நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Saturday

மீண்டும் எட்டப்படும் புதிய சமநிலைகள்

 கடுமையான அடக்குமுறை மற்றும் இராணுவத்தின் அளவிற்குமீறிய பிரசன்னமும் தலையீடுகளும், ஒட்டுக்குழுக்களின் அராஜகம் எனப் பலதும்  நிறைந்துள்ள ஓரிடத்தில் ஆளும் அரச கூட்டணிக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடபகுதியில் ஈட்டியுள்ள வெற்றி, எல்லாவற்றுக்கும் மேலாகத் தெரிவிக்கும் கருத்து,


தமிழ் மக்கள் எந்தவித அடக்குமுறைகளிற்கு அஞ்சியோ அல்லது அற்ப சலுகைகளிற்காகவோ தமது அரசியல் அபிலாசைகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்பதுடன் அவர்கள் தொடர்ந்தும் ஜனநாயக வழியில் நம்பிக்கை இழக்கவில்லை என்பதையே.
 போருக்குப் பின்னான சாதனையாக டக்ளஸ்சும், கே.பியும், பிள்ளையானும், கருணாவும் வெறும் வெத்து வேட்டுக்கள் என்பது உணர்த்தப்பட்டதுடன்  தமிழர் மத்தியில் காணப்பட்ட தலைமத்துவத்திற்கான வெற்றிடமும் ஒன்றுபட்ட அரசியல் சக்திக்கான  தேவையும்  தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் சமன்செய்யப்படிகிறது.
இன்று இலங்கைத்தீவின்  உள்நாட்டு அரசியல் நிலை வெகு தெளிவாக உள்ளது. நாட்டின் மூன்றிலிரண்டு பகுதியில் வசிக்கும் பெரும்பான்மைச் சிங்களவரிடையே  தனித்தன்மையான சக்தியாக விளங்குவது பொதுசன ஐக்கிய முன்னணியே. அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் பேசும் மக்களின் தனித்தன்மையான அமைப்பாக மாறியுள்ளது. பொதுசன ஐக்கிய முன்னணி சிங்கள தேசத்தின்மத்தியில் முதன்மைக்கூறாய் உள்ளபோது வடக்கைச் சுற்றியுள்ள இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னிலை வகிக்கிறது.
இந்த யதார்த்தம் மற்றொரு விடயத்தை உணர்த்துகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது பேரம்பேசலுக்கான பங்காளியாக பொதுசன ஐக்கிய முன்னணியைத் தவிர வேறொன்றினைப்பற்றிச் சிந்திக்கமுடியாது. ஐதேக வுடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்துவது அர்த்தமற்ற ஒன்று. ஏனெனில் அந்தக் கட்சி மக்கள் சக்தியற்ற ஒன்றாக வெகுதூரம் பின்னுக்குப் போய்விட்டது. எதிர் காலத்தில் அதனால் எதையும் சாதிக்கமுடியாது.  சிங்களவர் மத்தியில் இப்போது மதிப்புமிக்கதாக இருப்பது பொதுசன ஐக்கிய முன்னணி மட்டுமே.
தமிழர்களுடனான எந்தப் பேச்சு வார்த்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இல்லாமலோ அல்லது அதைத் தவிர்த்து விட்டோ நடத்துவது சாத்தியப்படாது. எதாவதொன்றின் விளைவாக நடத்தப்படும் அரசியல் பேச்சு வார்த்தைகளின் பிரதான அச்சாக இருக்க வேண்டியவை பொதுசன ஐக்கிய முன்னணியும் தமிழ் தேசியக் கூட்டமைப்புமே. இதுவே இன்றைய் யதார்த்த நிலையாகும். சிங்களவரோ அல்லது தமிழரோ ஒருவர் மற்றொருவர் மேலாக ஆதிக்கம் செலுத்த முடியாது. சிங்களவரை ஒரு எல்லைக்கு மேலும் பின் தள்ளிவிட முடியாது என்பதுவும்,  தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளையும்  சமத்துவமான அரசியல் உரிமையை தேடுவதையும் ஒருபோதும் கைவிட மாட்டார்கள் என்பதுவும் நிருபிக்கப்பட்டுள்ளது.
அனைத்துச்  சமுகத்தினதும் தனித்தன்மையும் அபிலாசைகளும்  பூர்த்தி செய்யாமல் நீடித்து நிற்கும் சமாதானம் சாத்தியப்படாது.  இதற்கான இறுதி இலக்கை அடைய அனைத்துத்தரப்பினரிடையேயும் புரிந்துணர்வு பரஸ்பரம் விட்டுக்கொடுப்பு நல்லொழுக்கங்களின் வளர்ச்சி என்பனவே அத்தியாவசியமானவை.
இந்தத் தேர்தல் முடிவுகளின்படி எங்களுக்கு கிடைத்திருப்பது, புதிய சமநிலை. இது  மூன்று தசாப்தகால தீர்க்கமான போரின் விளைவுகளுக்கு ஏற்றதான ஒரு சரியான சமநிலையை தரவில்லை. எனினும் அது புதியதொரு வாய்ப்பை வழங்கியுள்ளது.
வட்டுக்கோட்டைத் தீர்மானம் மூலமாக உத்வேகத்தை ஏற்படுத்திய தனிநாட்டுப் போராட்டம் நந்திக்கடலில் புதைக்கப்பட்டு விட்டது என்ற பிரமையை பாராளுமன்ற மற்றும் உள்ளுராட்சி தேர்தல்கள் தவிடுபொடியாக்கியுள்ளன..
சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் ஆகிய இருபகுதியினருமே ஒருவரைப்பற்றி மற்றவர் ஏளனமாக நினைக்காமல் ஒருவர் மற்றவரைப் பற்றிப் பெருமைப்படவும் மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். இப்போது நாங்கள் அடைந்துள்ள  சமநிலைகளின் அனுகூலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறித்த இலக்கை நோக்கி அரசாங்கத்தைத் தள்ளவேண்டும்.
அரசாங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆளாளுக்கு விட்டனோ பார் என முஸ்டியைத் தூக்கிக்கொண்டு நிற்காமல் இரண்டு பகுதியினரும் பொறுப்புணர்வுடனும் விட்டுக்கொடுப்புகளுடனும் செயற்பட்டால்தான் நிரந்தர சமாதானத்தை எட்ட முடியும். இரண்டு தரப்பினரில் எவர் ஒருவரது கடும்போக்கும் இலங்கைத்தீவில் நிரந்தர சமாதானத்தை எட்டாக் கனவாக்கிவிடும்.
தமிழர்களின் மனக்குறைகளை பெரும்பான்மையான சிங்களவர்கள் அங்கீகரிக்காமல் தீர்வு எட்டப்படாது. அதேபோல  தமிழர்களின் சம்மதமின்றி ஆழமாக வேரூன்றிய நிரந்தர சமாதானம் இருக்கவும் முடியாது. ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுத்தல், மற்றும் யதார்த்தங்களை புரிந்துகொள்ளல், ஆண்டான் அடிமை நிலையற்ற விட்டுக்கொடுப்புகள் மூலம் நிலையான சமாதானத்தை உருவாக்குவதற்கு  ஏற்ற நல்ல தருணம் இதுதான். அதற்கான முன்னெடுப்புக்களைச் செய்யவேண்டியது அனைவரதும் கடமையாகும்

2 comments:

Anonymous said...

உங்கள் எழுத்துக்கள் தமிழ் மக்களின் குரல் வளையில் தங்கி விட்ட எண்ண அலைகள், சுனாமியாக பொங்கி, பதிவாகி உள்ளது.
//இரண்டு பகுதியினரும் பொறுப்புணர்வுடனும் விட்டுக்கொடுப்புகளுடனும் செயற்பட்டால்தான் நிரந்தர சமாதானத்தை எட்ட முடியும்
/அடிமை நிலையற்ற விட்டுக்கொடுப்புகள்//
அரசியலில் மீடியாவினால் சாதிக்க நிறைய சாதக வழிமுறைகள் உண்டு..பெரும்பான்மை இனத்தாரை இந்த ஆதங்கம் சென்றடையுமா? தமிழை விட்டு வேறு வழியில் நாம் மீண்டும் சுயம் தொலைக்க வேண்டுமா?

அம்பலத்தார் said...

Anonymous said...
// அரசியலில் மீடியாவினால் சாதிக்க நிறைய சாதக வழிமுறைகள் உண்டு..பெரும்பான்மை இனத்தாரை இந்த ஆதங்கம் சென்றடையுமா? தமிழை விட்டு வேறு வழியில் நாம் மீண்டும் சுயம் தொலைக்க வேண்டுமா?//
சும்மா இருப்பதைவிட முயற்சி செய்துபார்ப்பது நல்லதல்லவா. இலங்கையில் வாழும் எந்தஒரு இனமும் தனது சுயத்தை தொலைக்காத ஒரு தீர்வைநோக்கி...