தனது நலன்களுக்காக அமெரிக்கா எதையும் செய்யும் என்பதற்கு இப்பொழுது சிரியாவில் இடம்பெறும் நிகழ்வுகளும் மற்றும் ஒரு உதாரணம். சிரிய அரசுக்கு எதிராக அண்மையில் இடம்பெற்றுவரும் கிளர்ச்சிக்கு அல்கைத்தா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவும் சிரிய கிளர்ச்சிக்காரர்களை ஆதரிக்கிறது.
அமெரிக்காவிற்கும் ஒன்றுபட்ட சோவியத்யூனியனுக்கும் எதிரான பனிப்போர் நிகழ்ந்த காலகட்டத்தில் சோவியத்யூனியனிற்கு எதிராக அமெரிக்காவினால் ஆப்கானிஸ்தானில் உருவாக்கி வளர்க்கப்பட்டதுதான் அல்கைத்தா. ஆனால் பின்பு வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக அல்கைடா அமெரிக்காவின் Nr. 1 எதிரியாக மாறி ஒசாமா பின்லாடனை பாகிஸ்தானில் வைத்து அமெரிக்கா கொலை செய்ததுவரை இந்தக்கதை நீண்டது.
தற்பொழுது காட்சிகள் மீண்டும் மாறுகிறது. அமெரிக்காவிற்கு அல்கைதாவுடனான ஊடல் முடிந்து கூடலுக்கான காலம் தொடங்குகிறதா? அமெரிக்காவின் பல நடவடிக்கைகளினால் மத்திய கிழக்கு நாட்டவர்கள் மத்தியில் அதன் பெயர் கெட்டுப்போய் கிடக்கிறது. ஆனால் மத்திய கிழக்கு பிரதேசத்தில் அமெரிக்கா தனக்கு சாதகமான இன்னும் பல வேலைத்திட்டங்களை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. அரபுலகில் தனக்கு தேவையானதை சாதித்துக்கொள்ளவும் வேண்டும், தனது பெயரும் கெட்டுவிடக்கூடாது. இதற்கு சரியான வழி அல்கைடாவை முன்னிலைப்படுத்தி முதலில் தனக்கு தேவையானதை சாதித்து கொள்வது. காரியம் ஆகிய பின் மீண்டும் பயங்கர வாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்ற போர்வையில் அல்கைத்தாவை நசுக்கலாம் என்பதுதான் அமெரிக்காவின் தற்போதைய வியூகம் போல தெரிகிறது.
வரலாறுகளை எடுத்து பார்த்தால் முதலாளித்துவமும் மத அடிப்படை வாதமும் புருசன் பெண்டாட்டி போன்றவை. ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டாலும் இவர்களிடையே ஒற்றுமை இருக்கும்.
முதலாளித்துவமும் மத அடிப்படைவாதமும் மக்களை முட்டாள்கள் ஆக்கி தமது இருப்புக்களையும் நலன்களையும் பாதுகாத்துக்கொள்ள ஒன்றுடன் ஒன்று கைகோர்த்துக்கொள்ளும். முதலாளித்துவத்தின் இருப்பிற்கு மதங்களின் இருப்பு மிக அத்தியாவசியமானது. முதலாளித்துவத்தினால் சுரண்டப்படும் ஏழை தொழிலாளர்களிற்கு "நீங்கள் அனுபவிக்கும் கஸ்டங்களுகு எல்லாம் காரணம் நாங்கள் அல்ல! நீங்கள் செய்த முன்வினை பயன்கள்தான்." என்று கூறி மத நம்பிக்கைகளின் பக்கம் கை காட்டிவிட்டு தம்மீது ஏழை மக்களிற்கு ஏற்படும் எதிர்ப்புகளை மழுங்கடிக்க மதக்கோட்பாடுகளை தமக்கு ஏற்ப உருவாக்கியதே முதலாளித்துவம்தான்.
எவ்வளவுதான் எண்ணை வளம் இருந்தாலும் அதன்மூலமான நன்மைகளையும் பணத்தையும், ஒரு சில அரபு அரச குடும்பங்களும், மேற்குலகின் கைப்பாவைகளான அரச அதிபர்களும் பணக்கார சேட்டுக்களும்தான் அனுபவிக்கிறார்கள். இவர்கள்தான் இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை ஊக்குவித்து வளர்த்துக்கொண்டும் இருக்கிறார்கள்.
சாதாரண அரபு மக்களும் மிகவும் மோசமான முறையில் சுரண்டப்பட்டுவருகிறார்கள்.
அரபு உலகில் அவ்வப்போது இடம்பெறும் சிறு புரட்சிகளுடன்கூடிய ஆட்சி மாற்றங்களும்கூட கொதிக்கிற எண்ணையால் குதித்து நெருப்பிற்குள் விழுந்த கதையாக ஒரு சர்வாதிகாரியிடம் இருந்து மற்ற ஒரு சுரண்டல்காரரிடம் ஆட்சி கைமாறுவதாகவே இருந்து வருகிறது. உலகு எங்கும் அப்பாவி மக்கள் இன, மொழி, மத வேறுபாடின்றி சுரண்டப்படுகிறார்கள் புரிந்துகொள்ளுங்கள்.
சுரண்டப்படும் அப்பாவி அரபு மக்கள் தமது இந்நிலைக்கான காரணங்களையும், அதற்கு காரணமானவர்களையும் சரியாக அறிந்து இவற்றிற்கு எல்லாம் எதிராக ஒன்றிணைந்து போராடினால்தான் அவர்களுக்கான உண்மையான சுதந்திரம் கிடைக்கும். தமது நாடுகளில் உள்ள வளங்களின் பலனை அந்த மக்கள் அனுபவிக்க முடியும். சுரண்டப்படும் அந்த மக்கள் சிந்திப்பார்களா? அல்லது எதிரிகளை இனங்காணமுடியாமல் தமது எதிரிகளின் வேலைத்திட்டங்களுக்கு ஏற்ப செயற்பட்டு தமது தலையில் தாமே மண்ணை வாரி இறைத்துக்கொள்வார்களா?
நேசமுடன் அம்பலத்தார்.
18 comments:
வணக்கம் அம்பலத்தார்!
ஆமைபூகுந்த வீடு உருப்பட்டதா சரித்திரம் இல்லை அதே போல்தான் அமெரிக்கா. தன் நலனுக்காக போடும் வேசங்களையும் அரபுலகம் விடிவில்லாமல் சுரண்டல்காரரிடம் சுருண்டு போய்க் கிடக்கின்றது மக்கள் சிந்தனை தெளிவு பெற்றால்தான் சாமாணியர் பொருளாதார மீட்சி பெறலாம்.
சர்வதேச நிகழ்வுகளைத் தாங்கி வந்து சிந்திக்க வைக்கும் பதிவு.
சரியாக சொன்னீர்கள் ஐயா
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கம் எப்போதுமே வளர்ந்துவரும் நாடுகளின் வளங்களை சுரண்டுவதே! எண்ணெய் வளத்தை மையப்படுத்தி அரபு நாடுகளின் மீதும் திருகோணமலை துறைமுகத்தை மையப்படுத்தி இலங்கையிலும் அதன் செயற்பாடுகள் அமைந்திருக்கிறது....
மக்கள் தெளிவுபெற வேண்டும்..
அண்ணர் மிக அருமையான அலசல்!
நீங்கள் முதலாளித்துவத்துக்கு எதிரானவரா?
நான் முதலாளித்துவத்துக்கு ஆதரவானவன்! எனக்கு அது ரொம்ப ரொம்ப பிடிக்கும்! முதலாளித்துவத்தில் மனிதாபிமானம் இல்லை என்று சிலர் சொல்கிறார்கள்!
ஆனால் அது உண்மை கிடையாது!
முதலாளித்துவத்திலும் அன்பும் கருணையும் இருக்கு! ஆனால் அது வெளிப்படும் இடமாக, இன்னொரு முதலாளித்துவமே இருக்கிறது!
அமெரிக்க காரரின் அடாவடிக்கு ஒரு அளவே இல்ல போல!
இவங்க தலைவலி எப்போது முடியுமோ! ஒரு நாட்டிலே போர் முடிந்து சின்னாபின்னமாக்கி , அடுத்த நாட்டை குறி வைக்கும் அரக்கர்கள். அவர்கள் நாட்டில் எலக்ஷன் வந்தால் பிறருக்கு ஆபத்து.
கொட்டம் எப்போது அடங்குமோ!
உங்கள் ஆதங்கள் புரிகிறது..ஏதாவது நல்லது நடந்தால் சரி அம்பலத்தாரே...
"அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா"
வணக்கம் தனிமரம் நேசன், உங்கள் கருத்துப் பகிர்விற்கும் வாழ்த்துக்களிற்கும் நன்றிகள்.
மதுரன் said...
//அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கம் எப்போதுமே வளர்ந்துவரும் நாடுகளின் வளங்களை சுரண்டுவதே! எண்ணெய் வளத்தை மையப்படுத்தி அரபு நாடுகளின் மீதும் திருகோணமலை துறைமுகத்தை மையப்படுத்தி இலங்கையிலும் அதன் செயற்பாடுகள் அமைந்திருக்கிறது....//
ஆமா மது, அமெரிக்கா மட்டுமன்றி மேற்குலக நாடுகள், சீனா, இந்தியா... என பல நாடுகளின் நலன்களுக்காகவும் இலங்கை அழிந்துகொண்டிருக்கிறது.
ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
//அண்ணர் மிக அருமையான அலசல்!// Thanks மணி
//நீங்கள் முதலாளித்துவத்துக்கு எதிரானவரா?//
இல்லை மணி, மனித நேயத்திற்கு எதிரான எல்லாவற்றுக்கும் எதிரானவன்.
//நான் முதலாளித்துவத்துக்கு ஆதரவானவன்! எனக்கு அது ரொம்ப ரொம்ப பிடிக்கும்! முதலாளித்துவத்தில் மனிதாபிமானம் இல்லை என்று சிலர் சொல்கிறார்கள்!
ஆனால் அது உண்மை கிடையாது!
முதலாளித்துவத்திலும் அன்பும் கருணையும் இருக்கு! ஆனால் அது வெளிப்படும் இடமாக, இன்னொரு முதலாளித்துவமே இருக்கிறது!//
ஹா ஹா மணி நானும்கூட சிறுதொழில் செய்யும் ஒரு சிறு முதலாளிதான்....
KANA VARO said...
//அமெரிக்க காரரின் அடாவடிக்கு ஒரு அளவே இல்ல போல!//
ஆசைக்கு எல்லைகள் ஏது?
Vetrimagal said...
//அவர்கள் நாட்டில் எலக்ஷன் வந்தால் பிறருக்கு ஆபத்து.//
ஆமா கிளின்டனைத்தவிர ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதியின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு போர் இருக்கும்
ரெவரி உங்க வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி.
Blogger பராசக்தி said...
// "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா"//
வணக்கம் பராசக்தி, எல்லோருமே இது சகஜம் என்று சொல்லிவிட்டு பேசாமல் இருந்தால் இதற்கு முடிவுதான் என்ன?
மன்னிக்கவும் அம்பலத்தார், மனதை நோகடிக்கும் எண்ணத்தில் சொல்லவரவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகில் சமாதானத்தைத் தொடர்வதில் ஈடுபட்டுள்ளது என்று தமுக்கடித்தாலும் உள்ளுக்குள் என்னமோ உலகளாவிய அளவில் அடக்குமுறையும் பயங்கரவாதமும்
கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது எல்லோருக்கும் தெரிந்த விடயம். நிற்க மக்கள் புரட்சி எழவேண்டுமாயின், முதலில் அமெரிக்க மக்களுக்கு அரசியல் பற்றிய அறிவு சுத்தமாக கிடையாது. தமது நாடு பற்றியே தெளிவு கிடைக்காதவர்கள் எவ்விதம் உலக அரங்கில் அமெரிக்க ஏகாதிபத்திய தலைமைகள் செய்யும் அத்துமீறல்கள் சூறையாடல்கள் பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில், முதலாளித்துவத்தினால் சுரண்டப்படுதல் போன்ற விடயங்களை தெரிந்துகொள்வார்கள்? தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நாம் பிறந்தது முதற் கொண்டு அரசியல் எமது வாழ்வின் ஒரு தவிர்க்க முடியாத அளவில் ஊறிப்போன விடயம். அதுவே உலக அரசியலையும் ஊன்றிக்கவனிக்க எம்மை தூண்டியது. இதுவே அமெரிக்காவில் மக்கள் புரட்ச்சி அல்லது சிந்தனை தெளிவு பெறுவது............
பராசக்தி said...
//மன்னிக்கவும் அம்பலத்தார், மனதை நோகடிக்கும் எண்ணத்தில் சொல்லவரவில்லை.//
பரா, தனிப்பட்ட பராசக்தியிலோ அல்லது வேறெவர்மீதோ எனக்கு கோபமில்லை. விபரம் தெரிந்தவர்களும் தமக்கு எதற்கு வம்பு என்று ஒதுங்கிக்கொள்வதையும், இதுதான் வாழ்வு என்று எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையையும்தான் நான் வெறுக்கிறேன்.
சே அன்று எதற்கு வம்பு என நினைத்திருந்தால் கியூப புரட்சி மலர்ந்திருக்குமா? லெனினும், மோவோ சே துங்கும் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று பேசாமல் இருந்திருந்தால்......... சிங்கப்பூரின் Lee Kuan Yew ஏழை சிங்கப்பூரை சொர்க்கபூமியாக மாற்றமுடியாது என வாய்மூடி இருந்திருந்தால்....... இவர்கள் எல்லோரும் தங்களால் இவ்வாறு மகத்தான மாற்றங்களை நிகழ்த்தமுடியுமென நினைத்துக்கொண்டா போராடத்தொடங்கினார்கள். எங்கோ எதோ ஒரு சிறு தீப்பொறிதான் பெரும் தீயாகும். வாழ்நாள் பூராவும் போராடியும் எங்களால் வெற்றிகொள்ளமுடியாமல் போகலாம். ஆனால் எமக்குபின்னும் எமது கொள்கைகளை முன் எடுத்துச்செல்ல ஒருசிலரை உருவாக்கிவிடுவதே ஒரு வெற்றிதான். ஒவ்வொருவரும் ஒரு அடி முன் எடுத்து வைத்தால் நிச்சயமாக எங்களாலும் சாதிக்கமுடியும்.
உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்,மாற்றங்கள் விரைவில் வேண்டும்,சிங்கப்பூர் உருவான விதம், அங்கு வாழ்ந்த காலங்களில் நாம் ஆச்சரியப்பட்டவை. அதே ஆச்சரியம் ஏன் பூலோகம் முழுதும் ஏற்படலாமே என ஆதங்கப்பட்ட நாட்கள் அவை.
Post a Comment