நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Thursday

நான் போகாத சாமத்தியச்சடங்கு

இன்றைக்குப்போல கிடக்கு எழுபதுகளின் ஆரம்பத்திலை கொழும்பு ரொறிங்ரன் அரசாங்க தொடர்மாடிக் குடியிருப்புக்களில் வாழ்ந்த காலம். எத்தனையோ நாடுகளிலை அடுக்குமாடிக் குடியிருப்புக்களைப் பாத்திருக்கிறன் ஆனால் இந்தமாதிரி ஒரு அமைப்பை நான் பாத்ததே இல்லை. சுற்றிவர வீடுகள் நடுவிலை ஒரு மைதானம் அத்தனை வீடுகளின்ரை பல்க்கனியிலை நின்றும் மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்கலாம்.
சாயங்காலமானால் மைதானம் களைகட்டும். கிரிக்கற், உதைபந்தாட்டம் வொலிபோல். சின்னவயசுக்காரர், விடலையள், பெரியவை என பல குழுக்களாக மைதானம் நிறையும். இதைவிட அங்கங்கை சிறுசிறு கொத்துக்களாக இளவட்டப் பெண்கள் கூட்டம். மைதானத்தின் ஓரமா இருந்த கிளப்பிலை பெரிசுகளின்ரை சீட்டாட்டம், பியர் அடி என ஒரே கலகலப்பா இருக்கும்.

எனக்கெண்டால் அப்பத்தான் அரைக்காற்சட்டையிலை இருந்து முளுசுக்குத் தாவுற வயசு. அதுக்குள்ள எனக்கொரு பட்டம் வேற ஜக்கடயா (இரும்பன்) என்று. புட்போல் அடியிலை நான் கொஞ்சம் விண்ணன். புல்பாக்கிலை நான் நின்றனெண்டால் ஒருபயல் தாண்டிப்போய் கோல் போடமாட்டான். என்ரை கால் தப்பித்தவறி ஒருத்தனிலை பட்டிட்டால் காணும் இரண்டு நாளுக்கு அந்த ஆள் விளையாடுறது கஸ்டம். வேறை ஒண்டும் இல்லை நான் கொஞ்சம் ஒல்லி எலும்பன் அதுதான் அந்தப் பட்டம்.
எங்களைவிடப் பெரிய செற்றிலை சிவாஜியின்ரை பட்டிக்காடா பட்டணமா முதல் ஊஞ்சல் தொடர்வரை உதவி கமராமன், அசோசியேற் கமராமன், கமராமன் என இந்திய சினிமாவில் பலகாலம் கால்பதித்து நின்ற ரங்கநாதன், எங்கட தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர்  நடேசன், நமக்கெல்லாம் பரிச்சயமான எழுத்தாளரான டொக்டர். M.K.முருகானந்தன் என ஒரு கூட்டம் இவையள் கொஞ்சம் அடக்க ஒடுக்கமான ஆட்கள் என்று பேர் வாங்கினவை. எங்களை அவ்வளவாத் தங்களுக்குக் கிட்ட அண்டமாட்டினம். அதாலையும், எப்பபாத்தாலும் அவையளைப்பாருங்கோ எப்படி அருமையான அடக்க ஒடுக்கமான பெடியள் நீங்களும்தான் எங்களுக்கெண்டு வந்து வாச்சியள் என்று எங்கட வீடுகளிலை திட்டு விழுகிறதாலையும் எங்களுக்கெல்லாம் அவையளிலை ஒரே கடுப்பு.
அப்ப நான் அஞ்சாம் வகுப்புப் படிக்கிறன் என்று நினைக்கிறன். பிருந்தா பிருந்தா என்று எங்கட வயசை ஒத்த ஒரு சுட்டிப் பெண். அவளின்ரை வாய் பேசுறதைவிடக் கண்ணும் மூக்கும் அதிகம் பேசும். அவளின்ரை வீட்டிலை சூரியன், சந்திரன் என என்ரை வயசிலை இரட்டையர் இவங்களும் என்னோட வலுபிரியம். அதோட ஒரே மாடியிலை பக்கத்துப் பக்கத்து வீடு என்றதிலை எங்கட இரண்டு குடும்பங்களும் நல்லமாதிரி. அந்த வயசிலை ஆம்பிளை பொம்பிளை வித்தியாசங்கள் பாக்காமல் ஒழிச்சுப் பிடிச்சு கெந்தித்தொட்டு என்று சேர்ந்து விளையாடுவம்.
திடீரெண்டு இரண்டு நாளா பிருந்தா விளையாட வரேல்லை. மூன்றாம் நாள் தேவா சொன்னாள் (பெட்டையளுக்கை இவள் கொஞ்சம் வால்) பிருந்தா சாமத்தியப்பட்டிட்டாள் இனி உங்களோட விளையாட வரமாட்டாள் என்று. எனக்குத் தெரிஞ்சு என்னோட பழகினவையளுக்கை ஒருத்தி சாமத்தியப்பட்டதென்று அறிஞ்சது அதுதான் முதல் தடவை. உது என்னதான் விசயமெண்டு அறிய வேணுமென்று ஒரே துடிப்பு.
ஒன்றும் சரிவராமல் கடைசியிலை அம்மாவிட்டை நைசாக் கேட்டுப்பாத்தன்.
அவ, ஓம் அவள் சாமத்தியப்பட்டிட்டாள்தான் வாற புதன் தண்ணிவார்வை என்றா.
அம்மா அப்ப நானும் வரட்டே.
நீ ஒன்றும் அங்கை வர வேண்டாம். பள்ளிக்கூடத்துக்குப் போ. தம்பி பாவம் சின்னவன்தானே அவன் வரட்டும் என்று அம்மா.
பதிலைக் கேட்டதிலையிருந்து, என்னை வராதை என்றது மட்டுமில்லை தம்பியை வேற கூட்டிக்கொண்டு போகினமே என்று பொல்லாத எரிச்சல். ஒருவழியா புதனும் வந்திட்டுது பள்ளிக்கூடத்துக்கு கள்ளம்போடுறதுக்கு என்ன வழி என்று மண்டையைப்போட்டு உடைச்சு நியூற்றன், ஆக்கிமீடிசு போன்றவங்களுக்குப் போட்டியா ஒரு கண்டுபிடிப்புக் கண்டு பிடிச்சன்.
காலமை பள்ளிக்கூட நேரத்துக்கு அலாரம் அடிக்க கவனியால் இழுத்துமூடிக்கொண்டு படுத்துக்கிடந்தன். கொஞ்சநேரத்தாலை அம்மா வந்து தம்பி பள்ளிக்கு நேரமாச்சு எழும்பணை என அழைக்கவும்.
அம்மா எனக்குச் சரியாக் குளிருது காச்சல் காயுமாப்போலக் கிடக்கு எனச் சொல்லவும், தொட்டுப் பார்த்த அம்மா அது கட்டில் சுட்டுக்கு அப்பிடிக்கிடக்கு நீ வா தம்பி என்றா.
நானும் சோம்பலா எழும்பிப்போய் முகத்தைக் கழுவிப்போட்டு சோபாவிலை சுருண்டு விழுந்து கிடந்தன்.
அம்மா திரும்பி வந்து என்னடா பிள்ளை எனவும்.
அம்மா எனக்கு உள்காய்ச்சல் காயுது.
கிட்டவந்து தொட்டுப் பாத்திட்டு சீ ! என்றவ பிறகு மெதுவா எதுக்கும் காய்ச்சல் கம்பியை எடுத்து வைச்சுப் பார் எனவும்தான், எனக்குப் பழம் நழுவிப் பாலிலை விழுந்த சந்தோசம்.
கம்பியை எடுத்துக்கொண்டு மெதுவா என்ரை அறையுக்கைபோய் படிக்கிற மேசை லைற்றைப் போட்டிட்டு காய்ச்சல் கம்பியை மின்குமிழுக்குக் கிட்டப்பிடிச்சன். கம்பியிலை பாதரசம் மெல்ல 98.....99...... என அசைஞ்சுது. சரியா 100 இலை வர கம்பியை கொண்டு போய் அம்மாட்டைக் கொடுத்தன்.
அவ பாத்திட்டு, நல்லாத்தான் காயுது பேசாமல் படுபிள்ளை நான் மல்லித்தண்ணி அவிச்சுத்தாறன் குடி.
காரியம் வெற்றியாகுது என வலு சந்தோசம். ஆனாலும் சிவாஜிகணேசன் லெவலிலை....... இழுத்துப் போத்திக்கொண்டு படுத்திட்டன்.
கொஞ்ச நேரத்தாலை அம்மா சொன்ன விசயம் இடியா விழுந்தது. நீ காச்சலோட ஒரு இடமும்போகக்கூடாது பேசாமல் படுத்திரு. நாங்கள் சாமத்தியவீட்டுக்குப்போறம். அப்பா வீட்டிலை இருப்பார்.
எனக்கெண்டால் சாமத்திய வீட்டுக்குப் போக இயலாமல் போனதை நினைக்க நினைக்க அழுகை அழுகையா வந்தது அடக்கிக்கொண்டு படுத்துக்கிடந்தன்.
சாயங்காலமாக ஐயாவுக்கு எப்படி சுகம் வந்தது எப்படி மைதானத்துக்குப் போனனோ தெரியாது, உதைபந்தாட்டக் குழுவோட ஜக்கடையா நிண்டார்.
இதுகளை இப்ப அசைபோடேக்கை இன்னொரு விசயமும் ஞாபகம்வருகுது. எழுபதுகளின் ஆரம்பத்திலைதான் சிறீமாவோ மீண்டும் ஆட்சியில் அமர்ந்தவ. அவ வந்த உடனை செய்த காரியங்களிலை ஒன்று அரசாங்க அடுக்குமாடிக் குடியிருப்புக்களில் குடியிருக்கும் அரச உத்தியோகத்தர்கள் 5 வருடங்களுக்கு மேல் அதில் குடியிருக்க முடியாது என்ற சட்டவாக்கம். இதிலை பிரச்சனை என்ன என்றால் அந்தக் காலத்திலை இந்த வீடுகளிலை குடியிருந்தவர்களில் பெரும்பான்மையானவை தமிழாக்கள். அதோட இந்த வீடுகள் இருந்த பகுதியளிலை அநேகமாக ஐக்கியதேசியக்கட்சிதான் தேர்தலிலை தெரிவாகிறது. அதாலை இந்தச் சட்டமூலம் தமிழாக்களை எழுப்பினால் தமிழ் வோட்டு இல்லாமல் ஐ.தே.க. வெல்வதும் கஸ்டம். அதோட புதுசா குடிவாற சிங்கள உத்தியோகத்தரின்ரை வோட்டும் தங்களுக்குக் கிடைக்கும் ஒரு கல்லிலை இரண்டு மாங்காய் என்றதுதான் அவவின்ரை திட்டம்.

நான் முன்பு குறிப்பிட்ட டொக்டர். M.K.முருகானந்தன் பிரபலமான பதிவரும்கூட. அவரின் பதிவுகளைப் படிக்க


http://hainallama.blogspot.com/

http://suvaithacinema.blogspot.com/



ஆக்கம். அம்பலத்தார்

16 comments:

test said...

நல்ல பதிவு! அந்தத் தொடர்மாடிக்குடியிருப்பில எண்பதுகளின் ஆரம்பத்தில் எங்க அப்பாவுக்கும் ஒரு வீடு கிடைச்சதாகவும் ஆனா அவர் அதை அநியாயமா மிஸ் பண்ணிட்டார் என்றும் ஐந்து வருடம் கழித்து அதை குடியிருந்தவர்களுக்கே சொந்தமாக்கியதாகவும் கேள்விப்பட்டேன்!

Yaathoramani.blogspot.com said...

அருமையாகச் சொல்லிப்போகிறீர்கள்
ஒரு அடுக்குமாடி எனபதைசின்ன தனிப்பட்ட விஷயமாகத் துவங்கி
அதுமுடிவில் ஒரு மிகப் பெரிய அரசியல் நிகழ்வில் கொண்டு போய் முடிப்பது
அதற்குள் சின்னச் சின்னச் சந்தோஷங்களை நிகழ்வுகளை
கலா ரசனையோடு சொல்லிச் செல்வது அருமையிலும் அருமை
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்

K said...

சார், வணக்கம்! கும்புடுறேனுங்கோ!

சார், எனக்கு ஈழத்து ஸ்லாங் புரியுறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு! ஆன உங்க பதிவு சூப்பர் சார்!

ரெவெரி said...

நல்லாயிருந்தது...எழுத்து வாசிக்க கொஞ்சம் கஷ்டப்பட்டேன்...ரெவெரி

அம்பலத்தார் said...

ஜீ உங்க அப்பா நல்லதொரு சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிட்டார்

அம்பலத்தார் said...

மாணி, ரெவெரி உங்களிற்கு ஏற்றாற்போல கொஞ்சம் மற்றிக்கிறேன்

அம்பலத்தார் said...

ரமணி நீங்கள் சிறந்ததொரு வாசகன் என்பது புரிகிறது. மிகவும் ஆழ்ந்து படித்திருக்கிறீர்கள்.

இராஜராஜேஸ்வரி said...

ரசனையான பகிர்வு. பாராட்டுக்கள்!

இராஜராஜேஸ்வரி said...

ஓணத்திருநாள் வாழ்த்துக்கள்!

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல பதிவு

குறையொன்றுமில்லை. said...

அடுக்குமாடி குடி இருப்பு வாழ்க்கை முறைகள் சுவாரசியம் நிறம்பியதுதான். அதை சுவைபட சொல்லி இருக்கீங்க. நல்ல ரசனை உங்களுக்கு . நல்லா இருக்கு.

மாய உலகம் said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_18.html

அம்பலத்தார் said...

வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் நன்றிகள் இராஜராஜேஸ்வரி

அம்பலத்தார் said...

செந்தில்குமார் சார், ஊக்கம்தரும் பாராட்டிற்கு நன்றிகள்

அம்பலத்தார் said...

லட்சுமிஅம்மா உங்க பாராட்டுகளிற்கும் இதமான வார்த்தைகளிற்கும் நன்றி

அம்பலத்தார் said...

என்னையும் ஒரு பதிவராக மதித்து மாயா உலகத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்.