்த்தைகளிற்கு நன்றி.

பராசக்தி said...

உங்கள் பதிவிலுள்ள சேதிகள், தேவர்மகன் படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்ற வசனத்தை நினைவுபடுத்துகிறது, "ஐயையோ, நான் கொடுத்த பாலெல்லாம் இரத்தமாய் மண்ணில் ஓடுதே" ஈழத்தில் வாழும் அல்லது வாழ்ந்த ஒவ்வொரு தாயினதும் ஈனக்குரல் தானே.

அம்பலத்தார் said...

சிவராம்பறிய உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி மருதமூரான்.
எனது அரசியல் வாழ்வுக்கு வயது அண்ணளவாக 35 ஆகிறது.

அம்பலத்தார் said...

நீங்கள் கூறுவது முற்றிலும் சரிதான் அமல்

அம்பலத்தார் said...

அம்மா பராசக்தி நான் ஞாபகசக்தியிலை கஜனி சூர்யாபோல. ரொம்ப Powerfull. அது என்ன தேவர்மகன் விசயமென்று செல்லம்மாவை கேட்டு அறிந்துகொள்கிறேன்