நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Monday

ஓரினச்சேர்க்கை எனும் ஓரினக்காதலும் நானும்


இன்று நான் சர்ச்சைக்கு உரிய ஒரு விடயத்தை கையில் எடுத்திருக்கிறேன். இதில் குறிப்பிட்ட சம்பவங்கள் உண்மையான போதிலும் பெயர்களையும் சம்பவ களங்களையும் மாற்றியே குறிப்பிட்டுள்ளேன். சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களைத் தேடுவதைவிட்டு சம்பவங்களிற்கான காரணங்களை ஆய்வு செய்யுங்கள். பரந்த அறிவும் பக்குவமான மனதுமுடைய உங்களிடமிருந்து யாருடைய மனங்களையும் நோகடிக்காத கௌரவமான வார்த்தை, கருத்துப் பிரயோகங்களை எதிர்பார்க்கிறேன்.

ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பி ஒன்றிணைவதைக் காதல் எனப்போற்றும் எம்மில் பலரும் ஒரு ஆண் மற்றொரு ஆணை அல்லது ஒரு பெண் மற்றொரு பெண்ணை விரும்பி ஒன்றிணைந்து வாழ முனைவதையும் ஒருவகைக் காதல் என மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்?

ஒரு ஆணிற்கு நல்ல வெள்ளைநிறப் பெண்ணை பிடிக்கிறது. மற்றொருவருக்கு சிலுக்கு, ஷோபா போன்ற கறுப்புநிறப் பெண்ணைப்பிடிக்கிறது. சில பெண்கள் மீசைவைத்த ஆண்களை விரும்புகிறார்கள், இன்னும் சில பெண்கள் ஒல்லியாக இருக்கும் ஆண்களைக் காதலிக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் எம்மால் இந்த ஓரினக் காதலர்களைமட்டும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பது ஏன்?

     நான்  சில  வருடங்களிற்குமுன் பாரிஸ் நகரில் சிலகாலம் தங்கியிருக்க நேர்ந்தது. தெரிந்தவர் யாரும் இன்றி பாரிஸில் சென்று இறங்கிய எனது கைகளில் இருந்தது எனது ஊரைச்சேர்ந்த நண்பர் கொடுத்த அவரது நண்பனின் முகவரிமட்டுமே. முன்பின் தெரியாத அந்த முகவரிக்கு உரியவரைத் தேடிச்செ
ன்றபோது, முன் எப்பொழுதும் என்னை அறிந்திராத அந்த வடமராட்சியை சேர்ந்த அன்பர் சசி என்னை தனது வீட்டில் சிலகாலம் தங்கியிருக்க அனுமதித்தார்.
அந்தவீட்டில் பிரான்சிற்கு புதிதாக வந்த நம்மவர் பலரும் தங்கி இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் சசி தன்னுடன் தங்க இடம், உணவு எல்லாம் கொடுத்து உதவினார். அங்கு தங்கிய காலத்தில் எனக்கு ஒரு விநோதமான அனுபவம் கிடைத்தது. இரவானால் சசி ஜெகன் எனும் நண்பனுடன் ஒரே போர்வைக்குள் புகுந்து கணவன் மனைவிபோல ஒன்றாகப் படுத்துக்கொண்டார்கள். ஆரம்பத்தில் இந்தவிடயம் எனக்குச் சற்று சங்கடமாக இருந்தாலும் சில நாட்களில் என்னால் அவர்களை புரிந்துகொள்ளமுடிந்தது. 

பாரிஸிலிருந்து நான் மீண்டும்  திரும்பியதும் அன்றைய சூழ்நிலையில் அவர்களுடனான நட்பைத் தொடரமுடியவில்லை. நண்ப சசி &
ஜெகன் நீங்கள் எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் இந்தப்பதிவைப் படித்து என்னை அடையாளங்காணமுடிந்தால் தொடர்புகொள்ளுங்கள். உங்கள் மனிதநேய பண்புகளும் என்மீது காட்டிய பரிவும் இன்றும் எனது மனதில் பசுமையான நினைவுகளாக உள்ளன.
மூன்று தசாப்தங்களின் முன்பே உங்கள் வாழ்வைத் தெரிவு செய்வதில் உங்களிற்கு இருந்த தைரியமும் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில் உங்களிற்கு இருந்த துணிவும் இன்றும் எனக்குப் பிரமிப்பைத்தருகிறது. 

சிலமாதங்களிற்குமுன் டென்மார்க்கில் வசிக்கும் எமது குடும்பத்திற்கு மிகவும் நட்பான ஒருவர் தனது மகளிற்கு ஒருவரனைத் தேடி மிகவும் விமர்சையாக திருமணம் முடித்து வைத்தார். ஒருசில மாதங்களிற்குள்ளேயே அந்த இளம் தம்பதினர் விவாகரத்திற்காக நீதிமன்றத்தில், காரணம் அந்த மணமகன் ஓரினக்காதல்ருடன் தொடர்பு வைத்திருப்பது அறிய வந்தமை
.
 
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இளைஞன் ஒருவர் ஓரினகாதல் உறவு வைத்திருப்பது அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. அவரது குடும்பத்தினர் இந்தவிடயத்தை கையாண்டமுறையில் மனமுடைந்த அந்த இளைஞன் தற்கொலைக்கு முயற்சி செய்து காப்பாற்றப்பட்டிருக்கிறார்.
 
ஆயிரம் வருடங்களிற்கு முன்பே காதலையும் காமத்தையும்கூட கலைகளாக மதித்து கோவில்களில் சிற்பங்களாகவும் குகைகளில் ஓவியங்களாகவும் வடித்த நாம் இன்று இந்த விடயத்தில் புரிதல் அற்று இருக்கிறோம்.
 
மூத்தோரே! சமுதாயத்தின் காவலர்களே! இந்த ஓரினக்காதலர்களையும் எமது சமுதாயத்தின் ஒரு அங்கமாக ஏற்றுகொள்வதிலும், அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பதிலும் ஏன் இந்தத் தயக்கமும் வரட்டுக் கௌரவமும். உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடுத்தவர் மதிக்கவேண்டும் என எண்ணுவதுபோல அடுத்தவரையும் அவர்களது குணாம்சங்களுடன் ஏற்றுக்கொள்ள மறுப்பது தவறாகத் தெரியவில்லையா?

இளையோரே! நீங்கள் முறைமாறிக் காதல் கொ
ள்வதற்காக வெட்கப்படவோ கூச்சப்படவோ வேண்டியதில்லை.உங்கள் உடலில் உள்ள மரபியல் கோளாறு அல்லது ஹோர்மோன் சுரப்பிகளில் உள்ள மாறுபாடே மாற்றத்திற்கான காரணம்.  இயற்கையின் விதம்விதமான படைப்புகளில் இதுவும் ஒன்று. அதை ஒத்துக்கொள்ளத் தயங்கி உங்கள் வாழ்வையும் உங்களைச் சூழ உள்ளவர்களின் வாழ்வையும் சிக்கல் மிகுந்த நரகமாக மாற்றவேண்டாம். உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரும் தன் இயல்பு மாறாமல் சந்தோசமாக வாழவே படைக்கப்பட்டிருக்கிறது. உங்களையும் எமது சமுதாயத்தின் அங்கமாக ஏற்றுக்கொள்ள என்னைப்போன்ற ஆயிரம் ஆயிரம் நல்ல இதயம் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.  தயக்கம் வேண்டாம். உங்கள் மனதை உங்கள் நண்பர்களுடன் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
 
பேசவேண்டியவற்றை பேசாப்பொருட்களாக மனதில் வைத்துப் பூட்டாமல் மனம் திறந்து பேசுவோம். பேசிப் பேசி முரண்களைக் களைவோம். ஆரோக்கியமான கருத்துப் பகிர்வுகளால் நல்லதொரு சமுதாயம் படைப்போம்.


நேசமுடன் அம்பலத்தார்

60 comments:

ப.கந்தசாமி said...

இயற்கை சில விதி முறைகளுக்குட்பட்டு செயல் புரிகிறது. அந்த நியதிகளில் இனப்பெருக்கம் ஒரு முக்கியமான பங்கு வகிக்கின்றது. இந்த இனப்பெருக்கம் இல்லாவிடில் உலகம் அழிந்து போகும். சில கண்ணுக்குத் தெரியாத உயிரினங்கள் (ஓரணுவைச்சார்ந்தவை) தவிர மற்ற எல்லா உயிரினங்களும் ஆண்-பெண் என்று இரண்டு வகையாகப் பிரிந்துள்ளன.

இவைகளில் ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் இன விருத்தி செய்ய இயற்கை வழி வகுத்திருக்கிறது. ஆகவே இந்த இருபாலருக்கும் இடையே இயற்கையான உடல் கவர்ச்சியை ஹார்மோன்கள் ஏற்படுத்துகின்றன.

மேலும் ஆணும் ஆணும், அல்லது பெண்ணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்கள் குணவிசேஷங்களால் ஈர்ப்பு கொள்வது நட்பு எனப்படுகிறது. ஆனால் உடல் உறவு என்பது ஆண்-பெண்ணுக்கு இடையில்தான ஏற்பட்டு அதனால் உலகம் வளர்கிறது என்பது இயற்கை விதித்துள்ள விதி.

நட்பை உடலுறவிற்காக மாற்றுவது இயற்கைக்கு மாறான வழி என்று நமது கலாச்சாரத்தில் வைத்திருக்கிறோம். ஆகவே அந்த மாதிரி உறவுகளை ஏற்றுக்கொள்ள சமூகத்தில் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். இதை நியாயப்படுத்தினால் உலகின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்ய முடியவில்லை. ஒருக்கால் குளோனிங்க் மூலம் இனப்பெருக்கம் நடக்கலாம்.

ஆனால் இது மொத்தத்தில் முற்றிலும் புதிய கலாச்சாரம். இது நல்லதா அல்லது கெடுதலா என்பதை காலம்தான் முடிவு செய்யும்.

Anonymous said...

நான் கடந்த தலைமுறை.. என்னை பொறுத்தவரை அது சாவான பாவம்..வாழ்த்துக்கள்..

K.s.s.Rajh said...

உங்கள் பதிவு அருமை
ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு முரணானது என்பது என் கருத்து....

கவி அழகன் said...

என்னத்த சொல்ல எல்லாம் சூல்நிளையாள வந்த வினை
ஊரில இப்படி நடக்குமோ

BOOPATHY said...

இது சரியா தவறா என்பதை விவாதிப்பதை விட இப்படியும் நடக்கின்றது எனபதை நீங்கள் சொல்லியிருக்கும் விதம் மிகவும் அழகானது
அதற்காக எனது மனம் நிறைந்த பாராட்டுகள். பெண்ணுடன் பெண்ணோ இல்லை ஆணுடன் ஆணோ உறவு கொள்வதென்பது என்னைப் போல் உள்ளவர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாதது.
ஆனால் அவர்களுக்கு முடிகின்றது அதை மதித்து அவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

Anonymous said...

aan

Surya Prakash said...

சில விதிகளை நாம் மீறாமல் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து ,ஒரு ஆண் ஒரு பெண் இதுவே குடும்பம் , ஆணுக்கு ஆணோ ,ஒரு பெண்ணுடன் மற்றொரு பெண்ணோ சேர்ந்து வாழ்வது எதிர்காலத்தில் மனிதன் என்ற ஒரு உயிரினம் கேள்விக்குறியாகிவிடும் ......

முஹம்மது ஜலீல் said...

இன்று இதை அனுமதித்தால் நாளை நாயையும் கழுதையையும் திருமணம் செய்துக்கொண்டு வந்து நிற்பார்கள்..

Unknown said...

நீங்கள் பதிவு செய்த விதம் அருமை! சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே தெளிவாக முடிவெடுக்க வேண்டும்!

நிரூபன் said...

வணக்கம் ஐயா,
நலமாக இருக்கிறீங்களா?
உண்மையில் நல்லதோர் கட்டுரையினைத் தந்திருக்கிறீங்க.
எம் சமூகத்தில் ஓரினச் சேர்க்கை பற்றிய புரிதலின் இன்றைய நிலையினையும், நாம் ஓரினச் சேர்க்கையாளர்களை எவ்வாறு மதிக்கப் பழக வேண்டும் எனும் விடயத்தினையும் தாங்கள் பெற்றுக் கொண்ட அனுபவ வெளிப்பாடாகப் பகிர்ந்திருக்கிறீங்க.

எம் மூன்றாவது தலை முறையிடம் ஓரினச் சேர்க்கை பற்றிய புரிதல்கள் அதிகளவில் உள்ளன என்றே நினைக்கிறேன்! காலப் போக்கில் அனைத்தும் மாறும்! இவற்றினைப் புரிய வைக்கும் வகையில் பெரியவர்களும், தமிழ் அறிஞர்களும் தான் முயற்சி எடுக்க வேண்டும்!

காட்டான் said...

வணக்கம் அம்பலத்தார்!
எனது வேலைத்தலத்தில் 25வருடங்களாக குடும்பமாய் வாழும் ஒரின செயற்கையாளருடன் வேலை செய்கிறேன். ஆரம்பத்தில் இங்கு வந்த புதிதில் எனக்கும் "அது" வித்தியாசமாகத்தான் இருந்தது..!! 

சிலர் இதை இயற்கைக்கு முரண் என்கிறார்கள்.. அது சுத்த பேத்தலே!!ஏனெனில் ஒருவர் கருவில் இருக்கும் போதே அவரின் பாலியல் உணர்வுகளும்  உருவாகின்றது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது...!!!

காட்டான் said...

முஹம்மது ஜலீல் said...
இன்று இதை அனுமதித்தால் நாளை நாயையும் கழுதையையும் திருமணம் செய்துக்கொண்டு வந்து நிற்பார்கள்..
15 November 2011 08:34

ஹா ஹா ஹா சிரிச்சு வயிறு வலிக்குதுங்கோ ஜலீல்.. பதிவு முழுதும் வாசித்தீர்களா..???

dr.tj vadivukkarasi said...

இதன் பின்னால் உள்ள அறிவியல் பிரமிப்பானது. எனினும்,அறிவியல் கோட்பாடுகள் எப்போதும் மாற்றத்திற்கு உட்பட்டவையே. ஆதலால் பின்னொரு நாள் தான் சொல்வதையெல்லாம் அறிவியல் வாபஸ் வாங்கிக்கொள்ளலாம். ஆனால் நம் பிரச்சனை அதுவல்ல. மனிதர்களை உள்ளபடியே நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா..என்பதையே நாம் பார்க்க வேண்டும். உங்கள் கட்டுரை அந்த விதத்தில் அருமை. இவர்களை ஏற்றுக் கொள்வதால் காலாச்சார சீரழிவெல்லாம் வந்து விடாது. இது போன்ற para-normal ஆசைகள் (கவனிக்கவும் நான் abnormal என்று கூறவில்லை) பொதுவில் மிகச் சிலருக்கே வரும். அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளலாமே. அது தான் மன முதிர்ச்சி. இதில் நமக்கு பிரச்சனை இருக்குமென்றால் நாம் தான் abnormal.

தனிமரம் said...

நல்ல ஒரு விடயத்தை  சொல்லியிருக்கும் பதிவு பலர் இந்த விடயத்தில் சமுககட்டமைப்புக்குள் நின்று விவாதிப்பது சரியல்ல ஒவ்வொருத்தர்  விருப்பத்தையும் மதிக்கனும் முற்போக்கு எண்ணம் என்றுவிட்டு சமுகத்தில் விருப்பம் இல்லாதவர்களை ஒன்றினைத்தால் விவாகரத்துதான் அதிகமாகும்  நான் அவர்களின் உரிமையை ஆதரிக்கின்றேன்!

Angel said...

//பேசவேண்டியவற்றை பேசாப்பொருட்களாக மனதில் வைத்துப் பூட்டாமல் மனம் திறந்து பேசுவோம். //

நீங்க தந்த தைரியத்தில் எனது கருத்துக்களை கூறுகிறேன்

ஐயா நான் இந்த தலைமுறைதான் .நான் வளர்க்கப்பட்ட விதத்தில் எனக்கு கற்பிக்கப்பட்டது அது பாவம் . எனக்கு தவறென்று படுகிறது .அப்படியான யாரையேனும் சந்தித்தால் நிச்சயம் அவர்களை புண்படுத்தும் விதத்தில் நடந்துகொள்ளாமல் அவர்களையும் மதித்து நடப்பேன் இப்ப நான் இருக்கும் நாட்டில் இதை ஆதரிக்க ஆங்கலிக்கன் சபை முதல் எவ்ளோ பேர் இருக்காங்க ..இங்கே ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சியில் கூட இவற்றை ஆதரித்து அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும்படி ப்ரோக்ராம்ஸ் செய்கிறார்கள் .ஆனால்இயற்க்கைக்கு மாற்றாக எதை செய்ய முற்பட்டாலும் பாதகமே என்பது என் கருத்து .ஒருவர் மனமும் புண்படாதவாறு அருமையாக பதிவை தந்ததற்கு வாழ்த்துக்கள் .

Angel said...

//பேசவேண்டியவற்றை பேசாப்பொருட்களாக மனதில் வைத்துப் பூட்டாமல் மனம் திறந்து பேசுவோம். பேசிப் பேசி முரண்களைக் களைவோம். //

நீங்க தந்த தைரியத்தில் மீண்டும் எனது கருத்துக்களை கூறுகிறேன்
சமீபத்தில் ஒரு பெண்மணி மருத்துவமனையில் சந்தித்தேன் .தற்கொலை முயற்சி //ஆனால் காப்பாற்றப்பட்டுவிட்டார் ..காரணம்....
அவர் கணவனை இழந்தவர் ஒரே மகளை மேற்படிப்புக்கு இங்கு அனுப்பியிருக்கிறார் மற்ற இரண்டு மகன்களும் இங்கே தான் திருமணம் முடித்து குடும்பமாக .சகோதரியை இவர்களுடன் வைக்காமல் நண்பிகளுடன் விட்டிருக்காங்க .
காலபோக்கில் நண்பியே எல்லா உதவியையும் செய்ய மகளுக்கு நண்பியே துணையாகிவிட்டார்.அதனால் இங்கே ஜீன்ஸ் எல்லாம் காரணமில்லை உதவாக்கரை சகோதரர்கள் மற்றும் வெளிநாட்டில் போனா நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற தாயின் எண்ணமே மட்டுமே அந்த பெண் இந்த நிலைக்கு வர காரணம் .அதை அந்த பெண்ணே சொல்கிறார் அவரது கஷ்ட நாட்களில் பணவுதவி செய்தது நண்பி தான் அதனால் அவர பிரியமாட்டேன் என்று .ஊரிலிருந்து மகளை பார்க்க வந்த தாய் தாங்க முடியாமல் தற்கொலை முயற்சி செய்திருக்கிறார் மொழிபெயர்ப்புக்கு சென்றதால் தெரிந்தது .இதற்க்கு அவகளுக்கு கவுன்சலிங் செய்து அனுப்பினார்கள் .

Angel said...

தவறாக எதாவது கூறியிருந்தால் என்னை மன்னிச்சி விட்டுருங்க .
நான் கொஞ்சம் இல்லை ரொம்பவே பயந்த சுபாவம்

திருமகள் said...

வணக்கம் அம்பலத்தார்.
அண்மையில்தான் உங்கள் வலைப்பூவை படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதிகம் பேசப்படாத பேசத்தயங்கிய விடயத்தை கையில் எடுத்திருக்கிறீர்கள் !
பெருகிவரும் ஓரின மற்றும் இருபாலினச்சேர்க்கையாளர்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது இது பற்றிய பதிவுகள் கலந்துரையாடல்கள் ,விவாதங்கள் மிகவும் அவசியம்.
ஆரம்பத்தில் சில வருடங்களுக்கு முன்புவரை இது என்னடா கலிகாலம் என்றுதான் எனக்குத் தோன்றியது. அவர்களின் உளவியல்ரீதியான உளைச்சல் உணர்வுகள் வலி ஒடுக்குமுறை என பலவிடயங்களையும் கேள்விப்படும் , அறியும் சந்தர்ப்பங்கள் எனது வேலை நிமித்தமாக எனக்கு ஏற்பட்டது.
ஓரினச்சேர்க்கைக்கு நியூக்ளியோட்டைடு வேறுபாடு , குரோமோஸோம் பிரதேசத்துக்குள் இருக்கும் ஒரு மரபணுவிலுள்ள வேறுபாடு காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுவதோடு இதுபற்றிய ஆராய்சிகளும் தொடர்கின்றன . ஓரினச்சேர்க்கைக்கு உயிரியல் காரணிகளை விட சமூக உளவியல் காரணங்களும் காரணமாக இருக்கலாம் .
இதுபற்றிய குற்றஉணர்ச்சி சமூகம் தம்மை ஒதுக்கிவிடுமோ ,பெற்றோரை உறவினரை இழந்து விடுவோமோ என்ற பயத்தின் காரணமாக ஓரின சேர்க்கையாளர்கள் பிறருக்காக ஒரு பெண்ணை திருமணம் செய்கின்றனர் . ஆனால் அவர்களால் அப்பெண்ணுடன் இயல்பாக வாழமுடியாது போகும்போது மிகவும் பாதிப்படைவது அப்பெண்ணும் ,பெண்ணின் குடும்பமும்தான்!!
எமது சமுகம் ஓரினச்சேர்க்கையாளர்களை தீண்டத்தகாதவர் போல பிரித்து வைத்திருக்காதிருந்திருந்தால் இத்தகைய துரோகங்கள் நடந்திருக்கப் போவதில்லை... இனியாவது நடக்காது தடுப்பது எமது சமுகத்தின் கடமை !!
ஃபயர் (Fire) (1996 ஆம் ஆண்டு தீபா மேத்தா இயக்கத்தில் வெளிவந்த திருமணம் செய்த இரண்டு பெண்களுக்கிடையிலான தன்னினச் சேர்க்கை உறவை விளக்கும்) பட ம் , மற்றும் சியாம் செல்வதுரை எழுதிய Cinnamon Gardens என்கிற நாவலை முடிந்தவர்கள் வாசித்து பாருங்கள் ( 1920 களி லேயே ஒரு பெண்ணிற்கு மணமுடித்துவைக்கப்பட்ட ஓரினச்சேர்க்கையாளனின் கதை)
வலியுறுத்தல் ஏதுமின்றி நடைபெறும் பட்சத்தில் ஓரினச் சேர்க்கை தவறில்லை , அவர்களின் விருப்பத்தைத் தடுக்க யாருக்கும் உரிமையில்லை என்று ஓரினச் சேர்க்கை மீதான தடையை நீக்கிய நாடுகளின் பட்டியலில் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் மிக்க நாடாகக் கருதப்படும் இந்தியாவும் தன்னை 127வது நாடாக இணைத்துக் கொண்டுள்ளதையும் இங்கு குறிப்பிடலாம் என நினைக்கிறேன் !!

Anonymous said...

ஊசி முனையில் நடப்பது போல, கஷ்டமான விடயத்தை அனாசயமாக ஊதிதள்ளி விட்டியள் அம்பலதாரே.//இயற்கையின் விதம்விதமான படைப்புகளில் இதுவும் ஒன்று.//
அவனன்றி ஓர் அணுவும் அசையாதென்று சொல்லும் முன்னோர்கள், உடலில் அசைந்த ஒரு செல்லின் வெளிப்பாடாக இதை ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.

Anonymous said...

திருமகள் அவர்களின் பின்னூட்டம் பார்க்காமலே நானும் எழுத நினைத்ததை அவர் எழுதியுள்ளார். நன்றி அம்பலத்தார். நன்றி திருமகள்

சம்பத்குமார் said...

வணக்கம் நண்பரே..

//DrPKandaswamyPhD said...

ஆணும் ஆணும், அல்லது பெண்ணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்கள் குணவிசேஷங்களால் ஈர்ப்பு கொள்வது நட்பு எனப்படுகிறது. ஆனால் உடல் உறவு என்பது ஆண்-பெண்ணுக்கு இடையில்தான ஏற்பட்டு அதனால் உலகம் வளர்கிறது என்பது இயற்கை விதித்துள்ள விதி. //

இதே கருத்துதான் என்னுடையதும் கூட..

என்னிம் மாறி வரும் உலகத்தில் சமூக மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன..

இந்த விஷயமும் விவாதிக்க வேண்டியவையே..

shanmugavel said...

உலகம் முழுதும் 5 சதவீதம் இப்படி இருக்கிறார்கள் என்கிறது ஆய்வு.ஏற்றுக்கொள்வதே சரி.

shanmugavel said...

உலகம் முழுதும் 5 சதவீதம் இப்படி இருக்கிறார்கள் என்கிறது ஆய்வு.ஏற்றுக்கொள்வதே சரி.

ஹேமா said...

உண்மையில் அருவருப்பான ஒரு விஷயத்தைப் பக்குவமாக எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள் !

அம்பலத்தார் said...

DrPKandaswamyPhD, உங்கள் முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி. கணிதமோ, விஞ்ஞானமோ, வாழ்வியலோ எப்பொழுது விதி என்று ஒன்று உருவாக்கப்படுகிறதோ அப்பொழுதே விதிவிலக்கு என்பதுவும் தோன்றிவிடுகிறது. விதிகளை ஏற்றுக்கொள்ளும் நாம் விதிவிலக்குகளையும் ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்பதுதானே நியாயமானது.

அம்பலத்தார் said...
This comment has been removed by the author.
அம்பலத்தார் said...

ரெவெரி,கவி அழகன்,ராஜ் பல சந்ததி சந்ததியாக எம்மில் ஊட்டிவிடப்பட்டுள்ள கோட்பாடுகளை திடீரென மாற்றிக்கொள்வது கடினம்தான், ஆனால் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் மாற்றத்திற்கான முதலடியை எடுத்து வைக்கத்தானே வேண்டும். அந்த முதலடியை இப்போ எடுத்துவைப்போம் என்றுதான் கேட்கிறேன்.

*anishj* said...

நீங்கள் மிகத்தெளிவாக எழுதியுள்ள இந்த பதிவை படித்த பிறகும் கூட ஓரினச்சேர்க்கை என்பது, இயற்கைக்கு முரணான, அருவருப்பான, பாவம் என்றே எனக்கு தோன்றுகிறது !

நன்றி !!

அம்பலத்தார் said...

வணக்கம் பூபதி, முதல்முதலாக வருகைதந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். பாராட்டுகளிற்கு நன்றி. ஓரினக்காதலர்களை மதித்து அங்கீகரிக்கும் உங்கள் மனநலை மகிழ்வுதருகிறது.

அம்பலத்தார் said...

Surya Prakash, இவர்கள் விதிகளைத் தாங்கள் மீறவேண்டுமென்பதற்காக வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை. இயற்கையின் ஒரு விதிவிலக்கே இதற்கான மூலகாரணம்.

அம்பலத்தார் said...

முஹம்மது ஜலீல் said...
//இன்று இதை அனுமதித்தால் நாளை நாயையும் கழுதையையும் திருமணம் செய்துக்கொண்டு வந்து நிற்பார்கள்..//
முதலில் உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றிகள். ஜலீல் நீங்கள் இந்தவிடயத்தை தவறாகப் புரிந்துகொண்டீர்கள் போலத்தெரிகிறது. எனது பதிவின் இறுதிப் பகுதியையும், Dr.வடிவுக்கரசி, திருமகள் ஆகியோரது பின்னூட்டங்களையும் படித்துப்பார்த்தீர்களாயின் இந்த விடயம் சம்பந்தமான அறிவியல்ரீதியான உண்மையை அறிந்துகொள்ளமுடியும்.

அம்பலத்தார் said...

ஜீ
// சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே தெளிவாக முடிவெடுக்க வேண்டும்!//
மிகவும் சுருக்கமான தெளிவான கருத்து.

அம்பலத்தார் said...

Dr. வடிவுக்கரசி உங்கள் நேர்த்தியான அறிவியல்ரீதான கருத்துப்பகிர்விற்கு நன்றிகள்.

அம்பலத்தார் said...

வணக்கம் நிரூபன், எப்பொழுதும் எனது நலனில் அக்கறைகொண்டு நலம் விசாரிக்கும் உங்கள் அன்புள்ளத்திற்குத் தலைவணங்குகிறேன். இளையோரிடம் உண்டாகிவரும் புரிதல் மகிழ்ச்சிதருகிறது.
அதுசரி வயதுபோன நாங்கள்தான் செய்யவேணுமென்று எங்களில் பாரத்தைச் சுமத்திவிட்டு எஸ்கேப் ஆகாமல் இளைஞர் நீங்கள்தான் முன்னின்று மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும்

அம்பலத்தார் said...

//சிலர் இதை இயற்கைக்கு முரண் என்கிறார்கள். அது சுத்த பேத்தலே!!ஏனெனில் ஒருவர் கருவில் இருக்கும் போதே அவரின் பாலியல் உணர்வுகளும்...//
வணக்கம் காட்டான், காட்டமாக கத்தினாலும் நியாயமாகத்தான் சொல்லுறியள்.

அம்பலத்தார் said...

//ஹா ஹா ஹா சிரிச்சு வயிறு வலிக்குதுங்கோ ஜலீல்.. பதிவு முழுதும் வாசித்தீர்களா..???//
காட்டான் காட்டாந்தான்.

அம்பலத்தார் said...

//விருப்பம் இல்லாதவர்களை ஒன்றினைத்தால் விவாகரத்துதான் அதிகமாகும் நான் அவர்களின் உரிமையை ஆதரிக்கின்றேன்!//
தனிமரம், உங்க ஆதங்கம் புரிகிறது

அம்பலத்தார் said...

வணக்கம் அஞ்ஜெலின், எனது எழுத்துக்கள் உங்கள் மனதி தன்நம்பிகையையும் தைரியத்தையும் ஏற்படுத்தியிருந்தால் அதைவிடச் சந்தோசம் வேறு என்ன இருக்கமுடியும். சரியெனப்படும் கருத்தை எந்த இடத்திலும் துணிந்து சொல்லும் தைரியத்தை ஒவ்வொருமனிதரும் கட்டாயம் வளர்த்துக்கொள்ளவேண்டும். இந்த ஓரினக்காதலர்கள்மீதான உங்களது மனிதாபிமானம் மிக்க புரிந்துணர்வை அறிந்துகொள்ளமுடிகிறது.

Anonymous said...

மதில் மேல் பூனையை நிற்கும் புலம் பெயர்ந்தோர் தான் முடிவெடுக்க சிரமப்படுகிறார்கள், தற்போது பதின்ம வயதிலிருக்கும் பிள்ளைகளுடன் உரையாடியதில், அவர்கள் இந்த விடயத்தில் நல்லதொரு புரிந்துணர்வில் இருக்கிறார்கள். எனவே அம்பலத்தார் கவலை வேண்டாம் , நாளைய உலகம் , இந்த சேர்க்கையை அனுசரிக்கும் ஆதரவாக நடத்தும்.

அம்பலத்தார் said...

சகோ.அஞ்ஜெலின் நீங்கள் கூறுவதுபோல சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் இந்த நிலைக்குத்தள்ளப்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சுற்றுச்சூழல் ஒருவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தவில்லையா? அதேபோல தனக்கு உதவி செய்தவரை மறுக்கமுடியாமலும் அந்தப்பெண் ஆரம்பத்தில் இதற்குச் சம்மதித்து அதுவே தொடர்ந்திருக்கலாம்.

அம்பலத்தார் said...

சகோ.அஞ்ஜெலின், இங்கு நாங்கள் ஒவ்வொருவரும் தனக்குத்தெரிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். சரியானதை ஏற்றுக்கொள்கிறோம். தவறைத் திருத்திக்கொள்ள முற்சிக்கிறோம். அவ்வளவுதான்.எல்லாம் அறிந்தவனும் யாருமில்லை. ஒன்றும் அறியாதவனும் யாரும் இல்லை. இதில் யாரை யார் மன்னிப்பது.பேச நினைப்பதை பேச தயக்கம் வேண்டாம்.

அம்பலத்தார் said...

அம்மா தாயே திருமகள், முதமுதலா வந்து இவ்வளவு தெளிவான கருத்துக்களை முன்வைத்தது மகிழ்ச்சிதருகிறது. உங்க பின்னூட்டத்திலேயே நீங்கள் மருத்துவ மற்றும் பொதுவான பரந்த அறிவுமிக்கவர் என்பதுவும் அரோக்கியமான நமது சமுதாயம் நோக்கிய தேடல் ஊள்ளவர் என்பதுவும் புரிகிறது. தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். நன்றி.

அம்பலத்தார் said...
This comment has been removed by the author.
அம்பலத்தார் said...

வணக்கம் பெயரிலி,
//ஊசி முனையில் நடப்பது போல, கஷ்டமான விடயத்தை அனாசயமாக ஊதிதள்ளி விட்டியள்//
ரொம்பவும் ஐஸ் வைக்காதீர்கள் ஏற்கெனவே winter தொடங்கிவிட்டது ஜலதோசம் பிடித்தால் கதை கந்தலாகிவிடும்.

அம்பலத்தார் said...

Anonymous said...
//திருமகள் அவர்களின் பின்னூட்டம் பார்க்காமலே நானும் எழுத நினைத்ததை அவர் எழுதியுள்ளார்....// இருவரது எண்ணங்களும் ஒத்த அலைவரிசையில் பயணிப்பது புரிகிறது. ஒத்த எண்ணங்கள்கொண்டவர்கள் நண்பராக இணைந்துகொள்வது இலகுவானது. இருவரும் நட்புக்கொள்ள்வது நல்லதென நினைக்கிறேன்..

அம்பலத்தார் said...

வணக்கம் Anonymous , நீங்கள் ஆணோ பெண்ணோ ஒருவரோ பலரோ புரியவில்லை. ஆனால் அடிக்கடி வந்து சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் நல்லபல கருத்துக்களை முன்வைக்கிறீர்கள். வாழ்த்துக்களும் நன்றியும். நீங்கள் உங்கள் சொந்தப் பெயரிலோ அன்றி புனை பெயரிலோகூட எழுதலாம். அப்படி எழுதினால் இங்கு கருத்துக்களைப் பகிரும் நாங்கள் எல்லோரும் நீங்கள் ஒருவரா பலரா என அறிந்துகொள்ளவும் உங்களுடனும் புரிந்துணர்வையும் நட்பையும் உண்டுபண்ணவும்முடியும். தயக்கமோ பயமோ வேண்டியதில்லை இங்கு எனது வலைப்பூவில் பதிவிடும் அனைவரும் பரஸ்பரம் நல்ல புரிந்துணர்வும் நட்பும் நல்லதொரு சமுதாயம் நோக்கிய தேடலும் கொண்டவர்கள். நீங்களும் எம்முடன் கைகோர்த்து நடக்கமுன்வருவது எங்கள் எல்லோருக்கும் மகிழ்வே.

அம்பலத்தார் said...

வணக்கம் சம்பத்குமார், புரிந்துணர்வுடன்கூடிய உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள்.

அம்பலத்தார் said...

shanmugavel said...
//உலகம் முழுதும் 5 சதவீதம் இப்படி இருக்கிறார்கள் என்கிறது ஆய்வு.ஏற்றுக்கொள்வதே சரி.//
நச்சென ஒரேவரியில் ஆணித்தரமான பின்னூட்டம் வாழ்த்துக்கள்.

அம்பலத்தார் said...

//உண்மையில் அருவருப்பான ஒரு விஷயத்தை...// இங்கு இந்தவிடயத்தில் நான் முரண்படுகிறேன். சீனாக்காரன் நத்தையையும், நாயையும் உணவாக விரும்பி உண்ணுகிறார்கள் எமக்கு அது அருவருப்பாக இருக்கிறது. நாம் வெறும் கைகளினால் உணவு உண்பதை மேலைத்தேசத்தவர் பலரும் ஆதிவாசிகளின் செயல்போல ஏளனமாகவும் அருவருப்பானதாகவும் பார்க்கிறார்கள். ஆனால் எமக்கு அது சாதாரணமான செயலாகத் தெரிகிறது. இந்த விருப்பு வெறுப்புகள் பல நூற்றாண்டுகாலமாக அவரவர் மரபணுக்களில் பதியப்பட்டுள்ள விடயங்கள். அதுபோலத்தான் இதுவும் உலகின் பெரும்பான்மையான உயிரினங்களின் மரபணுக்களிலும் மாற்றுப்பாலினர்மீதான ஈர்ப்பிற்குரிய விடயங்கள் பதியப்பட்டிருக்கும். ஆனால் ஓரினக்காதலர்களின் மரபணுக்களில் இது மாறியிருக்கும். உங்களுக்குமட்டுமன்றி எம்மில் மிகப்பெரும்பான்மையினருக்கும் ஒரே பாலினருடன் உறவுகொள்வதென்பது நினைத்துப்பார்க்க முடியாததுதான். அதேபோலத்தான் ஓரினக்காதலர்களுக்கும் மாற்றுபாலினருடன் இணைவதென்பது நினைத்துப்பார்க்கமுடியாததாக இருக்கலாம் அல்லவா?

அம்பலத்தார் said...

ஹேமாவின் பின்னூட்டத்திற்கே மேலே கருத்துக்கூறினேன். தவறுதலாக பெயரைக்குறுப்பிட மறந்துவிட்டேன்.

Unknown said...

some people do things that may not be a rightous act in the eyes of society.


let me ask you some thing, you have a son or daughter? if they touch the fire or do some thing that could harm them, what are you going to say to them? (if they are unaware if the situation they are getting in to)
1, tell them do as you wish as you choose that?
2, touch the fire and tell them, "see i am burning, this is what will happen to you"?
3, just try to stop them what ever the way it may be?

you choose and you will see what you are and where you stand.

it is as simple as that. it is your forfathers experience that runs in our cells that tells us which is right and wrong.

some just dont understand it for a while, just because they dont understand, doesnt mean they shall be left alone in harms way to feel the pain and see for themselfs.

you can say this is not harm any one, truth is clinically proven that it will, and they are negleted in a socity that is not made of just fools.

அம்பலத்தார் said...

*anishj* said...
//நீங்கள் மிகத்தெளிவாக எழுதியுள்ள இந்த பதிவை படித்த பிறகும் கூட ஓரினச்சேர்க்கை என்பது, இயற்கைக்கு முரணான, அருவருப்பான, பாவம் என்றே எனக்கு தோன்றுகிறது !//
அனிஷ் மேலே ஹேமாவிற்கு நான்கூறிய கருத்தை படித்துப்பாருங்கள். புரிதல் ஏற்படலாம்.

அம்பலத்தார் said...

Anonymous said...
....// தற்போது பதின்ம வயதிலிருக்கும் பிள்ளைகளுடன் உரையாடியதில், அவர்கள் இந்த விடயத்தில் நல்லதொரு புரிந்துணர்வில் இருக்கிறார்கள். எனவே அம்பலத்தார் கவலை வேண்டாம் , நாளைய உலகம் , இந்த சேர்க்கையை அனுசரிக்கும் ஆதரவாக நடத்தும்.//
ஆம் நீங்கள் சொல்வது சரிதான். இங்கு வாழும் எமது இளையோரிடம் இந்தவிடயம்பற்றிய பரந்த அறிவும் புரிதலும் நிறையவே இருக்கிறது. இந்தப்பதிவை எழுதுவதற்கு ஒரு சிலநாட்கள் முன்பு எங்களது வீட்டில் இந்தவிடயத்தைக் கதைத்துக்கொண்டிருந்த போது இருபது வயதுகூட நிரம்பாத எனது மகள் கூறிய விடயங்கள், கருத்துக்களை கேட்க எனக்கு சந்தோசமாக இருந்தது அவளிடம் இந்தவிடயத்தில் என்னைவிட அதிக அறிவும் புரிதலும் இருந்தது. நிச்சயமாக அடுத்துவரும் சந்ததி எல்லாவிடயங்களிலும் எம்மைவிட பரந்த அறிவும் புரிதலும் மிக்கவர்களாகவே இருப்பார்கள்

அம்பலத்தார் said...

Sheik Mohammed said...
//some people do things that may not be a rightous act in the eyes of society.
let me ask you some thing, you have a son or daughter? if they touch the fire or do some thing that could harm them, what are you going to say to them? (if they are unaware if the situation they are getting in to)
1, tell them do as you wish as you choose that?
2, touch the fire and tell them, "see i am burning, this is what will happen to you"?
3, just try to stop them what ever the way it may be?

you choose and you will see what you are and where you stand.

it is as simple as that. it is your forfathers experience that runs in our cells that tells us which is right and wrong.

some just dont understand it for a while, just because they dont understand, doesnt mean they shall be left alone in harms way to feel the pain and see for themselfs.

you can say this is not harm any one, truth is clinically proven that it will, and they are negleted in a socity that is not made of just fools.//
வணக்கம் முகமட், முதலில் உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றிகள். எனது இந்த வலைப்பூ தமிழில் தமிழ் தெரிந்தவர்களுக்காக எழுதப்படுவதால் தமிழிலேயே பதில் எழுதுகிறேன். நீங்கள் நினப்பதுபோல இது ஒன்றும் தனது விருப்பத்திற்கேற்ற ஒரு சட்டையை அல்லது வேறு எதோ ஒருபொருளை வாங்குவதுபோன்ற விடயம் இல்லை. ஒருவர் பிறப்பதற்கு முன்பே கருவில் உருவாகும்போதே அவரது நிறம் என்ன, கண்களின் நிறம் எதுவாக இருக்கவேண்டும்..... என்பதுபோன்ற பல விடயங்களும் அவரது மரபணுக்களினால் தீர்மானிக்கப்பட்டுவிடும். அதுபோலத்தான் இந்தவிடயமும் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு உதாரணத்திற்கு நீங்களோ நானோ எவ்வளவுதான் முயன்றாலும் எங்களால் இன்னுமொரு ஆணை காதலிக்கவோ ஆணுடன் உறவுகொள்ளவோ முடியாது. அந்தவிவிடயத்தின்மீதான வெறுப்பு அல்லது அருவருப்பு நாம் கருவில் உருவாகும்போதே எழுதப்பட்டுவிட்டது. அதுபோலத்தான் அவர்களுக்கும் அவர்களால் ஒரு மாற்றுப்பாலினரை காதலிக்கவோ உறவுகொள்ளவோ முடியாது என்பது கருவிலேயே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அதை நாமும் புரிந்துகொண்டு அவர்களை மதிக்கவும் புரிந்துகள்ளவும் முற்சிக்கவேண்டும்.

ம.தி.சுதா said...

ஐயா,

வடமராட்சியா... ஐயோ நான் உந்தப் பக்கம் வந்ததே இல்லையே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

காட்டான் said...

வணக்கம் அம்பலத்தார்!
அருமையாய் இருக்கு அம்பலத்தார் பக்கம்.. என்னையும் குறிப்பிட்டதற்கு நன்றி! நன்றி!!

அம்பலத்தார் said...

காட்டான் said...

//வணக்கம் அம்பலத்தார்!
அருமையாய் இருக்கு அம்பலத்தார் பக்கம்.. என்னையும் குறிப்பிட்டதற்கு நன்றி! நன்றி!!//
நன்றி நான் தான் உங்களிற்குச் சொல்லவேண்டும். உங்களைப்போன்ற நல்ல உள்ளங்களின் நட்புக்கிடைக்க கொடுத்துவைத்திருக்கவேணும்.

Anonymous said...

பால் காய்சியாச்சா..புது ஊட்ல..? வாஸ்து எல்லாம் நல்லா இருக்கு...-:)

வாழ்த்துக்கள்..

Angel said...

மழலைகள் உலகம் மகத்தானது என்ற தொடர்பதிவை தொடர உங்களை அழைத்திருக்கிறேன் .நேரமிருக்கும்போது எழுதுங்கள்

Jaleela Kamal said...

பகிர்வு அருமை