நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Tuesday

மரபியல் விஞ்ஞானம் மனிதகுல அழிவிற்கா?

20ம் நூற்றாண்டின் மகத்தான விஞ்ஞான சாதனையாகக் கருதப்படும் இலத்திரனியலின் பாரிய வளர்ச்சி எப்படி தொலைக்காட்சி, தொலைபேசி, கணணி, E.mail, Internet என்று எமது அன்றாட வாழ்க்கையுடன் இரண்டறக்கலந்துவிட்டதோ அதுபோன்று 21ம் நூற்றாண்டில் பிரமிக்கத்தக்க வளர்ச்சியடையப்போகும் மரபியல்விஞ்ஞானத்தின் (Genetic Engineering)
அடிப்படைவிடயங்கள் பற்றி சிறு அறிவையாவது நாம் பெறவேண்டுமல்லவா?
முதலில் மரபியல் என்றால் என்ன என்பதைச் சிறிது ஆராய்ந்தால்... ஒவ்வொரு உயிரிலும் அதன் அக புற இயல்புகளைத் தீர்மானிக்கும் பகுதி எது என்பதைக் கண்டறிந்து அதைப்பற்றிய ஆய்வுகள் செய்யும் தொழில்நுட்பமே மரபியல் விஞ்ஞானமாகும். நீங்கள் கறுப்பா,சிவப்பா? சுருள் முடியா? அல்லது அடிக்கடி வார்த்தைகளாலேயே உங்கள் மனைவியைக் கடித்துக்குதறும் முற்கோபியா? சிறந்த அறிவாளியா? என்பனபோன்ற சகல அம்சங்களையும் தீர்மானிப்பது மரபியலாகும்.
மனித இனத்தின் மரபியல் ரீதியான தகவல்கள் யாவுமே ஆணின் விந்திலுள்ள ஒரு கலம் (cell) பெண்ணின் முட்டையிலுள்ள ஒற்றைக்கலத்தினுள் நுழையும்போதே அதாவது தாய் கர்ப்பமான முதற்க்கணத்திலேயே நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. (இதைத்தான் எம் மூதாதையர் தலையெழுத்தென்று சொன்னார்களோ?) மனித ஸெல்லை நுட்பமாகப் பார்த்தால் அதில் 23 சோடி குரோமசோம்கள் இருக்கின்றன. ஆணின் விந்தும் பெண்ணின் முட்டையும் சேரும்போது உண்டாகும் கருவில், விந்திலுள்ள 23சோடியின் சரிபாதியான 23 குரோமசோம்களும், அதேபோல முட்டையிலுள்ள 23 குரோமசோம்களும் சேர்ந்து 23 புதியசோடி உருவாகிறது. இந்தக் குரோமசோம்களில் உள்ள DNA யில் உள்ள முடிவில்லாத ஏணிப்படிகளில் அக்குழந்தையின் சகல இயல்புகளுமே பதிவாகிவிடுகின்றன. (இதிலுள்ள 23வது கடைசிச்சோடி இருக்கிறதே, அதுதான் குழந்தை ஆணா, பெண்ணா என்று தீர்மானிக்கிறது. . பெண்களில் இக்கடைசிச்சோடி எப்பொழுதுமே X,X என்ற ஒரேவகையாகவும்,ஆணில் X,Y எனப் பெண்ணிலுள்ள X ஐயும் ஆணிற்கே தனித்துவமாகவுள்ள Y ஐயும் கொண்டிருக்கும்.கரு உருவாகும்போது ஆணின் Y யும் பெண்ணின் X உம் இணைந்தால் ஆண் குழந்தையும் , ஆணின் X உம் பெண்ணின் X உம் இணைந்தால் பெண் குழந்தையும் உருவாகும். இதிலிருந்து என்ன குழந்தை என்பது ஆணின் விந்திலுள்ள X M, Y M அக்கணத்தில் தேர்ந்தெடுக்ப்படுகிறது
என்பதைப் பொறுத்தது என்பது புரிகிறதல்லவா!)
எமது பரம்பரையிலுள்ள மூத்தோரின் பல வம்சாவளி இயல்புகளும் செய்திகளாக இவ்வாறாகப் பதிவாகின்றன. இதனால்தான் பரம்பரையாக வரும் பல நோய்களும் (குருதி உறையா நோய், நிறக்குருடு, அஸ்மா, நீரிழிவு, எக்சிமா) பெற்றோருக்கோ,தாத்தா பாட்டிக்கோ இருந்தால் குழந்தைக்கு வர வாய்ப்புக்கள் கூடுதலாகவுள்ளன. அப்படியான தேவையற்ற மரபியற் பண்புகளை நீக்கி ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் காலம் மரபியல் விஞ்ஞானம் வளர்ச்சியடையும்போது ஏற்படலாம். வழுக்கைத்தலை இளைஞர்களுக்கொரு நற்செய்தி : உங்கள் எதிர்கால வாரிசுகள் நீண்டநாட்களிற்கு அடர்த்தியான முடியுடன் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. இம்மரபியல் விஞ்ஞானத்தில் ஏற்கெனவே ஏற்பட்டவளர்ச்சியால் அடிக்கடி தம் வாழ்க்கைத் துணைகளை மாற்றும் மேல் நாட்டுப் பெற்றோர் தம் குழந்தையின் தந்தை யார் என்பதைக்கண்டறிய இன்று இந்த DNA பரிசோதனை வெற்றிகரமாக உதவிசெய்கிறது. இப்படியான கலாச்சாரச்சீரழிவுகள் இன்னும் ஏற்படாததால் இப்பரிசோதனைக்குரிய தேவை எம்மக்களுக்கு இன்னமும் ஏற்படவில்லை. இம்மரபியல் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால்தான் பல குற்றவாளிகள் கூடப்பிடிபட்டிருக்கிறார்கள். அமரிக்காவில் ஒரு கொலைகாரன் நீண்டநாட்களாக யாரெனத் தெரியாமல் காவல்த்துறைக்கே சவாலாக இருந்தவன். ஆனால் கொலை நடந்த இடத்தில் சேகரித்தவற்றிலிருந்து கொலைகாரனின் DNA இப்படித்தானிருக்குமென அறிந்திருந்தனர். மோட்டார்வண்டியில் போகுமொருவன் தெரு ஓரத்தில் எச்சிலைத்துப்பியபோது பின்னால் வந்த ஒரு பொலிஸ்காரன் ஏதோ ஒரு சந்தேகத்தில் அந்த எச்சிலை எடுத்துப்போய் பரிசோதனை செய்ததிலிருந்து கொலைகாரன் பிடிபட்டது பலநாட்களாகச் செய்தியாக அடிபட்டதை நீங்களும் அறிந்திருப்பீர்கள். அதேபோல்தான் O.J. சிம்சனின் வழக்கிலும் நடந்தது. சிம்சனின் முன்னாள் மனைவியும் அவரது காதலரும் கொலையுண்ட இடத்தில்கிடைத்த பல மனித எச்சங்களைச் சேகரித்து சோதனை செய்து பார்த்தார்களல்லவா? இப்பரிசோதனை முடிவுகள் கொலை நடந்த இடத்திற்கு சிம்சன் செல்லவில்லை என நிரூபிக்க உதவின.
அடுத்தகட்டமாக இம்முறைமூலம் மிருக உயிர்க்கலங்களில் தேவையான மாற்றங்களைச் செய்து அவற்றிலிருந்து மனிதருக்குத்தேவையான சிறுநீரகம், இதயம் போன்ற உடலுறுப்புக்களை எடுக்க ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. பன்றியின் இருதயத்தை இப்படிப்பயன்படுத்தலாமா என்பது சம்பந்தமான ஆராய்ச்சிகள் கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக்கழகத்தில் நடைபெறுகின்றன. மரபியல்விஞ்ஞான முறையில் பன்றியின் இருதயத்தைச்சுற்றி ஒருவகைப் புரோட்டீன் படலத்தை உருவாக்க முயற்ச்சிக்கிறார்கள். இதன் மூலம் இம்மிருகத்தின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தும்போது பொருத்தப்படுபவரது உடல் ஒவ்வாத இழையங்களைக்(tissues) கண்டறிந்து மாற்றுஉறுப்பை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்து நிராகரிப்பதைத் தவிர்க்க முடியும் என்று கருதுகிறார்கள். (இம்முயற்சி வெற்றிபெறும்போது "தந்தேன் உனக்கு என் இதயத்தை" என்று காதலிக்குக் கூறும்போது "சீ...உந்தப்பன்றி இதயம் யாருக்கு வேண்டும்." என்ற பதிலைச் சந்திக்கவேண்டிவரலாம்.)
மற்றது உலகிலுள்ள எல்லா இனமக்களுமே உடல் உறுப்புக்களில் இதயத்திற்கு முக்கிய இடத்தைக்கொடுக்கிறோம். ஒருவர் கொடூரமான செயலையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ செய்யும்போது "இவனுக்கு இதயமே இல்லையா?" என்று சொல்கிறோம். "மனச்சாட்சிக்குப் பயப்படாதவனா நீ" என இதயத்தைத் தொட்டுக்காட்டுகிறோம்.எமது சிந்தனைகளைக்கட்டுப்படுத்தும் ஓர் உறுப்பென்ற மாயத்தோற்றத்தை இதயத்திற்கு உலகம்முழுவதுமுள்ள மக்கள் கொடுத்திருக்கும் வேளையில் பன்றியின் இதயம் இருப்பதை எவ்வளவுதூரம் உளவியல்ரீதியாக மக்கள் ஏற்றுக்கொள்வார்களோ தெரியவில்லை. அதோடு மனித உயிரிற்குள்ள அத்தனை வாழ்வியல் உரிமைகளும் இவ்வுலகிலுள்ள மற்றைய உயிரினங்களுக்கும் உண்டல்லவா? மனிதனின் தேவைகளுக்காக இப்படிச்செய்வதை ஏனைய உயிரினங்களை நேசிக்கும் எல்லோருமே கண்டிப்பார்கள். இத்துறையில் அபார வளர்ச்சியேற்படும்போது மனிதக்கலத்திலிருந்து மேம்படுத்தப்பட்ட கலத்தின்மூலமாக உருவாக்கப்பட்ட மிருக இறைச்சி விற்பனைக்கு வரலாம். ஆனால் இது பழமைவாதிகளுக்கு அவர்கள் நரமாமிசத்தையே உண்பதுபோன்ற மனநிலையை ஏற்படுத்தலாமல்லவா?
தாவரங்களில் இவ்விஞ்ஞானம் ஏற்கனவே வெற்றிகரமாக அமைந்ததை
உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள். சில மாதங்களுக்குமுன் இம்முறை
மூலம் சாற்றுத்தன்மை குறைந்த, கெட்டியான, நீண்டநாட்களுக்குக் கெட்டுப்போகாமல் இருக்கக்கூடிய ஒரு தக்காளி இனத்தை அமரிக்காவில் கண்டுபிடித்தார்கள். துருவப்பகுதிகளில் வாழும் மீன் இனங்களில் இரத்தம் கடும் குளிரிலும் எப்படி உறையாமலிருக்கிறதென ஆராய்ந்து, அம்மீன் இனங்களில் சுரக்கும் ஒருவித திரவத்தினால்தான் இது சாத்தியமாகிறதெனக் கண்டறிந்கார்கள். அந்த மரபியல் இயல்பைத் தக்காளி இனத்தில் செலுத்தியே இப்புதிய இனத்தை உருவாக்கினார்கள். இதுபற்றிக்கூட காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன அல்லவா? கடைசியில் இவ்வாறாக மரபியல்ரீதியாக மேம்படுத்தப்பட்ட பொருளொன்று விற்பனைக்கு வரும்போது எத்தகைய மூலக்கலத்திலிருந்து மேம்படுத்தி இப்பொருள் உண்டுபண்ணப்பட்டதென்ற தகவலை அதில் ஒட்டப்படும்label இல் பிரசுரிக்கவேண்டுமென முடிவு செய்யப்பட்டது. இத்துறை வெற்றிகரமாக வளர்ச்சியடையும்போது பெருமழை, கடும்குளிர், வெள்ளப்பெருக்கு, வரட்சி போன்றவற்றை எதிர்த்து வளரக்கூடிய தாவர இனங்கள் விருத்தி செய்யப்பட்டு விவசாயத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படலாமென எதிர்பார்க்கலாம். ஆனால் இயற்கையின் சீற்றங்கள் கூடுகலாகக் காணப்படும் மூன்றாம் உலக நாடுகளில் இவ்விஞ்ஞானவளர்ச்சி எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பது ஆராயப்படவேண்டியது. காரணம் யாதெனில் மேல்நாடுகளில் இப்படியான மரபியல்ரீதியாக மேம்படுத்தப்பட்ட இனங்கள் அறமுகப்படுத்தப்பட்டு வியாபாரரீதியாக விற்பனைக்கு வரும்போது அவர்கள் அதற்கான காப்புரிமையையும் (patent) தம்வசம் வைத்திருக்கக்கூடும். இதனால் பின்தங்கிய நாடுகள் இந்த உரிமங்களுக்காகவும், இது சம்பந்தமான தொழில்நுட்பங்களுக்காகவும் வளர்ச்சியடைந்த நாட்டவரை மேலும் சார்ந்து நிற்கவேண்டி வரக்கூடும்.
"எடின்பரோ" பல்கலைக்கழகத்தில் மரபியல்ரீதியாக மேம்படுத்தப்பட்ட ஓர் ஆட்டை விருத்திசெய்திருக்கிறார்கள். அதற்கு Tracy என்று பெயரும் சூட்டியுள்ளார்கள். அதில் விசேட அம்சம் என்னவெனில் இவ்வாட்டில் சுரக்கும் பாலில் Alpha -I -antitrypsin எனும் புரதத்தையும் சேர்த்துச் சுரக்கச்செய்துள்ளார்கள். இந்தப்பாலை மக்கள் குடிப்பதன் மூலம் மேற்கூறிய புரதக்குறைபாட்டினால் நுரையீரலில் ஏற்படும் emphysema எனும் நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம் எனக்கூறுகிறார்கள்.
அணுவியல் எவ்வாறு எமக்கெல்லாம் ஓர் அச்சுறுத்தலாக இருக்கிறதோ இதேபோல மரபியல் விஞ்ஞானமும் மனிதகுலத்திற்குத் தரும் அனுகூலங்களைவிடப் பாதகமே அதிகமாக இருக்கலாம் போலத்தோன்றுகிறது. அண்மைக்காலங்களில் சோளம்,கிழங்கு,சோயாபீன்ஸ்,ஈஸ்ட்(yeast) எனப் பலவற்றிலும் மரபியல் ரீதியாக மேம்படுத்தப்பட்ட பல இனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்கும் வந்துவிட்டன. இவ்வகையான பொருட்கள் அல்லது அவற்றின் பகுதிகள் சேர்த்துச் செய்யப்பட்ட பல உணவுப்பொருட்களின் பக்கவிளைவாக Toxin எனப்படும் நோய்க்கிருமிகள் உண்டுபண்ணும் நச்சுத்தன்மை காணப்படுவதும் பலபுதிய நோய்கள் உண்டாவதும் கண்டறியப்பட்டுள்ளன. அண்மையில் பிரித்தானியாவில் இப்படியான சோயா கலந்த உணவுப்பொருட்களை உண்டவர்களில் 37 பேர் இறந்ததையும் 1500 பேர்வரையில் தீராத நோய்களுக்கு ஆட்பட்டிருப்பதையும் அறிந்திருப்பீர்கள்.
இத்துறையின் மிகப்பெரிய ஆபத்து யாதெனில் மருத்துவஆய்வுகூடங்களில் ஒரு மருந்துப்பொருள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தபின் அம்மருந்தால் பக்கவிளைவுகள் இருப்பதாக அறியப்பட்டால் அம்மருந்து தடைசெய்யப்படுவதுடன் அதனால்ஏற்படும் பாதிப்புகள் முற்றாகத் தடுக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் மரபியல் மூலம் உண்டுபண்ணப்படும் தாவரத்தால் அல்லது ஒரு உயிரினத்தால் பாதிப்பெனக் கண்டறியப்பட்டாலும் அவ்வினம் எங்கெல்லாம் வளர்கிறதோ அங்கெல்லாம் அதுதன் அடுத்த சந்ததிகளுக்கும் இக்குறைபாட்டை அளித்தபடியே இருக்குமென்பதால் அதன்பாதிப்புக்களை உடனடியாக மட்டுப்படுத்துவது மிகவும்கடினம். அதுமட்டுமன்றி அவ்வுணவுப்பொருட்களினால் ஏற்படக்கூடிய பாதகமான பக்கவிளைவுகளில் சில நீண்டகாலப்பாவனைக்குப் பின்பே தெரியக்கூடுமாதலால் இவைபற்றியவிபரங்களை தற்போதே ஆராயமுடியாமல் உள்ளது.
Business giants எனப்படும் பல்தேசிய உணவு நிறுவனங்கள் தமது தொழிற்போட்டிகளிற்கும் பணவேட்டைக்கும் சரியாக ஆய்வு செய்யப்படாத இப்படியான பல உணவுப்பொருட்களைச் சந்தைப்படுத்தப் போட்டிபோடுகின்றன. இவர்களின் இக்கோரப்பிடியில்ச் சிக்கி முழுமனிதகுலமுமே அநியாயமாகச் சிறிது சிறிதாக அழியப்போகிறதோ என்ற அச்சம் தோன்றுகிறது. இவ்வாறான பொருட்கள்தொடர்பான மருத்துவரீதியான நீண்ட ஆய்வுகளும் சிறந்த தரக்கட்டுப்பாடுகளும் சகலநாட்டு அரசுகளாலும் ஏற்படுத்தப்படும் வரையிலாவது நாம்மிக அவதானமாக இருக்கவேண்டும். அடுத்த தடவை நீங்கள் உணவுப்பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது லேபிளில்(Label) எழுதப்பட்டுள்ள அவற்றின் மூலப்பொருட்கள் சம்பந்தமான விபரங்களை ஆழ்ந்து படியுங்கள்.

No comments: