ஆசை! ஆசையாய்........... என்னையும் வாழவிடுங்கோ!
http://www.cepolina.com/freephoto/
எனக்குக் கொஞ்ச நாளா மனசு சரியில்லை.
அந்தக் கதையையும் கட்டாயம் உங்களுக்குச் சொல்லவேணும்
அப்பொழுதுதான் எனக்கும் ஒரு ஆறுதலாக இருக்கும்.
அண்மையில் நண்பரொருவர் இதயநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து பார்க்கச் சென்றிருந்தேன். அப்பொழுது அண்ணை உங்களுக்குத் தெரியுமே உங்களுக்கு வந்திருக்கிற வருத்தத்தின் தீவிரம்?
ஓ ! ஓ! தெரியாமலே சா! கிட்ட வந்திட்டது தெரியும்.
முடிஞ்சவரை சாகிற காலத்தைக் கொஞ்சம் ஒத்திப்போடலாம் என்று நினைக்கிறன்.
உங்களிடம் இருக்கிற கெட்ட பழக்கத்தை விட்டியளென்றாலே கனகாலத்துக்கு வாழலாம். எப்பவாவது அதைப்பற்றி யோசிச்சனிங்களே?
இன்றைக்கு நேற்றே!
முதன்முதலா அரும்பின மீசையைத் தினத்துக்கும்
நூறுவாட்டி கண்ணாடிக்கு முன்னாலை நின்று தடவிப்பார்த்து ரசித்த காலத்திலேயே
எனக்கு அந்த ஆசையும் தொடங்கிவிட்டது.
அப்பவே ஒருநாள் தம்பிராசா கடை வாசலிலைபோய்
மசிந்தி மசிந்திக்கொண்டு நின்று ஒருத்தரும் கடைக்கு வராத நேரமா பார்த்து
அண்ணை எனக்கொரு ....... தாங்கோ எண்டு கேட்கும்போது
தம்பிராசா அண்ணை உதைத் தொட்டபின் விட்டவனும் இல்லை!
பிறகொரு நேரத்திலை தொட்டதுக்காக வருந்தாதவனுமில்லை என்ற இலவச அறிவுரையோட அந்தச் சனியனை தர என்ரை கையில வாங்கேக்கை
பயத்தில கை நடுங்கேக்ககையே நினைச்சனான்
இந்த ஒருதடவைதான் முதலும் கடைசியுமாய் வாங்கினதுக்கு.....
ஆசைக்கு....... ஒருதடவை பாவிச்சுப் பார்க்கிறதோட சரி
பிறகு சீவியத்திலையும் தொடுகிறதில்லை என்று.
ஆனால் அடுத்தநாள் பள்ளிக்கூடத்தில
முதல்நாள் தம்பிராசா கடையில வாங்கினதில இருந்து நடந்ததுகளை
நண்பர்களுக்குச் சொன்னதில இருந்து அவர்கள் என்னை ஒரு கதாநாயகனாகப் பார்க்க.................
அவங்களுக்கு பந்தா காட்டுவதற்காக அடுத்தநாளும் தம்பிரைசா கடையில போய்
அங்குமிங்கும் பார்த்து முழிசினபடி இரண்டாவது தடவையா வாங்கேக்கை
கை நடுக்கம் கொஞ்சம் குறைஞ்சமாதிரித் தெரிந்தது.
பிறகென்ன ரமேசுக்காக சிவத்துக்காக என்று அடிக்கடி தம்பிராசா கடைக்குப்போய்..................
பயம் விட்டுப்போனதுமட்டுமில்லாமல சாயங்காலம் ரியுசனுக்குப் போகேக்கை சட்டைப் பொக்கற்றுக்கால
பெட்டி சாடையாத் தெரியிறமாதிரி வச்சுக்கொண்டு
சையிக்கிளில போறது ஒரு கவுரவம்மாதிரித் தெரிஞ்சுது.
நானும் விடாமலுக்குப் பிறகு ஒருக்காலென்றாலும்........
உந்தச் சனியை விட்டுத்தொலைக்க வேணுமென்று நினைக்கவில்லையே?
வராமலுக்கென்ன எத்தனையோ நாளாச் சயிக்கிளிலையும் நடந்தும்
முன்னுக்கும் பின்னுக்கும் சுத்தி அவள் வசந்தியை
ஒருவழியா மடக்கின பிறகு ஒருநாள் அவங்கட புகையிலைத் தோட்டத்துக்கை.........
ஆளுயரப் புகையிலைக்கண்டுகளுக்கு நடுவில.....
சீ விடுங்கோ ஆரும் பார்த்தால்.......
என்று அவள் சிணுங்கச் சிணுங்கக் கட்டிப்பிடிச்சு ............
முகத்துக்குக் கிட்டப்போக சீ சிகரெட் நாத்தம் குமட்டிக்கொண்டு வருகுது, நீங்களும் பத்துறனிங்களே? என்று திமிறிக்கொண்டு
அவள் விலககோவிக்காதையும் இதுதான் கடைசி இனியொருநாளும் பத்தமாட்டன்.
இங்கை பாரும் என்ன செய்கிறனென்று சொல்லிக்கொண்டு பொக்கற்றுக்கை கிடந்த சிகரெட் பக்கற்றை எடுத்துக் காலுக்கைபோட்டு மிதிச்சன்.
என்றாலும் பிறகு கொஞ்சநாளிலை வசந்தியைத்தான் விட்டன் சிகரெட்டைவிடேல்லை.
சீ நீரும் ஒருமனுசனெண்டு.........
கோவியாதையும் அம்பலத்தார் பிறகொருநாள் தோய்க்கப்போட்ட சட்டைப்பொக்கற்க்கை கிடந்த பெட்டியை பார்த்திட்டு என்ன இது வீட்டிலை அப்பா அண்ணைமார் ஒருத்தருக்கும் இல்லாத கேடுகெட்ட பழக்கமெல்லாம் எங்கட மானத்தை வாங்குறதுக்கென்றே கடைசி காலத்தில வந்து பிறந்திருக்கிறாய் என்று அம்மா ஒப்பாரிவைக்க...............
அம்மா! அம்மாவாணை இனி ஒருநாளும் பத்தமாட்டன் என்று வாக்குறுதியை அள்ளிவிட்டன்.
ஆனாலும் கடைசியில அம்மாவும் மேலபோட்டா உதைத்தான் விட்டபாடில்லை!....
கொள்ளி வச்ச கையோட நினைச்சன் சின்னனிலை உன்ரை தலையில அடிச்சுச் சத்தியம்பண்ணிப்போட்டு இத்தனை காலமா உந்தச் சனியனைவிடாத பாவம்தான் உன்னைக் கொன்றுபோட்டுதோ? இப்பவே உந்தச் சனியனுக்கு முழுக்குப்போடுறன் என்று யோசித்துக்கொண்டு சுடலையால திரும்பி தலைமுழுகின கையோட...............
குளிருக்கு இதமா இருக்கட்டுமே இந்த ஒருதடவை மன்னிச்சுக்கொள்ளம்மா என்று தொட்டன் இன்றுவரை உந்தச் சனியனை விட்டுத்தொலைக்கவே இல்லை.
கல்யாணம் கட்டின புதிதில் முன்னம் வசந்தியிடம் பட்ட அனுபவம் ஞாபகத்துக்கு வர
வாசுகிக்குப் பக்கத்தில ஆசையாசையாகப் போறதென்றால்கூட
எங்கை கண்டுபிடிச்சிடுவாளோ என்ற பயத்தில நல்லா குளிச்சு முழுகி
வாசத்துக்கு வாய் நிறைய வெற்றிலையெல்லாம் போட்டுக்கொண்டுதான் போவன்
ஆனால் கொஞ்ச நாளுக்குள்ளயே அவள் எதுக்கு உந்த நடிப்பு நடிக்கிறியள்.
நீங்கள் பத்துறது தெரியாதென்றே நினைக்கிறியள். மிரட்டிச் சொல்லித் திருத்துறதுக்கு நீங்களொன்றும் சின்னப்பாப்பா இல்லை.
நீங்களா உணர்ந்தால்தான் உண்டு என்று போட்டாள் ஒருபோடு.
ஆனால் அன்றுடன் எனக்கு கொஞ்சமிருந்த பயமும்போய் நடுவீட்டுக்கையே பத்தத் தொடங்கினன்.
தன்ரை தாயின்ரை சாவுக்கே காரணமாயிருந்ததுமட்டுமில்லால்
மனிசியையே மதிக்கத் தெரியாத உம்மையெல்லாம்
இத்தனை நாளாக பெரிய மனுசனென்று
நீர் சொல்லுற அறிவுரையளையெல்லாம் கேட்டன் பாரும்..........
அவ்வளவு கேவலமா நினைக்காதையும்,
அதுதான் பிறகு ஒரு காலகட்டத்தில் நாலு அனுபவமும் கொஞ்சம் அறிவும் வர மனச்சாட்சி உறுத்தினதிலையும் உடல் நலத்தில் ஏற்பட்ட அக்கறையிலையும் உண்மையிலையே விட்டுவிடுவம் என்று கனதரம் முயற்சி பண்ணினன்.
மனசை அடக்கிக்கொண்டு இருக்க, தெருவில கடையிலை என்று எங்கையும் போன இடத்தில ஆரும் பத்துறதைக் கண்டால்
கை நடுங்கும் உடனையே பத்தவெணும்போலக்கிடக்கும் கஸ்டப்பட்டு அடக்குவன்.
காலையிலை தேத்தண்ணியைக் குடிச்சிட்டுக் கக்கூசுக்கப்போனால் என்னையறியாமலே கை யன்னல் ஒட்டிலை பெட்டியைத் தேடும்.
வயிறெல்லாம் இறுகி அடைச்சதுபோலக் கிடக்கும்.
எல்லாத்துக்கும் மேலாலை கட்டுப்படுத்திக்கொண்டு ஊதாமல் இருப்பன்.
ஆனாலும் எங்கையும் சபை சந்தியிலை என்ரை நண்பர்களைச் சந்திச்சனென்றால் முடிஞ்சுது அலுவல். கொஞ்சநேரம் கதைச்சுக்கொண்டிருக்க........
ஒருக்கால் வெளியிலபோட்டுவருவமே என்று ஆராவது ஒருவர் தொடங்குவார்.
சரி நல்ல காத்துப் பிடிக்கட்டுமே என்று போனால், ஆளாளுக்கு ஊதத் தொடங்குவினம்
நானும் கஸ்டப்பட்டு அடக்கிக்கொண்டு நிற்பன். கை காலெல்லாம் நிதானத்தில நிக்காது. வாயெல்லாம் ஒருமாதிரிக்கிடக்கும் அப்பபார்த்து ஒருத்தர்....
இந்தாரும் எங்களையெல்லாம் கண்ட சந்தோசத்தக்கு ஒன்றைப் பத்தும் என்று பக்கற்றை நீட்டுவார். நானும் முதலிலை வேண்டாம் வேண்டாமென்றுதான் சொல்லுவன்.ஆனாலும் விடமாட்டினம்.
ஆளாளுக்கு விடமாட்டினம் என்ன நெடுகலுமே கேட்கிறம் ஒருக்கால்தானே .........
பொக்கற்றிலை பெட்டியோட வைச்சுப் பத்துமென்றெ சொல்லுறம்
இண்டைக்குப் பத்தினால் இனி எப்ப காணேக்கை கேட்கிறமோ?.............
இப்படியே ஆளாளுக்கு உசுப்பிவிட எனக்கு ஆசை பத்திவிடும். ஒரு நாளைக்குத்தானே பரவாயில்லை என்று பத்துவன் பிறகென்ன பழைய கதைதான்.
இப்படி எத்தனைதரம் விடுகிறதும் பத்துறதுமாய்...............சா! பக்கத்தில வரத்தான் வாழவேணுமென்று ஆசையாக்கிடக்கு!
மனிசி பிள்ளையளோட கொஞ்சக் காலலத்துக்கெண்டாலும் சந்தோசமா ஒன்றா இருக்கவேணும் நாலு இடத்துக்குக் குடும்பமா போய்வரவேணும் என்று ஆசையாகக்கிடக்குது.................
மனுசன் கதைக்கமுடியாமலுக்கு விக்கிவிக்கி அழத்தொடங்கிவிட்டுது.
உமக்கு உண்மையிலையே என்னிலை அக்கறை இருந்தால் இப்படிச் செய்கிறவையளை நிறுத்தச்சொல்லும் நான் நிறுத்துறன் என்று கையைப்பிடிச்சுக் கெஞ்சுமாப்போல நாதழுதழுக்க................
என்னாலையும் கட்டுப்படுத்தமுடியாமலுக்கு மனுசனைக் கட்டிப்பிடிச்சுக்கொண்டு அழுதிட்டன்.
ஒருவழியா விடைபெற்றுக்கொண்டு திரும்பும்போது பொக்கற்றுக்கை கிடந்த
பெட்டியை எடுத்து ஆஸ்பத்திரி வாசலிலை கிடந்த குப்பைத்தொட்டியில போட்டிட்டு
காரை நோக்கி மெதுவா நடந்தன்.
அம்பலத்தார்
19 comments:
பலதரப்பட்டவருக்குமான வித்தியாசமான பக்கம் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
"..பிறகு கொஞ்சநாளிலை வசந்தியைத்தான் விட்டன் சிகரெட்டைவிடேல்லை.
சீ நீரும் ஒருமனுசனெண்டு.."
"..முதலிலை வேண்டாம் வேண்டாமென்றுதான் சொல்லுவன்.ஆனாலும் விடமாட்டினம். ஆளாளுக்கு விடமாட்டினம்.."
'...சா! பக்கத்தில வரத்தான் வாழவேணுமென்று ஆசையாக்கிடக்கு!.."
படிப்பினையூட்டும் நல்ல பதிவு.
நல்ல காலம் அம்பலத்தார், நீங்க மட்டும் பெட்டியை எறியாம போயிருந்தால்...........மிச்ச பதிவெல்லாம் வாசிக்காமல் போயிருப்பன்.......
Anonymous said...
// நல்ல காலம் அம்பலத்தார், நீங்க மட்டும் பெட்டியை எறியாம போயிருந்தால்......மிச்ச பதிவெல்லாம் வாசிக்காமல் போயிருப்பன்.......//
நீங்கள் இப்படிச் சொல்லுறியள் வேறு சிலபேர் பாவிப்பயல் ஏன் தான் எறிஞ்சவனோ என்று சொல்லுகினம்.
புகைத்தலின் பக்கவிளைவுகளை அழகான முறையில் எல்லோர் மனதிலும் ஆழமாக பதியும் வண்ணம் கூறியுள்ளீர்கள்
வணக்கம் பாஸ் இதுதான் உங்கள் ஸ்பெசாலிட்டி சமூக சிந்தனையுள்ள ஒரு விடயத்தை அழகாக ரசிக்கும் படி சொல்வீர்கள் உங்களிடம் இருந்து அதாவது உங்கள் எழுத்துக்களில் இருந்து எப்படி சுவாரஸ்யமாக சமூக விடயங்களை சொல்லாம் என்று என்னைப்போன்ற பதிவர் எல்லாம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும்.
புகைத்தலினால் ஏற்படும் விளைவுகளை அழகாக சொல்லியிருக்கீங்க.
வணக்கம் அம்பலத்தார்!
நல்லதோர் விழிப்புணர்வு பதிவு. ஊர் பரியாரி கசப்பு மருந்தை தேனில கலந்து குடிக்க தருவதை போல இருந்தது.!!
நானும் சின்ன வயசில (இப்பவும் சின்ன வயசுதான்..ஹி ஹி) அப்புச்சியின் கனகலிங்கம் சுறுட்டை எடுத்து பத்தி பார்த்திருக்கேன்.. அத ஒருக்கா கொழுத்திப்போட்டு அனையாம இருக்க பக்கு பக்கன்னு இழுத்தே களைச்சிடுவம்..!!
ஆனா இப்ப உந்த கறுமத்த தொட்டே இருபது வருசமாச்சு..!!
இப்ப பக்கற்றிலேயே புற்று நோயால் பாதிக்கப்பட்டவங்க படத்த போட்டாலும் யார் அத பார்க்கிறாங்க.. அப்புறம் நீங்களும் அத விட்டதுக்கு வாழ்த்துக்கள்..!!:-)
வணக்கம் . ஐரோப்பாவில் சில தாய்மார்கள் தனது குழந்தைக்கு கேடானது என்று தெரிந்தும் குழந்தை வயிற்றில் இருக்கும்போதும் குழந்தைக்கு பாலூட்டும் காலத்திலும் அப்பழக்கத்தை விடமுடியாது இருக்கிறார்கள் . பொது இடங்களில் , வீட்டிற்குள் புகைப்பவர்கள் அந்த புகையை மற்றவர் சுவாசத்திற்கும் அனுப்பி ( passive smoking ) தம்மை மட்டுமல்லாமல், மற்றவர்களையும் உடல் நலிவடையச் செய்கின்றார்கள் ஏன் இதை உணர மறுக்கிறார்கள்?
மதுரன் said...
//புகைத்தலின் பக்கவிளைவுகளை அழகான முறையில்....//
மது, உங்கள் அன்பான கருத்துப் பகிர்வுக்கு நன்றி
K.s.s.Rajh said...
//வணக்கம் பாஸ் இதுதான் உங்கள் ஸ்பெசாலிட்டி சமூக சிந்தனையுள்ள ஒரு விடயத்தை அழகாக ரசிக்கும் படி சொல்வீர்கள் உங்களிடம் இருந்து அதாவது உங்கள் எழுத்துக்களில் இருந்து எப்படி சுவாரஸ்யமாக சமூக விடயங்களை சொல்லாம்.....//
ரொம்ப ஐஸ் வைக்காதிங்க ராஜ், இங்கு பனிக்காலம்வேறு தொடங்கிவிட்டது ஜலதோசம் குளிர்ஜுரம் என்று அவஸ்த்தைப்படப் போகிறேன்.
காட்டான் said...
//....நல்லதோர் விழிப்புணர்வு பதிவு. ஊர் பரியாரி கசப்பு மருந்தை தேனில கலந்து குடிக்க தருவதை போல இருந்தது.!//
சில சொற்களைக் கேட்கவே இனிமையாக இருக்கும். பரியாரி என்ற வார்த்தை இன்றைய சந்ததியினர் எத்தனை பேரிற்கு புரியுமோ? . நாம் எமது சொல் வளத்தையும் தொலைத்து வருகிறோம். எத்தனை இனிமையான சொற்கள் இப்பொழுது பாவனையில் இல்லாது போய்விட்டது.
காட்டான் said...
//நானும் சின்ன வயசில (இப்பவும் சின்ன வயசுதான்..ஹி ஹி)//
மனதளவில் என்றும் சின்ன வயசுக்காரனாகவே இருப்பது நல்லவிடயம்.
//அப்புச்சியின் கனகலிங்கம் சுறுட்டை எடுத்து பத்தி பார்த்திருக்கேன்.. அத ஒருக்கா கொழுத்திப்போட்டு அனையாம இருக்க பக்கு பக்கன்னு இழுத்தே களைச்சிடுவம்..!!//எப்படித்தான் அந்த மணத்தை சகிச்சியளோ? எனக்கெண்டால் குமட்டிக்கொண்டு வரும்.
வணக்கம் ஐயா, மிகவும் அருமையான பதிவு, எமது ஊர் வாசனை கலந்து புகைப் பிடித்தலை எவ்வாறு ஊரில் தொடங்குகிறார்கள்? எத்தகைய காரணங்களை அதனைத் தொடர்ந்தும் செயற்படுத்துவதற்குச் சொல்கிறார்கள் எனும் விடயங்களை அருமையாக கண் முன்னே கொண்டு வந்ததொடு, புகைப் பிடிப்பதால் ஏற்படும் விளைவுகளையும் தந்து விழிப்புணர்வுப் பகிர்வாகத் தந்திருக்கிறீங்க.
நன்றி ஐயா.
படிப்பினையூட்டும் நல்ல பதிவு.
வணக்கம் நிரூ, விபரமான கருத்துப்பகிர்விற்கு நன்றி.
இணுவையூர் மயூரன்,உங்க வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.
அருமை அருமை!
http://atchaya-krishnalaya.blogspot.com
அருமை நண்பரே
Post a Comment