நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Thursday

கிழக்குத் தீமோர் பிரச்சனையும் அதன் பின்னணியும்

   

                            எங்கோ அடிக்கடி  கேள்விப்பட்ட பெயர்போல் தெரியவில்லையா?
ஆம் பசுபிக் சமுத்திரத்தில் அவுஸ்திரேலியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் காணப்படும் தீவுக்கூட்டங்களில் ஒன்றுதான் இப்பிரச்சனைக்குரிய தீமோராகும். கிட்டத்தட்ட 19,000 சது. கிலோமீற்றர் பரப்பளவையும் 1996 ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 8.5 இலட்சம் மக்களைக் குடிசனங்களாகக் கொண்டதும்தான் இக்குட்டித்தீவாகும். 16வது நூற்றாண்டிலிருந்து போர்த்துக்கீசரின் காலனித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த இவர்கள் 1975 இல் தம்மைச் சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்திக்கொண்டனர். ஆனால் ஒரு வருட காலத்திற்குள்ளாகவே அண்டைச் சண்டியன் இந்தோனேசியாவின் ஆக்கிரமிப்புக்குட்பட்டனர். பாவப்பட்ட இந்த அப்பாவி மக்களுக்கு இவர்கள் நாட்டிலுள்ள இயற்கை வளங்களே எதிராக  அமைந்துவிட்டது. அபரிதமாக உள்ள பெற்றோலிய வளங்களைச் சுரண்டவே மாறிமாறி ஆக்கிரமிப்புக்கு உள்ளாயினர்.                    அண்மைய சரித்திரங்களில் இடம்பெற்ற மிகமோசமான ஆக்கிரமிப்புக்களில் ஒன்றாக கிழக்குத் தீமோர் மீதான இவ்வாக்கிரமிப்பைக் குறிப்பிடலாம். கிட்டத்தட்ட இரண்டுலட்சம் மக்களை அதாவது அன்றைய அவர்கள் சனத்தொகையில் அண்ணளவாக மூன்றிலொரு பகுதினரை இந்தோனேசிய இராணுவம் கொன்று குவித்ததுடன், அவர்களது சொத்துக்ளைத் தரைமட்டமாக்கியும், சூறையாடியும் கொடூரமான ஒரு இனச்சுத்திகரிப்பைச் செய்தது.
            இங்கு வேதனைக்குரிய ஒரு விடயத்தையும் சொல்லவேண்டும். குவைத் மீதான ஈராக்கின் ஆக்கிரமிப்பின்போது குவைத் மக்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டும், தற்போதைய சேர்பியர்களின்  கொசவோ அல்பானியர்மீதான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையிலிருந்து கொசவோ மக்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு யூகோசிலாவியா மீதும் போர்தொடுத்த இதே அமெரிக்காவின் அன்றைய ஜனாதிபதி போர்ட் அவர்களை இந்தோனேசியாவின் அந்நாள் சர்வாதிகாரி  சுகார்ட்டோ சந்தித்து அமெரிக்காவின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்ட ஒருசில மணி நேரங்களிலேயே இவ்வாக்கிரமிப்பு நடைபெற்றது. இந்தநேரத்தில் இந்தோனேசியாவிற்கெதிராக  நடவடிக்கைகள் எடுக்கமுற்பட்ட ஐக்கிய நாடுகள் சபைக்கு முட்டுக்கட்டைகள் போட்டும், இந்தோனேசிய அரசுக்கான இராணுவ உதவிகளை இரட்டிப்பாக்கியும், இராணுவ உபகரணங்களையும், உலங்குவானூர்திகளை விற்பனை செய்தும் அவர்களுக்கு உதவி செய்தது. இதற்குக் கைமாற்றாக அக்கால கட்டத்தில் கியூபா தன் நாட்டிலிருந்த அமெரிக்கச் சுரங்கத் தொழில் நிறுவனங்களைத் தேசியமயப்படுத்தியதால் வங்குறோத்து நிலைக்குச் சென்றிருந்த இந்நிறுவனங்களுக்குத் தீமோரிலுள்ள பெற்றோலிய உற்பத்தி நிலைகளுக்கான ஒப்பந்தங்கள் கிடைக்க வழிவகுத்து அமெரிக்கா மீண்டுமொருதடவை தனது பாணியிலே அமெரிக்க நலன்களைப் பேணிக்கொண்டது.
இதே எண்ணெய் வளங்களிற்காகத் தம்மிடையே முட்டிமோதிக்கொள்ளும் மற்றுமிரு நாடுகளான போர்த்துக்கல்லும் அவுஸ்திரேலியாவும் இதுசம்பந்தமாகத் தம்மிடையே உள்ள பிணக்குகளைத் தீர்த்துக்கொள்ளச் சில வருடங்களிற்கு முன் உலகநீதிமன்றம்வரை சென்றது உங்களிற் பலரிற்கும் ஞாபகம் இருக்கலாம்.
                          இந்தப் பின்னணிகளில்  இந்தோனேசியாவில் ஏற்பட்ட பொருளாதாரச் சீர்குலைவுகளினாலும், அதன் பொருளாதார வளங்களில் ஒன்றான காடுகளில் ஏற்பட்ட பெரும் தீச்சேதங்களினாலும், இக்காலகட்டத்தில் ஏற்பட்ட மாணவர் எழுச்சிப் போராட்டங்களினாலும் இந்தோனேசிய அதிபர் பதவியிறக்கப்பட்டு அவருக்கு அடுத்த இடத்திலிருந்த  ஹபீப் பதவியேற்க வழிவகுத்தது. இது கிழக்குத்தீமோர் மக்களின் போராட்டத்திற்குச் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி  அவர்கள் தமது பகுதியிலும் இந்தோனேசியாவிலும் தமது அமைப்பைப் பலப்படுத்திக்கொள்ள வழிவகுத்ததெனக் கூறலாம்.
ஹபீப் அவர்களும் அரசியல் கைதிகளில் பலரை விடுதலைசெய்தும், தீமோர் மக்களுக்கு அவர்களது உள்நாட்டு விவகாரங்களில் சிறிது சுதந்திரத்தைக்கொடுத்தும் தன்னைச் சுகார்ட்டோவிலிருந்து வேறுபட்டவராகக் காட்டிக்கொள்ள முற்பட்டபோதும் இம்மக்களின் சுயநிர்ணய உரிமையை இவரும் மறுத்தே வந்தது குறிப்பிடத்தக்கது.  அத்துடன் தீமோர் பகுதிகளில் ஆக்கிரமிப்பு இந்தோனேசிய இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டு விசாரணைக்கு அப்பாற்பட்ட இராணுவப் படுகொலைகள், சித்திரவதைகள், மனித உரிமை மீறல்கள் என்பன சாதாரண விடயங்களாயின. ஆயினும் உலக நாடுகள் எதுவுமே இவற்றைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.
                           ஆயினும்  இந்தோனேசியாவுடன்  ஒப்பந்தங்கள் செய்துகொண்டு தீமோர் பிரதேசங்களில் பெற்றோலிய அகழ்வுகளில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலிய நிறுவனங்களுக்கு தீமோரின் ஏனைய பகுதிகளுக்கும் கிழக்குத் தீமோரிற்குமிடையே உள்ள எல்லைப் பிரிவுகளும் இங்குள்ள பதட்டநிலையும் சிரமங்களைக் கொடுத்ததால்  பிரச்சனைக்குரிய இருபகுதியினருக்கிடையேயும் சமரசத்தையேற்படுத்தி இப்பகுதியில் அமைதி நிலையை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.
                   இதனால் அவுஸ்திரேலியா இந்தோனேசியாவிற்குக் கொடுத்த அழுத்தங்களினால் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் கோபி அனானின் தலைமையில் இந்தோனேசியாவும் போர்த்துக்கல்லும் இணைந்து இவ்விடயத்தில் ஒரு சமரச ஒப்பந்தம் செய்துகொண்டதன் மூலம் தீமோர் மக்கள் ஒரு வாக்களிப்பின் மூலம் தமது அரசியல் எதிர்காலத்தைத் தாமே தீர்மானிக்க் கூடிய நிலைமை தோன்றியுள்ளது
                                        நம் நாட்டில் நடைபெறுவதைப்போலவே இங்கும் அரசியல் தீர்வையும் சமாதான ஒப்பந்தத்தையும் இந்தோனேசிய இராணுவத் தலைமையும் விரும்பாது தங்கள் ஆக்கிரமிப்புக் கொள்கைகளில்  விடாப்பிடியாக இருப்பது குறிப்பிடத்தகஇகது.
                       பிரச்சனைக்குரிய தீமோர்ப் பகுதிகளில் இருபகுதியினரிலும் யார் கை ஓங்குகிறதோ  அவர்களுடன் கைகோர்த்துக்கொண்டு தனது வியாபார நலன்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அமெரிக்கா மதில் மேல் பூனையாக மௌனம்காத்து வருகிறது! 
                      இதற்கிடையில் நாற்பதாண்டு காலச் சர்வாதிகார ஆட்சிக்குப்பின் இவ்வாரத்தில் இந்தோனேசியாவில் புதிய அரசுக்கான வாக்களிப்பு நடைபெறவுள்ளது. இதில் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படும் ஹபீப்பின் எதிரணியினர் இப்பிரச்சனையை எவ்வாறு கையாள்வார்களென்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.                                                                                                                                      
இவ்வரசியல் திருகுதாளங்களிற்கெல்லாம் அப்பாற்பட்டு அந்நிய ஆக்கிரமிப்புக்களிலிருந்து முழுமையாக விடுபட்டு தம்மைத்தாமே ஆண்டுகொள்ளவும், தம்மிடையே உள்ள இயற்கை வளங்களின் பலன்களைத் தாமே அனுபவித்தும் அமைதியாக வாழவிரும்பும்  அப்பாவித் தீமோர் மக்களின் எதிர்காலம் என்பது இன்னமும் கேள்விக்குரிய விடயமாகவே  உள்ளது வேதனைதரும் உண்மை நிலை !!

No comments: